திருச்சி விரைவு செய்திகள்
17 Mar 2026, 3:26 pm

தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தகுதியான துணைவேந்தரை நியமித்திடுக! ஜூன் மாதம் முதல் போராட்டம் நடத்த திட்டம்

தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை க்கழகத்திற்கு உடனடியாக தகுதியான துணைவேந்தர் மற்றும் பதிவாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை, தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது பல ஆண்டுகளாகத் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. தகுதியான பதிவாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. முன்பு நாடகத் துறை மற்றும் பதிப்பகத் துறை போன்றவை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தற்போது பதிப்பகம் மூடப்பட்டு, ஆய்வுப் பணிகள் பெருமளவு குறைந்துள்ளன. பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள், தற்போது வீடு விற்பனை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை போன்ற பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு, தற்போது பல்கலைக் கழகத்தின் வசம் மிகக் குறைந்த அளவே நிலம் உள்ளது. உயர்கல்வித் துறையின் கீழ் இருக்க வேண்டிய இந்தப் பல்கலைக்கழகம், தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் உள்ளது. இதை உயர்கல்வித்துறையின் கீழ் இணைத்து உரிய நிதியை அளிக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க “தமிழ்ப் பல்கலைக்கழகப் காப்பு இயக்கம்’’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த காப்பு இயக்கம் சார்பில், உடனடியாக, தகுதியான துணைவேந்தர் மற்றும் பதிவாளரை நியமிக்க வேண்டும். பல்கலைக் கழகத்தை மீண்டும் உயர்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். முன்பு வழங்கப்பட்ட ராஜராஜன் விருது போன்ற கௌரவங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்டோ கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் முதல், தொடர் போராட்டங்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சிஐடியு அலுவலகத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர். அய்யப்பன் தலைமை வகித்தார். இரா. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளராக தேவேந்திரன், தலைவராக ஆரோக்கியதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 2,55,465 வாக்காளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

பாபநாசம் மார்ச் 17 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 219 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 223 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 2 லட்சத்து 55 ஆயிரத்து 465 வாக்காளர்கள் உள்ளனர். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்கள் 168 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பணிக்கு 2 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என காலை, மாலை, இரவு என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் தியாகசமுத்திரம், கணபதி அக்ரஹாரம், சூலமங்கலம், பள்ளியூர், தளவாய்பாளையம், அம்மாபேட்டை ஆகிய 6 ஊர்களில் உள்ள 14 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு, அங்கு நுண் பார்வையாளர்கள், துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 18 வயது முதல் 19 வயது வரை 5,011 புதிய வாக்காளர்களும், நூறு வயதைக் கடந்த 13 பேரும் உள்ளனர்’’ என்றார். தாசில்தார் சந்தனவேல், தேர்தல் துணை வட்டாட்சியர் ராகவேந்திர மூர்த்தி பிரவீன், வட்ட வழங்கல் அலுவலர் அகத்தியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முறையான ஆவணம் இல்லாத பணம் பறிமுதல்

பாபநாசம், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இரும்பு தலையில், பறக்கும் படை குழு 3 பிரிவு 2 விதைச் சான்று அலுவலர் மகேஸ்வரி தலைமையில், காவல்து றையினர் வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரத்த நாட்டிலிருந்து - கும்ப கோணம் நோக்கிச் சென்ற பொலிரோ பிக் அப் வண்டியில் இருந்த கண்ணந்தங்குடி மேலை யூரைச் சேர்ந்த இளவரசனிடம் முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2,73,500-ஐ பறிமுதல் செய்து பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ரவிச்சந்தி ரனிடம் ஒப்படைத்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த புத்தூரில், ஊராட்சியைச் சேர்ந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தின் துணைத் தலைவர், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் அன்புமணி மற்றும் பாபநாசம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத் திறனாளிகள், சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை பெறுதல், உதவித்தொகை பெறுதல், நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை பெறுதல், மருத்துவம் மற்றும் தொடர் சிகிச்சை பெறுதல், கல்வி, வேலைவாய்ப்பு பெறுதல், பேருந்து, ரயில் பயண சலுகை அட்டை பெறுதல், சமூக நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுதல், மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தில் உறுப்பினராக இணைவது குறித்தும், மாற்றுத் திறனாளிகளின் சந்தேகங்களுக்கு ஓய்வுபெற்ற வட்டாட்சியர் அன்புமணி மற்றும் நிர்வாகிகள் பதில் அளித்தனர். இதில் புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சதீஷ் உட்பட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜராஜன் நன்றி கூறினார்.

