75 ஆண்டுகால மகத்தான பயணம் - இரா.விஜயகுமார்
1 hour before

75 ஆண்டுகால மகத்தான பயணம் - இரா.விஜயகுமார்

தீக்குச்சி விளக்கை ஏற்றியது. எல் லோரும் விளக் கை வணங்கினார்கள். பித்தன் கீழே எறியப் பட்ட தீக்குச்சியை வணங்கினான். “ஏன் தீக்குச்சியை வணங்குகிறாய்?” என்று கேட்டேன். “ஏற்றப்பட்டதை விட ஏற்றி வைத்தது உயர்ந்ததல்லவா” என்றான். கவிக்கோ அப்துல் ரகுமானின் இக் கவிதை வரிகள், எல்.ஐ.சி எனும் மாபெரும் பொதுத்துறை நிறுவனம் இன்றளவும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரண மான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (AIIEA) தியாக வரலாற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. 1951 ஜூலை 1 இல் உதயமாகி, பவள விழா ஆண்டைக் கடந்து ஜூலை 1 அன்று தன் 76 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஏஐஐஇஏ-வின் வரலாறு, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்ததாகும்.

பிரிட்டிஷ் இந்தியா முதல் 1956 வரை: தேசியமயமாக்கல் களம்

சுதந்திரத்திற்குப் பின், மூலதனமும் உள்கட்டமைப்பும் இல்லாத தனியார் முத லாளிகளின் முறைகேடுகளைக் கட்டுப் படுத்தவும், கலப்புப் பொருளாதார மாதி ரியின் மூலம் சுயசார்பு தேசத்தைக் கட்டவும் பொதுத்துறைகள் உருவாக்கப்பட்டன. 1951 ஜூன் 30 - ஜூலை 1 தேதிகளில் பம்பாய் தாதர் துரு அரங்கில் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர் பிரதிநிதிகள் மாநாட்டில், தோழர் பி.டி.தோண்டே அவர்க ளின் ஒருங்கிணைப்பில் ஏஐஐஇஏ உரு வானது. மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய பிரபல வழக்கறிஞர் ரஜினி பட்டேல், “இன் சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கோரிக்கையை முன்வைத்தார். முதலாளிகளின் கொள்ளையைத் தடுத்து, பாலிசிதாரர் மற்றும் ஊழியர் நலன் களைப் பாதுகாத்து, தேசிய வளர்ச்சிக்கு மூலதனத்தைத் திரட்ட இன்சூரன்ஸ் தேசியமயம் ஒன்றே வழி என ஏஐஐஇஏ மக்கள் மத்தியில் பேராதரவைத் திரட்டியது. இதன் விளைவாக, 1956 ஜனவரி 19 அன்று அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 1.9.1956 இல் ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி) முறையாகத் துவக்கப்பட்டது. “மற்றவை மறக்கப்பட்டாலும் ஆயுள் காப்பீட்டுத் துறை யை தேசியமயமாக்கிய நிதி அமைச்சர் என்று எனது பெயர் வரலாற்றில் இடம் பெறும்” என அன்றைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் பெருமையோடு குறிப்பிட்டார். அரசின் முடிவை வரவேற்று, தேச வளர்ச்சியில் ஊழி யர்களின் முழு ஒத்துழைப்பை ஏஐஐஇஏ தந்தி மூலம் உறுதிப்படுத்தியது.

