நவீன தாராளமய எதிர்ப்புப் போராட்டத்தில் 40 ஆண்டுகள் ஏஐஐஇஏ எனும் கலங்கரை விளக்கம் - க.சுவாமிநாதன்
30 Jun 2026, 9:27 pm

நவீன தாராளமய எதிர்ப்புப் போராட்டத்தில் 40 ஆண்டுகள் ஏஐஐஇஏ எனும் கலங்கரை விளக்கம் - க.சுவாமிநாதன்

முன்னாள் பொதுச் செயலாளர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

“இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், இருண்ட காலத்தைப் பற்றி இருக்கும்” பெர்டோல்ட் பிரெக்ட் எழுதிய இக்கவிதை வரிகள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு (ஏஐஐஇஏ) முற்றிலும் பொருந்தக்கூடியவை. அபாயங்க ளை எல்லாம் திரட்டுதலுக்கான வாய்ப்புகளாக மாற்றிய அதன் வரலாறு பிரமிப்பானது. எல்.ஐ.சி நிறுவனத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை, அந்தந்த காலகட்ட அரசி யல் பொருளாதாரச் சூழல்களோடு இணைத்துப் புரிந்து எதிர் வினை ஆற்றிய ஏஐஐஇஏ-வின் அனுபவம், இந்தியத் தொ ழிற்சங்க இயக்கத்திற்கே ஒரு கலங்கரை விளக்கமாகும்.

1980 - 1990: ஆரம்பகால அச்சுறுத்தல்களும் முறியடிப்புகளும்

உலகமயக் கொள்கைகள் இன்சூரன்ஸ் துறையைத் தாக்குவதற்கான முன்னறிவிப்புகள் 1980களிலேயே வெளிவரத் துவங்கின. எல்.ஐ.சியை ஐந்து கூறுகளாகப் பிரிக்கும் மசோதா (1983), அமெரிக்க வர்த்தகச் சட்டம் ‘சூப்பர் 301’-இன் மிரட்டல் ஆகியன அவற்றுள் முதன்மை யானவை.

இன்று எல்.ஐ.சி பிரமாண்டமான நிறுவனமாகத் திகழ்கி றது. 2026 இல் அதன் நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்க ளின் மதிப்பு ரூ. 57.29 லட்சம் கோடிகளாகும். ஒருவேளை 1983 இல் கொண்டுவரப்பட்ட பிரிப்பு மசோதா நிறைவேறி யிருந்தால், எல்.ஐ.சி இத்தகைய வளர்ச்சியைப் பெற்றி ருக்க முடியாது. இம்மசோதா அறிமுகமான காலகட்டத்தில், பஞ்சாப் மற்றும் அசாமில் பிரிவினைவாத முழக்கங்கள் தீவிரமடைந்திருந்தன. பிரதமர் இந்திராகாந்தியின் படு கொலையும் இதே சூழலில் நிகழ்ந்தது.

இந்த அரசியல் சூழலைத் தனது பிரச்சாரத்தில் முன் வைத்த ஏஐஐஇஏ, நாடு தழுவிய மக்கள் சந்திப்பு இயக்கங்க ளை நடத்தியது. “நிதித் திரட்டல் மூலம் தேசத்தின் ஒருங்கி ணைந்த வளர்ச்சியை உறுதி செய்யும் நிறுவனத்தைப் பிரிப்பது தேச ஒற்றுமைக்கு உகந்ததா?” என்ற சங்கத்தின் வாதம் அரசின் திட்டங்களை முறித்தது. இந்திராகாந்தி படு கொலைக்குப் பின் பிரதமரான ராஜீவ் காந்தி, எல்.ஐ.சி பிரிப்பு மசோதாவைக் கைவிடுவதாக அறிவித்து, அதற்கான கடி தத்தை நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐஐஇஏ-வின் இணைச் செயலாளருமான சுனில் மைத்ராவிடம் வழங்கினார்.

