திருச்சி விரைவு செய்திகள்
31 Mar 2026, 4:50 pm

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்.23 இல் நடைபெறுகிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும், தேர்தல் நடத்தை விதிகளை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (Returning Officer) (படிவம்-1) அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலம் மார்ச் 30 (திங்கள்) முதல் ஏப்.6 (திங்கள்) வரை நடைபெறும். வேட்பாளர்கள் அரசு அலுவலக வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் திருவிடைமருதூர் (தனி) தொகு திக்கு வட்டாட்சியர் அலுவலகம், திருவிடைமருதூர். கும்பகோணம் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கும்பகோணம். பாபநாசம் தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், பாபநாசம். திருவையாறு தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், திருவையாறு. தஞ்சாவூர் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தஞ்சாவூர். ஒரத்தநாடு தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோட்டை. பேராவூரணி தொகுதிக்கு வட்டாட்சியர் அலுவலகம், பேராவூரணி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏப்.7 (செவ்வாய்) அன்று காலை 11 மணி முதல், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பரிசீலிக்கப்படும். வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்.9 (வியாழன்) ஆகும். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 (வியாழன்) அன்று நடைபெறும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 ஆகியவற்றின் விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்பு(படிவம்-1) தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், மார்ச் 31- தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில், காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட விருப்பம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள், அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது exweltnj@tn.gov.in என்ற இணையதள முகவரியில் அனுப்பியோ பதிவு செய்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

பாஜக-அதிமுக கூட்டணியை புறக்கணிக்க தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு

தஞ்சாவூர், மார்ச் 31- விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக-அதிமுக கூட்டணியை தமிழகத்தில் புறக்கணிப்பது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் அவரச ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூரில், செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் வீரப்பன், மாநில பொதுச் செயலாளர் என். செந்தில்குமார், தஞ்சாவூர் மாநகரத் தலைவர் காமராஜ், திருவாரூர் மாவட்ட தலைவர் என்.சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. புதிய விதைத்திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியை புறக்கணித்து, திமுக கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நிகழ்ச்சி

தஞ்சாவூர், மார்ச் 31- தஞ்சையில், 600 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா மார்ச் 9 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திங்கள்கிழமை கோடியம்மன் கோவிலிலுள்ள 2 காளி உருவங்களையும், மேலராஜவீதிக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. மேலராஜவீதியில் உள்ள சங்கரநாராயணன் கோவிலில் இருந்து பச்சைக்காளியும், கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளிகள் வீதிஉலா புறப்பாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. பச்சைக்காளி, பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், மேலவீதி காளியாட்ட உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

எரிவாயு சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் திருச்சி டீ ஸ்டால் உரிமையாளர்கள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 31- தமிழ்நாடு டீ ஸ்டால் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அமைப்புச் செயலாளர் ராவுத்தர் ஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் அப்துல் ஹாசன், பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா கூறுகையில், “சிலிண்டர் விலை குறித்து, வியாபாரிகளின் கோரிக்கையும், தொழிலாளர்களின் அவஸ்தைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் கமர்சியல் சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ.1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5,200-க்கு விற்கப்படுகிறது. மேலும் சாதாரண டீ வியாபாரிகள் ரூ.5,200 கொடுத்து, கேஸ் சிலிண்டர் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து முதலீடு பார்க்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதிபதிகளும் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். இதற்கு சரியான முடிவு எடுக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

கும்பகோணம்: 100 டிகிரி வெயில்

கும்பகோணம், மார்ச் 31- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வெயில் 100.4 டிகிரி வரை கொளுத்தியது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகு வாக குறைந்து காணப்ப ட்டது. குளிர்பான கடைகள், பழக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்தனர். தொலை தூரம் பயணம் செய்தவர்கள் சாலையில் ஏற்பட்ட அனல் காற்றால் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதியடைந்தனர். கும்பகோணம் மாந கராட்சியில் சாலையில் வெப்பம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து போலீசார் செய்வதறியாமல் பெரிய சுவர்களின் ஓரங்களில் நின்று பணியில் ஈடுபட்டனர். இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதால் வீடுகளில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.