மீன்பிடி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் சங்க சிறப்பு பேரவை

மயிலாடுதுறை, மார்ச் 17- மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடி தொழிலாளிகள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின்(சிஐடியு) சிறப்பு பேரவை கூட்டங்கள், மயிலாடுதுறை மற்றும் பழையார் பகுதிகளில் நடைபெற்றன. இப்பேரவையில், மீன் விற்பனையாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம், சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டதன் விளைவாக, கூட்டத்தில் பயனாளிகளுக்கு, மீன்பிடி சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினர். சங்கத்தின் தலைவர் வள்ளல், செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜனகர் பூபதி, அசோக், தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரவைக் கூட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் தொடர்பான தங்கள் புகாரை பதிவு செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 17- தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க ப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 177. பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) டி. கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை தொலைபேசி 04373 232456 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் புகார்களை இணையவழியில் தெரிவித்திடும் பொருட்டு கைப்பேசியில் Play Store மூலம் cVigil App - ஐ பதிவிறக்கம் செய்தோ, http:// elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், http://eclinet.eci.gov.in/, http://encore.eci.gov.in/Permission Portal, http://cvigil.eci.gov.in/Complaint Portal Mobile App (Public Portal), http://suvidha.eci.gov.in/Public ஆகிய இணையசள முகவரியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான தங்கள் புகாரினை பதிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சை அருகே, வீட்டு முன்பக்க கதவு பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விளார்ரோடு காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் திப்பு சுல்தான் (31). இவர் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயினப் பேகம் (29). இவர் காயிதேமில்லத் நகரில் தனது 7 வயது குழந்தை மற்றும் அப்பா, அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் 16 ஆம் தேதி இரவு தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தொழுகைக்காக ஜெயினப் பேகம் குடும்பத்தினருடன் சென்றார். இரவு அங்கேயே தங்கியிருந்த அவர், செவ்வாய்க்கிழமை காலை காயிதேமில்லத் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும், பீரோ லாக்கரில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, தாலுகா காவல்துறைக்கு ஜெயினப்பேகம் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர வாகன சோதனை: திருவெறும்பூரில் ரூ.2.59 லட்சம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 17- தமிழகத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் தேதி மார்ச் 15 அன்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ரூ.50 ஆயிரத்துக்கு மேல், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், செவ்வாயன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படைப் பிரிவைச் சேர்ந்த சுதர்சன் தலைமையிலான குழு அதிகாலை அசூர் கட் ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், மாதவிளாயம், கண்ணன்புதூர் என்ற முகவரியை சேர்ந்த ஜெனிஷ் என்பவரிடமிருந்து ரூ.59 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதேபோன்று திருவெறும்பூர் பறக்கும்படை பி பிரிவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரின் தலைமையிலான குழு, பெரிய சூரியூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில், திருவெறும்பூர் வட்டம் காட்டூர் மஞ்சத்திடல் பிரியங்கா நகர் விஸ்தரிப்பு, எண் 1, மஹாலக்ஷ்மி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காரில் இருந்து ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது. பின்னர் மேற்கண்ட இரு வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட தொகையினை திருவெறும்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைத்தனர்.

தீவிர வாகனச் சோதனை: தஞ்சையில் ரூ.1.85 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா், மார்ச் 17- தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 72 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. அதன்படி, தஞ்சை கீழவாசல் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர், அலுவலர்கள் தீவிர வாகனச் சோதனை நடத்தினர். ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்து அனுப்பி வைத்தனர். அப்போது வந்த ஒரு மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 590 ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, லாரியை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து வந்ததும், பொருட்கள் விற்பனை செய்ததற்காக கிடைக்கப்பட்ட பணத்தை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இருந்தாலும் அவரிடம் அதற்கான உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அலுவலர்கள் ரூ.1.15 லட்சத்தை பரிந்துரை செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதேபோல், தஞ்சையில் வேறொரு இடத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

மயிலாடுதுறை, மார்ச் 17 - மயிலாடுதுறை மாவட்டம் பொறை யாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பாரம்பரியமிக்க ஒரு கல்லூரியில், மாணவி ஒருவரிடம், பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் 2 மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில், கூட்டுறவு துறைத் தலைவராக பணியாற்றும் சீர்காழியைச் சேர்ந்த ராபின்சன் என்ற பேராசிரியர், தனது துறை மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெற்று மீண்டும் படிப்பைத் தொடர கல்லூரிக்கு வர விருப்பமில்லாமல் இருந்துள்ளார். பின்னர், ஆசிரியரே தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததன் பேரில் நிர்வாகத்தினர் கண்காணிப்புக் குழு அமைத்து, விசாரணை மேற்க்கொண்டு சம்பந்தப்பட்ட பேராசிரியரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது, இதுவரை முறையான நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறை உடனடியாக குற்றத்தில் ஈடுப்பட்ட பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு, கல்லூரியில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் தகுதியானவர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.