அடுத்து, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கார்லா ஹில்ஸ், “எங்கள் வணிகக் கப்பல் அணிவகுப்பின் கொ டிக்கப்பல் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான்” என்று பிரகடனம் செய்து, ‘சூப்பர் 301’ சட்டம் மூலம் அச்சு றுத்தினார். போபர்ஸ் ஊழல் புகார்களால் ராஜீவ் காந்தி அரசு சரிவைச் சந்தித்து, இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்ற நேரம் அது. அமெரிக்கா வின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது என்று ஏஐஐஇஏ தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது. 1999 இல் நிதியமைச்சராக இருந்து அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்த பாஜகவின் யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் கூட, 1989 இல் ஏஐஐஇஏ நடத்திய கருத்தரங்குகளில் பங்கேற்று அமெரிக்காவிற்கு எதிராக முழங்கினர். வரலாறு சிலருக்கு நல்ல பாத்திரங்க ளைத் தந்து, பிந்தைய காலத்தில் அவர்களை வில்லனாக மாற்றுவது விசித்திரமான பதிவு.

1991 - 2000: தாராளமயப் பாய்ச்சலும் மக்கள் திரள் இயக்கமும்

1991 இல், உலகமயக் கொள்கைகளை ஏற்பதைத் தவிர “வேறு மாற்று வழியில்லை” (TINA) என்ற கருத்து கோலோச் சியபோது, இந்தியாவில் தாராளமய - தனியார்மயக் கொள் கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. பல துறைகளில் எதிர் வினைகள் பலவீனமடைந்திருந்த சூழலில், இன்சூரன்ஸ் துறையின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஆனால், இன்சூரன்ஸ் துறை ஆட்சியாளர்களுக்கு முற்றிலும் நேர்மாறான அனுபவத்தைத் தந்தது.

1994 இல் வெளியான மல்கோத்ரா குழு பரிந்துரைகள், எல்.ஐ.சி மற்றும் அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்க ளின் 50% பங்குகளை விற்க வலியுறுத்தின. இது நடந்திருந் தால் எல்.ஐ.சி “அரசு நிறுவனம்” என்ற தன் அந்தஸ்தையே இழந்திருக்கும். இன்று 2026 இலும் எல்.ஐ.சியின் 3.5% பங்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன என்பதோடு ஒப்பிடும் போது, கடந்த 32 ஆண்டுகாலத் தொடர் போராட்டம் நிறுவ னத்தின் அரசுத் தன்மையை எவ்வளவு வலிமையாகத் தக்கவைத்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அக்குழு பன்னாட்டு மூலதனத்திற்கு 100% கதவுக ளைத் திறக்கப் பரிந்துரைத்தது. ஆனால், அந்த ஆசை யை நிறைவேற்றிக் கொள்ள அந்நிய முதலீடு 32 ஆண்டு கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏஐஐஇஏ இப்போராட்டத்தைத் தேச நலனோடு இணை த்துக் கொண்டு சென்றது. “எல்.ஐ.சியின் பிரதான பணி வெறும் வணிகம் அல்ல; நீண்டகால நிதியாதாரங்களைத் திரட்டித் தேச நிர்மாணப் பணிகளுக்கு வழங்குவதுதான். எனவே, இது ‘இயல்பான ஏகபோகமாக’ (Natural Mon opoly) நீடிக்க வேண்டும்” என்ற வாதம் சமூகக் கவனத்தைப் பெற்றது. மேலும், இசேவை உயர்தட்டினருக்கு மட்டு மின்றி, அடித்தட்டு மக்களுக்குமானது (Mass Insurance) என்ற கருத்து மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. 1998 தெற்காசிய நிதி நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய தனி யார் நிதித்துறைத் தோல்விகள், சங்கத்தின் வாதங்களுக்கு வலுவான சான்றுகளாயின.

