சிறார்களுக்குக் கதை சொல்லும் வண்ணத்துப்பூச்சி
7 Jun 2026, 10:28 pm

சிறார்களுக்குக் கதை சொல்லும் வண்ணத்துப்பூச்சி

கவிஞர், நாவலாசிரியர், வரலாற்றுப் பதிவாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட பெரணமல்லூர் சேகரனின் அடுத்த முகமாகப் பரிணமித்திருப்பது, லாலிபாப் சிறுவர் உலகம் வெளியிட்டுள்ள ‘அமுதாவின் தோழி வண்ணத்துப்பூச்சி’ என்ற சிறார் கதைகள் நூலாகும். இதில் மொத்தம் 24 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நட்பு, மருத்துவம், மாயாஜாலம், கற்பனை, உளவியல் மற்றும் பொது அறிவு எனப் பல்வேறு பயனுள்ள கருத்துகளைக் கதைகளாக உருமாற்றி, இரண்டு மூன்று பக்கங்களுக்குள் நயமாகவும் சுருக்கமாகவும் ஆசிரியர் தந்துள்ளார்.

சிறார்களுக்குக் கதை எழுதுவது ஒரு தனி உலகம்; பெரும் சவால் நிறைந்தது. சிறார்கள் பெரிதும் விரும்பும் மாய எதார்த்தவாதத்தை (Magical Realism) அளவோடு, மிக நுட்பமாக இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ளார். ‘அழும் பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற கதை ஆட்டின் மொழியைக் கற்பனை செய்து, மூடநம்பிக்கைக்கு நெத்தியடியாகச் சொல்லப்பட்டுள்ளது. ‘மரியாதை ராமனின் முன்யோசனை’ என்ற கதை, பொய் சாட்சி சொல்பவர்களை அடையாளம் காணும் அறிவுத்திறன் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தந்திரத்தை விவரிக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கதைகள் நீண்ட தலைப்புகளுடன் இருப்பதைத் தவிர்த்து, இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம்.

அறிவியல் செய்திகளைச் சிறார்களுக்குக் கடத்தும் நோக்கில் ‘உடைந்த நிலா’ என்ற கதையும், குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முன்வைத்துச் சமகாலச் சமூக அரசியல் பார்வையை விளக்கும் வகையில் ‘வற்றிய வயிறு’ என்ற கதையும் எழுதப்பட்டுள்ளன. காசா பகுதியின் துயரங்களையும், பசியால் தட்டேந்தும் குழந்தைகளின் சோகங்களையும் பெற்றோர்கள் வழியே பிள்ளைகளுக்குக் கடத்தும் ‘வற்றிய வயிறு’ கதை, சமகாலத்தைப் பதிவு செய்யும் மிக முக்கியமான கதையாகும்.

வளர்ந்து வரும் இளையோரின் பொது அறிவு, எதிர்காலம் மற்றும் முன்னேற்றத்தை அழகாகப் பிரதிபலிக்கும் இத்தொகுப்பு, எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரனுக்குச் சிறார் இலக்கிய உலகில் ஒரு புதிய அடையாளத்தைத் தந்துள்ளது.

அமுதாவின் தோழி வண்ணத்துப்பூச்சி