ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
10 Jul 2026, 2:21 pm

12 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தில் ஆல்கஹால் கொண்ட மருந்துகளை, இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்கள் விற்பனை செய்யக் கூடாது என ஒன்றிய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறை இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், மருந்து விதிகள், 1945'-இல் திருத்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதில், 'அட்டவணை K'-இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டு வந்த மருந்துகள் சிலவற்றின் பெயர்களை நீக்கியுள்ளது. அதன்படி, 12 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் எத்தில் ஆல்கஹால் கொண்ட 30 மில்லிக்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட மருந்து பாட்டில்கள் (இருமல் மருந்து உள்ளிட்ட மருந்துகள்) 'அட்டவணை H1'-இன் கீழ் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இந்த மருந்தகங்கள் விற்பனை செய்ய முடியாது.

அட்டவணை H1-இன் கீழ் பல ஆண்டிபயாடிக் மருந்துகள், காசநோய் மருந்துகள் மற்றும் பிற அதிக அபாயகரமான மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த மருந்துகளை மருந்துச்சீட்டு இல்லாமல் நேரடியாக விற்க முடியாது. மருந்தகங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்: பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் மருந்துச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே அவற்றை வழங்க வேண்டும். ஒவ்வொரு விற்பனையின் விவரங்களையும் பதிவுசெய்யும் ஒரு தனிப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும். ஒழுங்குமுறை ஆய்விற்காக, மருந்துச்சீட்டுகள் மற்றும் மருந்து வழங்கும் பதிவுகளைக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும்.

தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கோ அல்லது முறையற்ற முறையில் உட்கொள்ளப்படுவதற்கோ அதிக வாய்ப்புள்ள மருந்துகளின் கண்காணிப்பை வலுப்படுத்துவதே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.