தொடர் விபத்துகளைத் தடுக்கக் கோரி அனைத்துக் கட்சி சாலை மறியல்
29 Jun 2026, 11:54 pm
<p><strong>தொடர் விபத்துகளைத் தடுக்கக் கோரி அனைத்துக் கட்சி சாலை மறியல்</strong></p><p>கடலூர், ஜூன் 29 – விருத்தாச்சலம் - சிதம்பரம் சாலையில் உள்ள கோ.பொன்னேரி பைபாஸ் ரவுண்டானாவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க, அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தி விபத்தில்லாச் சாலையாக மாற்ற வலி யுறுத்தி, அனைத்துக் கட்சியினர் சார்பில் ஜூன் 2-ம் தேதி மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அன்று விருத்தாச்சலம் வட்டாட்சி யர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றுவதாகவும், புறவழிச்சாலை ரவுண்டானாவை அகலப்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் இதுவரை நடைபெறவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை அதே இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, பாமக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் கோ.பொன்னேரி பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில், பழங்குடி மக்கள் நலச் சங்க மாவட்ட செய லாளர் என்.எஸ்.அசோகன், பாமகவைச் சேர்ந்த பி.பாலகிருஷ்ணன், விசிக தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜி, திமுக கிளை செயலாளர் ராமமூர்த்தி, தேமுதிக மாவட்ட நிர்வாகி விஜயகுமார், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் பி.வீரமணி, கிளை செயலாளர் சோமு, ஜெயலட்சுமி, திலகவதி உள்ளிட்டோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் நேரில் வரும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் போராட்டக் காரர்கள் உறுதியாகக் கூறினர். அதன்பின், நிகழ்விடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விபத்துக்கான காரணங்களை விரைந்து சரிசெய்து தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.</p>