அரசியல் கட்சிகள் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த ஏஐஐஇஏ இருபெரும் கையெழுத்து இயக்கங்களை நடத்தி யது. நரசிம்ம ராவ் காலத்தில் தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக் கப்பட்டு 65 லட்சம் கையெழுத்துகளும், வாஜ்பாய் காலத் தில் நாடு தழுவிய அளவில் 1.5 கோடி கையெழுத்துகளும் திரட்டப்பட்டன. அப்போது அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, “பொன் முட்டையிடும் வாத்தை அறுக் காதே” என இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். இத்தகைய தற்காலிக அரசியல் ஆதரவுகள் அனைத்தும் ஏஐஐஇஏ நடத்திய இயக்கங்கள் விளைவித்த நிர்ப்பந்தங்களே ஆகும்.

இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாக எவ்விதத் தடம் மாறலும் இன்றி, இன்சூரன்ஸ் தனியார் மயமாக்கலுக்கு எதிராக உறுதியுடன் நின்றன. ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொண்டு வந்த இன்சூ ரன்ஸ் ஒழுங்காற்று ஆணைய மசோதா, இடதுசாரிகளின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.

1999 வாஜ்பாய் ஆட்சியில், இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு ஆணைய (IRDA) மசோதா மூலம் அந்நிய முதலீடு முதன்முதலாக அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், ஏஐஐஇஏ உருவாக்கிய போராட்ட வெப்பம் கார ணமாக, மூல மசோதாவில் இருந்த 49% அந்நிய முதலீட்டு வரம்பு 26% ஆகக் குறைக்கப்பட்டது. நாடாளுமன்ற ஒப்பு தல் இன்றி, அரசு அறிவிக்கை மூலமாகவே எதிர்காலத்தில் வரம்பை உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஆபத்தான சரத்தும் கைவிடப்பட்டது.

இதற்கான பேச்சுவார்த்தையை ஏஐஐஇஏ-வின் அன் றைய பொதுச் செயலாளர் என்.எம்.சுந்தரம், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மாதவ் ராவ் சிந்தியா ஆகியோருடன் நடத்தினார். பின்னர் கார்ப்பரேட் லாபி யிஸ்டுகள் (கார்ப்பரேட் நலனுக்காக ஆட்சியாளர்களை வளைப்பவர்கள்) காங்கிரஸ் எம்.பிக்களின் மனதை மாற்றி யதாக செய்திகள் வந்தன. சுதேசி முழங்கிய பாஜக, அந்நிய முதலீட்டிற்கு வழியமைத்துத் தன் போலி தேசியத்தை அம்பலப்படுத்திக் கொண்டது. வெள்ளை மாளிகை விருந் தில் பங்கேற்ற முரளி தியோராவை, அமெரிக்க அதிபர் “இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களின் சிற்பி” என அறிமுகப் படுத்தியது, ஏகாதிபத்தியத் தலையீட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அன்று மசோதாவைக் கொண்டு வந்த நிதியமைச்சர், 1989 இல் அமெரிக்கச் சட்டத்தை எதிர்த்து முழங்கிய அதே யஷ்வந்த் சின்காதான்.

2001 - 2020: மசோதாக்களின் முடக்கமும் தற்காப்புப் போரும்

இடதுசாரிகளின் ஆதரவோடு அமைந்த ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு (2004-2008), பொதுத்துறைப் பங்கு விற்பனைக்கு முட்டுக்கட்டை போட்டதால் இன் சூரன்ஸ் துறைக்கு அவகாசம் கிடைத்தது. எனினும், 2008 இல் எல்.ஐ.சி பங்கு விற்பனை மற்றும் அரசு உத்தரவாதத் தைப் பறிப்பதற்கான குறு மசோதாவும், அந்நிய முதலீட்டை 49% ஆக உயர்த்தும் மசோதாவும் கொண்டு வரப்பட்டன.

ஏஐஐஇஏ மீண்டும் களமிறங்கி வீதிச் சந்திப்புகளை நடத்தியது. இதன் தாக்கம் நாடாளுமன்றத்தில் எதிரொ லித்தது. மாநிலங்களவை உறுப்பினர் பாலச்சந்திர முங்கேக் கர், எல்.ஐ.சியில் ஊழலற்ற சேவையைப் பாராட்டி அவையி லேயே பேசினார். மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட சமயத்தில், உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் ‘ஏ.ஐ.ஜி’ (AIG) உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தன. இப்புதிய சூழலால் மசோ தாக்களின் நோக்கம் நிறைவேறவில்லை. நிலைக்குழு அவற்றிற்கு எதிராகப் பரிந்துரைத்தது. விசித்திரமாக, அந்த நிலைக்குழுவின் தலைவராக இருந்தவர் மீண்டும் அவதாரம் எடுத்த யஷ்வந்த் சின்கா ஆவார்.