முதல் ஊதிய ஒப்பந்தமும் எல்.ஐ.சி பிரிவினை முறியடிப்பும்

ரஜினி பட்டேல், சந்திரசேகர போஸ், சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலில் சங்கம் நாடு முழுவதும் வலுப்பெற்றது. 1959 கான்பூர் மாநாட்டில், சாதாரண ஊழியர்க ளின் ஆலோசனைகளையும் பெற்று கோ ரிக்கை சாசனம் தயாரிக்கும் உன்னத ஜனநாயக மரபை ஏஐஐஇஏ அறிமுகப் படுத்தியது. இதன் விளைவாக, எல்.ஐ.சி-க்கும் ஏஐஐஇஏ-வுக்கும் இடையே 1963 ஜனவரி 23 அன்று முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவத் திட்டங்களை அறிமு கப்படுத்தியது. வங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி 1970 இல் ஒப்பந்தம் கண்ட சங்கம், தனது தொடர் போராட்டங்களின் மூலம் 1972 இல் தேசியத் தொழில்துறை தீர்ப்பாயத்தின் வாயிலாக உச்சவரம்பற்ற 10% போனஸ், எல்டிசி (LTC) போன்ற சலு கைகளை வென்றெடுத்தது. மறுபுறம், முதலாளிகளின் தூண்டு தலால் எல்.ஐ.சி-யைப் பிரிப்பதற்கான நாடா ளுமன்றக் குழுக்கள் (1964 பொதுத்துறை குழு, மொரார்க்கா குழு, செழியன் குழு) அமைக்கப்பட்ட போதெல்லாம் ஏஐஐஇஏ ஆணித்தரமான வாதங்களை முன் வைத்துப் பிரிவினையைத் தடுத்தது. 1981 இல் நிதி அமைச்சர் பிரணாப்குமார் முகர்ஜி எல்.ஐ.சி 5 கூறுகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்தபோது, சங்கம் நாடு தழுவிய கிளர்ச்சிகளை நடத்தியது. மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு பங்கேற்ற தேசியக் கருத்தரங்கம் மற்றும் பாலிசிதாரர் கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. 1983 இல் நாடாளுமன்றத்தில் ‘எல்.ஐ.சி சட்டம் 1983’ கொண்டுவரப்பட்டபோது, தோழர் சுனில் மைத்ரா தலைமையில் 48 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக் கடிதம் பெறப்பட்டு மசோதா கூட்டுக்குழு வுக்கு அனுப்பப்பட்டது. 25 ஆகஸ்ட் 1984 நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் நள்ளிரவு வரை நீடித்த கடுமை யான விவாதங்களுக்குப் பிறகு அரசு பின்வாங்கியது; மசோதா செயலிழந்தது. 1985 ஏப்ரல் 12 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி இப்பிரிவினைத் திட்டத்தைக் கைவிடு வதாகத் தோழர் சுனில் மைத்ராவிடம் கடிதம் மூலம் உறுதி அளித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டோமேஷன் எதிர்ப்பு இயக்கம் (1964 - 1969)

1963 நாக்பூர் மாநாட்டின் போது, எல்.ஐ.சி அலுவலகங்களை மூடிவிட்டு கம்ப்யூட்டர்களைப் புகுத்தும் ‘மறுசீர மைப்புத் திட்டம்’ குறித்து வெளியான செய்தி யை அடுத்து, ஏஐஐஇஏ ஐந்து ஆண்டு கால நீண்ட ஆட்டோமேஷன் எதிர்ப்பு இயக் கத்தைக் கையில் எடுத்தது. வேலைவாய்ப்பு களைப் பறிக்கும் இம்முயற்சிக்கு எதிராக 1965 இல் மத்திய தொழிற்சங்கங்களை இணைத்து மாநாடு நடத்தியது. நாடு தழுவிய வரலாற்றுப் புகழ்பெற்ற கையெழுத்து இயக்கத்தின் மூலம் 10 லட்சத்து 85 ஆயிரம் பொதுமக்களைச் சந்தித்துக் கையெழுத்துகள் பெறப்பட்டு, 27 மூட்டைகளாக நாடாளுமன்ற சபாநாய கரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1966 இல் எர்ணாகுளத்தில் நடைபெற்ற ஏஐசிசி மாநாட்டின் முன் தென்மண்டலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திரண்டு காங்கிரஸ் தலைவர் காமராஜரிடம் மகஜர் அளித்தனர். “பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காவிட்டால் கல்கத்தா வீதிகளில் அரசைச் சந்திப்போம்” என்று சரோஜ் சவுத்ரி எச்சரித்தார். சங்கத்தின் அங்கீகார ரத்து, கடுமையான அடக்குமுறைகளையும் தாண்டி சங்கம் நடத்திய வீரியமிக்க போ ராட்டத்தால் கம்ப்யூட்டர் மயமாக்கல் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு, ஏஐஐஇஏ-வுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டது.

