மலேசியாவில் சர்வதேச தமிழ் வரலாற்று ஆய்வு மாநாடு - அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!
yesterday

மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 19, 20 தேதிகளில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“மலேசியாவின் கோலாலம்பூரில் டிசம்பர் 19, 20 தேதிகளில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

கீழடி அகழாய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்யுமாறு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் அளித்து அவர் அதற்கு மறுத்ததாலேயே, அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜூலை மாதம் அமெரிக்காவில் ஒரு மாநாட்டுக்கு அவர் அனுமதி கோரிய போதும் அது மறுக்கப்பட்டு இருக்கிறது. தொல்லியல் துறையின் சிறந்த ஆய்வாளராகத் திகழும் அமர்நாத் ராமகிருஷ்ணா இத்தகைய தடைகளுக்கு ஆளாவது அவரின் அறிவியல் பூர்வமான கருத்துகளுக்கு எதிரான பழிவாங்கலே ஆகும்.

கீழடியின் தொன்மை நிறுவப்படுவது சங்பரிவாரத்தின் போலி வரலாற்று திரிபுகளுக்கு எதிரானதாக இருக்குமென்பதே உண்மை. அதனால் தான் அறிக்கையை மாற்றி எழுதுமாறு அமர்நாத் மீது நிர்ப்பந்தம் உருவாக்கப்படுகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம், ஒன்றிய அரசின் அரசியல், சித்தாந்த தேவைகளுக்கானதாக மாற்றப்படுவதன் வெளிப்பாடே அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் தடைகளும் ஆகும்.

ஆகவே, அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க விதிக்கப்படும் தடை முற்றிலும் ஏற்க இயலாதது. ஒன்றிய அரசு இத்தடையை விலக்கி, அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.