2014 இல் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பின், அந்நிய முதலீட்டு வரம்பை 49% ஆக உயர்த்தும் மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டது. அப்போது ஆளும் அர சுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஏஐஐஇஏ அரசியல் ஆதரவைத் திரட்டியது. வலுவான போராட்டங்க ளின் விளைவாக, 49% வரம்பு உயர்த்தப்பட்டாலும் “நிர்வா கக் கட்டுப்பாடு இந்தியரிடமே இருக்க வேண்டும்” என்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்தைத் தவிர்த்து அரசு அறிவிக்கை மூலமே வரம்பை உயர்த்த லாம் என்ற சரத்து மீண்டும் கைவிடப்பட்டது. ஒவ்வொரு திருத்தமும் எல்.ஐ.சிக்குத் தன்னைத் தயாரித்துக் கொள்ளப் பல ஆண்டுகால அவகாசத்தை வழங்கியது.

2021 - 2026: மூர்க்கமான தாக்குதல்களும் நீளும் போராட்டமும்

நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலம், இன்சூரன்ஸ் துறை மீது மிக மூர்க்கமான தாக்குதல்களைத் தொடுத்தது. கோவிட் பேரிடர் சூழலைப் பயன்படுத்தி எல்.ஐ.சி பங்கு விற்பனை (IPO) அறிமுகம் செய்யப்பட்டதுடன், அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு முதலில் 74% ஆகவும், பின்னர் 100% ஆகவும் உயர்த்தப்பட்டது.

1994 இல் 51% பங்குகளை விற்க நினைத்த மல்கோத்ரா குழுவின் கனவு, கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக இன்று வெறும் 3.5% அளவிலான பங்கு விற்பனையோடு மட்டுமே நின்றுள்ளது. பின்தொடரும் பங்கு விற்பனை (FPO) குறித்து ஒன்றிய அரசு பேசி வந்தாலும், பங்குச் சந்தை ஆணையத்தின் காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே போகும் சூழலில்தான் அரசு உள்ளது. தற்போதும், எல்.ஐ.சிக்கு உள்ள அரசு உத்தரவாதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் சபை வலியுறுத்தி வருகிறது. புதிய அபாயங்கள் தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன.

வரலாறு தரும் பாடம்

ஏஐஐஇஏ-வின் 40 ஆண்டு காப்பீட்டுத் துறை தற்காப்பு இயக்கம், உலகமயச் சூழலில் ஒரு தொழிற்சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான சிறந்த முன்மாதிரியாகும்.

ஒரு துறையின் பாதுகாப்பைத் தேச நலனோடு பிணைப்பது, ஊழியர்களை வீதி உரையாடல்களுக்குத் தயாரிப்பது, பணிக் கலாச்சாரத்தைப் போராட்ட ஆயுதமாக்குவது, நாடா ளுமன்ற நிலைக்குழுக்களைப் பிரச்சார மேடைகளாக மாற்றுவது, சர்வதேச நிகழ்வுகளைத் தரவுகளாகப் பயன் படுத்துவது என அனைத்தையும் இப்போராட்டம் கற்றுத் தந்துள்ளது. நீடித்த போராட்டங்கள் மூலம் அரசின் வேகத்தை மட்டுப்படுத்தி, தன் வாதங்களுக்கான நம்ப கத்தன்மையை ஏஐஐஇஏ நிரூபித்துள்ளது.

பொதுத்துறைப் பாதுகாப்பு இயக்கத்தின் கலங்கரை விளக்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இன்றும் கம்பீரமாகத் திகழ்கிறது.