அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
3 Oct 2026, 11:44 pm

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அமிலம் ஆகும் ஆர்க்டிக் கடல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஆர்க்டிக் கடல் மற்ற கடல்களை விட நான்கு மடங்கு அதிகமாக அமிலமாகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பனிப்பாறைகள் மும்மடங்கு அதிகமாக உருகுவதால் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் வேகத்தை இது அதிகரித்துள்ளது. இதனால் கடல் சமநிலை வேகமாக மாற்றமடைந்துவருகிறது. ஆர்க்டிக் கடல் வாழ்வை இது பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பனி உருகுதலும் அமிலமாதலும்

புவி வெப்ப உயர்வால் பனிப்பாறைகள் முன்பு எப்போதையும் விட இப்போது ஆர்க்டிக்கில் அதிக அளவில் உருகுகின்றன. ஆர்க்டிக் கடல்நீர் அமிலமடையும் இந்த நிகழ்வு ‘ஆர்க்டிக் ஆம்ப்ளிபிகேஷன்’ (Arctic Amplification) என்று அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடின் மூன்றில் ஒரு பங்கை கடல்களே உறிஞ்சுகின்றன. மனிதனின் புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாட்டினால் இது நிகழ்கிறது.

சீனாவின் ஜைமை பல்கலைக்கழக துருவ மற்றும் கடல்சார் பிரிவு ஆய்வாளர்கள், அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழக கடலியல் பள்ளியுடன் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தினர். பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் கடல்நீரின் காரத்தன்மை விகிதம் குறைகிறது. இதனால் நீர் அதிக அமிலமடையும் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் ஆற்றலை இழக்கிறது.

கடல்சார் உயிரின வாழ்வு

இந்த மாற்றங்கள் ஆர்க்டிக் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கப்போவது என்பது பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பவளப்பாறைகளின் நலத்தை கடலின் அமிலத்தன்மை பாதிப்பது போல இதனால் ஆர்க்டிக் உயிரினங்களுக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். கடல்நீரில் கலந்திருக்கும் சில உலோகங்களை இது கூடுதல் நச்சுத்தன்மை உடையதாக்குகிறது. வசதிக்காக மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் எத்தனையெத்தனை அப்பாவி உயிரினங்கள் அழியக் காரணமாகிறது? ஆர்க்டிக் என்னும் பனிக்கடல் இருப்பதும் இல்லாமல் போவதும் நம் கையில்தான் இருக்கிறது.

எலிகளைப் பிடித்து சூழல் காத்த செபி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

எலிகள் எழுப்பும் ஓசைகள் ஒருகாலத்தில் செபியின் அசைந்தாடும் காதுகளில் முழங்கிக்கொண்டேயிருக்கும். காற்றில் தவழ்ந்து வந்த அந்தச் சத்தங்களைக் கேட்டவுடன் செபி லார்டு ஹௌ தீவை ரோந்து வந்து தீவின் வண்ணமயமான கடற்கரைகள், எரிமலைச் சிகரங்களில் ஏறியும் எலிகளைத் தேடும்.

துப்பறியும் பணியில் செபி

தொடர்ச்சியாக எட்டாண்டுகள் எலி பிடித்து அயராமல் சேவை செய்த அந்த ஸ்பிரிங்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த நாய் சமீபத்தில் ஓய்வுபெற்றது. தீவின் சூழலைப் பாதுகாப்பதில் அதன் சேவை ஒரு நினைவுச்சின்னமாக இன்றும் போற்றப்படுகிறது. “அதன் தலைமைப் பண்புத் திறன், மற்ற விலங்குகளை துப்பறியும் பணியில் பயிற்றுவித்தல் போன்றவற்றிற்காக இன்றும் அது பெரிதும் மதிக்கப்படுகிறது” என்று தீவின் உயிர்ப்பன்மயத் தன்மைப் பாதுகாப்புப் பிரிவில் நாய்களைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள டிம் சாலமன் கூறுகிறார்.

சிட்னிக்கு வடகிழக்கில் 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தீவு உயிர்ப்பன்முகத் தன்மை செழுமை மிகுந்தது. உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றான இங்கு, அழியும் ஆபத்தில் உள்ள குச்சிப்பூச்சி போன்ற இருநூறிற்கும் மேற்பட்ட பல அரிய உயிரினங்கள் வாழ்ந்துவந்தன. ஆனால் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கப்பல்கள் மூலம் இங்கு நுழைந்த எலிகள் போன்ற கொறிக்கும் பிராணிகளால் இந்த அரிய உயிரினங்கள் அழிக்கப்பட்டன.

மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கை

செபி போன்ற துப்பறியும் நாய்களின் சேவைகள் ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றும் முயற்சியில் மையமாக இருந்தது. நாய்களின் அயராத கண்காணிப்புப் பணிகள் காரணமாக வுட்ஹென், கரவங் போன்ற உள்ளூர் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின.

செபியின் திறன்கள் இப்போது தீவில் உள்ள தில்லி, சுட்டி மற்றும் வில்லோ ஆகிய மூன்று நாய்கள் அடங்கிய புதிய துப்பறியும் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் செபிக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும்! செபி இப்போது சிட்னியில் தனது ஓய்வான வாழ்வை மகிழ்ச்சியுடனும் பொழுதுபோக்குகளுடன் விளையாடி வாழ்ந்து வருகிறது.