பைக் டாக்சியை தடை செய்ய ஏஐடியுசி வலியுறுத்தல்
23 Jul 2026, 10:15 pm
<p><strong>பைக் டாக்சியை தடை செய்ய ஏஐடியுசி வலியுறுத்தல்</strong></p><p>தஞ்சாவூர், ஜூலை 23- சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்சி என்ற இருசக்கர வாகனங்களைத் தடை செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே ஏஐடியுசி தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கும் வகையில், சட்டத்துக்குப் புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்சி என்கிற இருசக்கர வாகனங்களைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலியைத் தொடங்க வேண்டும். புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது. ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல ஆட்டோ, மோட்டார் வாகனத் தொழிலாளர்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி.) புதுப்பிக்கும் காலங்களில் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகிகள் எஸ்.பாலகிருஷ்ணன், இரா.செந்தில்நாதன் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏஐடியுசி மாநிலச் செயலர் ஆர்.தில்லைவனம் நிறைவுரையாற்றினார். சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், ஏஐடியுசி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
