ஆந்திர உள்ளாட்சித் தேர்தல்: சிபிஎம் வாக்கு சதவிகிதம் 8.2% ஆக உயர்வு
5 hours before

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சிபிஎம் தனது வாக்கு சதவீதத்தையும் அதிகரித்துள்ளதாக கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கூட்டணியினரின் அச்சுறுத்தல்கள், தேர்தல் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் மீறி, உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் வி.ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், விசாகப்பட்டினம், விஜயவாடா மாநகராட்சிகளில் தலா ஒரு கவுன்சிலர் இடம், 4 நகராட்சி கவுன்சிலர் இடங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு (ZPTC) இடம் மற்றும் 15 மண்டல ஊராட்சி ஒன்றியக் குழு (MPTC) இடங்களில் சிபிஎம் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் 7.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை அது 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்சித் தொண்டர்கள் மக்கள் மத்தியில் பெற்றுள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் இது பிரதிபலிக்கிறது. நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகள் மற்றும் வாக்குப்பதிவின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிபிஎம் மாநிலச் செயலகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி. ராகவலு பங்கேற்றார்.

மேலும், வரவுள்ள பஞ்சாயத்து தேர்தல்கள் மற்றும் 23 நகராட்சிகளுக்கான தேர்தல்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் நிர்ப்பந்தங்களும் இன்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீனிவாச ராவ் வலியுறுத்தினார்.