அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட நடவடிக்கை எடுத்திடுக! அமைச்சர்
27 May 2026, 9:04 pm

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட நடவடிக்கை எடுத்திடுக! அமைச்சர் விஸ்வநாதனிடம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேரில் மனு அளித்து வலியுறுத்தல்

மதுரை, மே 27- அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து இயக்கக்கோரி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் சார்பாகவும் விவசாயிகள் சார்பாகவும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி சர்க்கரை ஆலையில் மின்சார உபமின்நிலையம் அமைப்ப தற்காக அரசால் 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும், விவசாயிகளின் பங்குத்தொகை யாக 10 கோடி ரூபாய் செலுத்தப் பட்டும், உபமின் நிலையத்தின் 75 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் மீதி வேலைகள் முடிக்கப் படாமல் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது.

இதற்கிடையே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்க்கரை ஆலையை உடனடியாகத் திறப்போம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் 46 நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத் தின் விளைவாக, ஆலையைத் திறப்பது குறித்து ஆய்வு செய்ய அரசால் ஒரு குழு அமைக்கப் பட்டது.

அக்குழுவின் ஆய்வுக்குப் பின், இந்த ஆலையை மீண்டும் இயக்குவதற்கு 27 கோடி ரூபாய் தேவை என்று அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தற்பொழுது 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது.

இந்த நிலையில், இந்த வருடம் ஆலைக்குட்பட்ட பகுதிகளில் கரும்புப் பதிவு செய்வதற்கு ஆலை அதிகாரிகளுக்கு அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், தற்பொழுது இப்பகுதியில் பதிவு செய்யப்படாத கரும்பு 5000 ஏக்கருக்கும் மேல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு, இந்தாண்டு 2026-2027-ஆம் நிதி யாண்டிலேயே சர்க்கரை ஆலை யைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என்.பழனிசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.ராஜா மணி, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், அலங்கா நல்லூர் ஒன்றிய செயலாளர் கே.தவ மணி, மற்றும் கரும்பு விவசாயிகள் கருப்பையா, ஐயாக்காளை, போஸ், மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் என். பழனிச்சாமி கூறியதாவது: இந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால், இதனை நம்பியிருக்கும் சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் விவசாயிகளும், 2 லட்சம் முதல் 2.5 லட்சம் கூலித் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலையில் பணிபுரியும் சுமார் ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இப்பகுதி விவசாயிகளுக்கு லாபகரமான ஒரே பயிர் கரும்பு மட்டும்தான் என்பதால் ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இன்னும் ஆலை திறக்கப்படாததால், இந்த அரசாங்கத்திடம் பேசி உடனடியாகத் திறக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.

விவசாயிகளின் கோரிக்கை மனுவைப் படித்துப் பார்த்த அமைச்சர் , விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்ட மக்களின் பாதிப்பை உணர்ந்து, “இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதால், உடனடியாக முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்துப் பேசி, இந்த ஆலையைத் திறப்பதற்கான அனைத்து வழிகளையும், முயற்சிகளையும் எடுப்பேன்” என்று நேரில் உறுதி அளித்துள்ளார்.

இத்துடன் கூடுதலாக, சாத்தியார் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால், பெரியார் ஆற்றுத் தண்ணீரை பம்ப் செய்து சாத்தியார் அணையில் விட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்.

இதன் மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 120 கிராமங்கள் பாசன வசதி பெற்றுத் தண்ணீர் கொண்டு போக முடியும் என்பதால், இக்கோரிக்கையையும் பரிசீலனை செய்வதாக அமைச்சர் விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளார் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.