நாளை முதல் கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்
19 May 2026, 10:33 pm

நாளை முதல் கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்

கரூர், மே 19- கரூரில் அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் மே 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என கரூர் மாவட்ட கூடைப்பந்து குழுவின் தலைவர் வி.என்.சி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “கரூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான எல்ஆர்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி நிகழாண்டு 66 ஆவது ஆண்டாகவும், கரூர் வைஸ்யா வங்கி சார்பில் 12 ஆம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளும் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மே 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி வங்கி அணி, லெனோவிலா இந்தியன் நேவி அணி, புதுதில்லி இந்தியன் விமானப்படை அணி உள்பட 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களும், பெண்களுக்கான பிரிவில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி, சென்னை தெற்கு ரயில்வே அணி உள்பட 4 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.

நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் சுழற்கோப்பைம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80,000 மற்றும் கோப்பைம், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50,000 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

இதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.75,000 மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20,000 மற்றும் கோப்பை வழங்கப்படும்.

மேலும் விளையாட்டின்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எந்த விளை யாட்டிலும் இந்திய அளவில் சிறப்பிடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.

பார்வையாளர்களுக்கு கேலரி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது துணைத் தலைவர்கள் ஆடிட்டர் சண்முகசுந்தரம், இந்திரமூர்த்தி, பாலசுப்ரமணியன், செயலாளர் எம்.முகமது கமாலுதீன், பொருளாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் ஆர்.வெங்கடேசன், முகமது அமீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.