வாழ வைக்கும் காடுகளை வாழ வைக்க வேண்டும்
9 May 2026, 2:21 pm

வாழ வைக்கும் காடுகளை வாழ வைக்க வேண்டும்

அமேசான் மழைக்காடுகளில் உள்ள மிகப் பெரிய மரங்கள் பல்கிப் பெருகி வளர்கின்றன. உயரும் வெப்பநிலை, மோசமான வறட்சி போன்றவற்றிற்கு இடையில் மனிதனின் குறுக்கீடுகள் இல்லாமல் வளரும் வெப்ப மண்டலக் காடுகள் திறன் மிகுந்த கார்பன் சேமிப்புத் தொட்டிகளாக செயல்படுகின்றன. முன்பு நம்பப்பட்டதை விட அமேசானின் பெரிய மரங்கள் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை சமாளித்து வளர்கின்றன என்றாலும் காட்டுத் தீ, வனங்கள் அழிக்கப்படுவதால் இவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று புதிய ஆய்வு கூறுகிறது.

அமேசானின் உயரமான மரங்கள்

தடங்கல்கள் இல்லாமல் வளரும் மரங்கள் வளி மண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பட்டை, தண்டு, கிளைகள் மற்றும் வேர்களில் கார்பனை சேகரிக்கிறது. நேச்சர் தாவரங்கள் (Nature Plants) என்ற இதழில் வெளிவந்துள்ள இந்த ஆய்வு வரவேற்கத்தக்கது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். என்றாலும் இந்த காடுகள் தீவிர காட்டுத் தீ, துண்டாடப்படுதல், சாலை மற்றும் பண்ணை விரிவாக்கத்தால் அழிக்கப்படும் ஆபத்தில் உள்ளன என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். “இது தரமான நல்ல செய்தி. எங்கள் ஆய்வு குறுக்கீடுகள் அற்ற, நன்கு வளர்ந்த காடுகளைப் பற்றி மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தப்படாவிட்டால் இந்த நிலை சிறிது காலம் மட்டுமே நீடிக்கும்” என்று லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆலிவர் பிலிப்ஸ் கூறுகிறார். மத்திய அமேசானின் மிகப் பெரிய, தூய்மையான காடுகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பி ஆர்319 (BR-319) என்ற பெயரில் ஒரு முக்கிய சாலை அமைக்கப்படுகிறது. சோயா பயிர் செய்யவும் கால்நடை மேய்ச்சலுக்கும் பொலிவியா பெருமளவில் காடுகளை அழித்துவருகிறது. இந்த ஆய்வில் பிரேசில், யு கே மற்றும் இதர நாடுகளின் 60 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் நூறு விஞ்ஞானிகளால் கடந்த 30 ஆண்டுகளாக அமேசான் காடுகளில் 188 பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்பட்டன. ஒவ்வொரு பத்தாண்டிலும் மரங்களின் மையத் தண்டுப் பகுதியின் அடர்த்தி 3.3% அதிகமாக வளர்ந்துள்ளது. பெரிய மரங்களில் இது அதிகமாக இருந்தது என்று ஆய்வில் இருந்து தெரியவந்தது. இந்த விரிவாக்கம் மனிதனால் எரிக்கப்படும் வாயு, எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் வளிமண்டலத்தில் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடின் உயர்வால் ஏற்படுகிறது. காஸ்ட்டநேராஸ் (castanheiras) என்ற அறிவியல் பெயருடைய பிரேசில் கொட்டை மரங்கள் (Brazil nut trees), சூமோமஸ் (sumaúmas) என்ற அறிவியல் பெயருடைய இலவம் அல்லது காப்பாக்ஸ் (kapoks)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரம், ஆஞ்சலிம் வெர்மெல்ஹோ (Angelim vermelho) போன்ற மரங்கள் முப்பது மீட்டருக்கு மேல் உயரமாக வளரும் இயல்புடையவை. இதனால் இந்த மரங்கள் மரக்கவிகையின் உச்சியில் கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்ய அவசியமான சூரிய ஒளி, நீர் மற்றும் சத்துப் பொருட்களுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளன. கார்கள், தொழிற்சாலைகள், ஆற்றல் நிலையங்களால் உலகளவில் காற்றில் பம்ப் செய்யப்படும் கூடுதலான கார்பன் டை ஆக்சைடை காடுகளால் மட்டும் சமாளிக்க முடியாது.