கதவடைப்பு முறியடிப்பும் அவசரநிலை காலப் போராட்டங்களும்

15 ஆண்டுகாலத் தொடர் இயக்கம் காரணமாக, 13.5.1971 அன்று பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளைத் தேசியமய மாக்கி பொதுக் காப்பீட்டுத் துறை (GIC) உருவாக்கப்பட்டது. 1973 இல் புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது, “அலுவலக நேரத்திற்குப் பின்னும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது” என்ற அடிமைத்தனமான நிபந்தனையை எல்.ஐ.சி தலைவர் கே.ஆர். பூரி விதித்தார். பிற சங்கங்கள் பணிந்தபோதும் ஏஐஐஇஏ இதனை நிராகரித்தது. இதனால் பழிவாங் கல்களும், இடமாற்றங்களும் பாய்ந்தன. போராட்டத்தை ஒடுக்க 1974 ஜனவரி 9 முதல் தில்லி, சென்னை உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களில் ‘பகுதிநேர கதவ டைப்பை’ நிர்வாகம் அமல்படுத்தியது.

ஏஐஐஇஏ ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்திற்கு அழைக்காமல், பாதிக் கப்பட்ட கோட்டங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தமும், பிற கோட்டங்களில் ‘விதிமுறைப்படி பணிபுரியும்’ போராட் டத்தையும் அறிவித்து நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. நிலைமை கைமீறிய தால் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ரகுநாத ரெட்டி, ஏஐஐஇஏ தலைவர்களான சந்திரசேகர் போஸ், சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா ஆகியோரை தில்லிக்கு அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். 14 நாட்களுக்குப் பின், 1974 ஜனவரி 24 நள்ளிரவில் அனைத்துப் பழி வாங்கல்களும் ரத்து செய்யப்பட்டு மகத்தான ஒப்பந்தம் எட்டப்பட்டது. ‘தொழிற் தகராறு சட்டத்தின்’ கீழ் எல்ஐசி-யில் எட்டப்பட்ட கடைசி இருதரப்பு ஒப்பந்தம் இதுவேயாகும்.

1975 அவசரநிலை காலத்தில் போனஸ் முடக்கப்பட்டதை எதிர்த்து ஏஐஐஇஏ உச்ச நீதிமன்றம் சென்றது. 10.11.1980 இல் வழங்கப்பட்ட வரலாற்றுத் தீர்ப்பில், இரு தரப்பு ஒப்பந்தத்தை அரசு விதிகள் மூலம் மாற்ற முடியாது என்று கூறி, 12% வட்டியு டன் போனஸ் வழங்கவும், 14 நாள் வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை முறியடிக்க அரசு ‘எல்.ஐ.சி திருத்தச் சட்டம் 1981’ மூலம் கூட்டுப் பேர உரிமையைப் பறித்த போதிலும், சங்கம் தன் தொடர் போராட்டங்களால் ஊழியர்களின் சலுகை களைத் தக்கவைத்துக் கொண்டது.

தாய்ப்பறவை

“இடர் வரினும் தளரினும்” என்ற தேவாரப் பதிகத்திற்கேற்ப, நெருக்கடிகள் சூழ்ந்தபோதெல்லாம் களத்தில் முன்னிற் கும் முதல் இயக்கமாக ஏஐஐஇஏ திகழ்கி றது. தீயவற்றிலிருந்து காத்து நல்ல வற்றைப் பேணும் நாட்டுப்புறக் கதைகளின் ‘ஆளண்டாப்பட்சி’ தாய் பறவையைப் போல, கடந்த 75 ஆண்டுகளாகக் காப்பீட்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும், பொதுத்துறை நிறுவனங்களையும் பாது காக்கும் அரணாக ஏஐஐஇஏ தன் சமரச மற்ற பயணத்தைத் தொடர்கிறது.