பெரிய மரங்கள் உயிரிழந்தால்…

என்றாலும் மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும் காடுகள் காலநிலை மாற்றத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில் முக்கியப் பங்காளியாக உள்ளன என்பதை இந்த ஆய்வு வலியுறுத்திக் கூறுகிறது. மேலும் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவேண்டும் என்பதை இந்த காடுகள் நமக்கு சொல்கின்றன. தென் கிழக்கு அமேசான் உட்பட அமேசானின் பல பகுதிகளும் வேளாண் வணிகம், உள்கட்டமைப்பு போன்றவற்றால் மிக அதிக அளவில் துண்டாடப்படுகிறது. இதனால் இந்த காடுகள் கார்பன் சேமிப்புத் தொட்டிகள் என்ற நிலையில் இருந்து கார்பனை வெளியிடும் மூலமாக மாறியுள்ளன. இந்த காடுகள் தனித்திருப்பதாலும் காட்டின் எல்லைப்பகுதிக்கும் வேளாண் நிலங்கள் அல்லது மேய்ச்சல் பகுதிகளுக்கு அருகில் இருப்பதாலும் பெரிய மரங்கள் வலுவான காற்றுக்கு முன் வலிமையற்றவையாக உள்ளன. காடுகளின் அழிவால் கடந்த இருபது ஆண்டுகளில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. அடர்த்தியான காடுகளில் கூட பிரம்மாண்டமான அளவுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற வேர்களை கொண்டிருப்பதால் பெரிய மரங்கள் வெப்பநிலை உயர்வதால் அழிந்துவிடும் என்று பல பத்தாண்டுகளாக கருதப்பட்டது. ஆனால் பல மரங்கள் மெலிதான வேர்களைக் கொண்டுள்ளதால் அவை அதிக ஆழத்தில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன என்று ஆய்வுகள் கூறியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் அமேசானின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி மரங்கள் உயிரிழப்பதை எவ்வாறு பாதித்தது என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. “பெரிய மரங்கள் உயிர்மம் அல்லது உயிரியக்க செயல்பாடுகளுக்கு முக்கியப்பங்காற்றுகின்றன. உயிர்மம் (biome) என்பது தனித்துவமான காலநிலை, தாவர வளர்ச்சி மற்றும் விலங்கினங்கள் வாழும், இயற்கையாகத் தோன்றிய தாவர விலங்கின கூட்டத்தைக் குறிக்கிறது. இந்த மரங்கள் காட்டின் ஒரு சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளன என்றாலும் இவையே கார்பன் சுழற்சி, சேமிப்பு, நீர் சுழற்சிக்கு காரணமாக உள்ளன. பெரிய மரங்கள் இறந்து போனால் காடுகள் உலர்ந்து போகின்றன. இது காடுகளின் அமைப்பை மாற்றுகிறது. இந்த மரங்கள் மெதுவாக வளரும் என்பதால் இந்நிலை திரும்பவும் ஏற்பட நீண்ட காலம் எடுக்கும். மீண்டும் இந்த பெரிய மரங்கள் பெரிதாக, அதிக எண்ணிக்கையில் அமேசான் முழுவதும் வளரும். காடுகள் நெகிழ்வுத் தன்மையுடன் காணப்படும் என்பதால் நமக்கு சிறிது நம்பிக்கை ஏற்படுகிறது” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான ஆட்ரியன் எஸ்குவெல்-மியூயெல்பர்ட் (Adriane Esquivel-Muelbert) கூறுகிறார். நம்மை வாழவைக்கும் அமேசான் மழைக் காடுகளை நாம் வாழவிடவேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.