ஏஐஇஎஸ்எல் தொழிலாளர்கள் 8 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம்!
24 May 2026, 12:08 am

ஏஐஇஎஸ்எல் தொழிலாளர்கள் 8 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம்!

புதுதில்லி, மே 23 - ‘ஏர் இந்தியா இன்ஜினி யரிங் சர்வீசஸ் லிமிடெட்’ தொழி லாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து விமானப் பயணி களின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எம்.ஏ. பேபி எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் வருமாறு: ஏஐஇஎஸ்எல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு ‘ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL)’ என்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்க ளில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஏஐஇஎஸ்எல் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளின் விளைவாக, இங்கு பணிபுரிந்துவரும் தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிறுவனம், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் கீழ் இயங்கிடும் ‘ஏர்பஸ் 320’ வகை விமானங்கள், ‘போயிங் 737’ விமானம் போன்றவற்றின் பிரதான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகும்.

இந்நிலையில், இங்குள்ள தொழிலாளர்களின் அன்றாடப் பணிகள் செம்மையாகச் செயல்பட்டால்தான் உலகம் முழுதும் இயங்கிவரும் ‘ஏர் இந்தியா’ விமானங்களின், பயணிகளின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படும்.

பயணிகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் தொழில்நுட்பத் திறனையும், உழைப்பையுமே சார்ந்திருக்கின்றன.

அச்சுறுத்தலில் விமானப் பயணிகளின் பாதுகாப்பு நேற்று, பெங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு ‘ஏர் இந்தியா’ விமான (ஏ1 2802) என்ஜின்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கியது.

‘ஏர் இந்தியா’ நிறுவனமும் இதர பல விமான நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளுக்கு மேற்படி ‘ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் தொழிலாளர்களையே சார்ந்திருக்கின் றன. உண்மையில், விமானப் பாதுகாப்பு தொடர்பான இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், இதுகுறித்து அவசரத் தலையீடு கோரி ஒரு தனி கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.

அந்த வகையில், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் சிலவற்றின் மீது தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

3-இல் ஒரு பங்குக்கும் குறைவான ஊதியம் 1. முதலாவதாக, 2026 மே 8 அன்று இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட மாதிரி நிலையா ணை வரைவின் 7ஆவது பிரிவு, ‘ஒரே மாதிரியான பணியைச் செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், படிகள் மற்றும் சலுகை கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கும் குறைக்காமல் வழங்கப்பட வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆனால், ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறு வனத்தில் - பொறியாளர்கள் முதல் உதவியாளர்கள் வரை - குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, ஊதியம் மற்றும் சலுகைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகையே வழங்கப்படுகிறது.

14 மணி நேரத்திற்கு கட்டாயப் பணிச்சுமை 2. விமானப் பாதுகாப்பைப் பராமரிக்கும் பொறி யாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் நாளொ ன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை கட்டாயப்படுத்திப் பணியாற்ற வைக்கப்படுவதும், அதற்கு மிகக் குறைந்த அளவாக மணிக்கு சுமார் 85 ரூபாய் மட்டுமே மிகைநேர ஊதியமாக (Overtime pay) வழங்கப்படுவதும், சுரண்டலை இன்னும் அச்சமூட்டும் பரிமாணத்திற்கு இட்டுச் செல்கிறது.

உண்மையில் சட்ட விதிகளின் படி, இவர்களுக்கு மிகைநேரப் பணிக்கு, இருமடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

போராட்டத்தை ஒடுக்க பணிநீக்க மிரட்டல் 3. ‘சம வேலைக்குச் சம ஊதியம்’, பணி நிரந்தரம், கண்ணியமான பணிச்சூழல் மற்றும் நியாயமான மிகைநேர ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நிர்வாகம் மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளது.

இக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்கத் தொழிலாளர் பிரதிநிதிகள் நிர்வாகத்தைச் சந்தித்தபோது, நான்கு தொழிற்சங்கப் பிரதிநிதிக ளுக்குப் பணி நீக்க அறிவிப்புகள் வழங்கப் பட்டுள்ளன. தொழிலாளர் ஆணையரின் பரிந்துரையும் நிராகரிப்பு தற்போதைய தொழிலாளர் தகராறு தொடர்பாக, நாக்பூரில் உள்ள துணைத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் அவர்கள் பிறப்பித்த அறிவுறுத்தல்களைக் கூட ‘ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்’ நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை.

தொழிலாளர் பிரதிநிதிகளைப் பணி நீக்கம் செய்வது, நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிளவை மேலும் விரிவுபடுத்தும் என்று துணைத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் சரியாகவே கருத்துத் தெரிவித்துள்ளார்.

தங்களின் பரிந்துரைகளை நிராகரிக்கும் பட்சத்தில் ‘ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்’ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்றும் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

எனவே, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை களையும், விமானப் பயணிகளின் பாதுகாப்பு சார்ந்த பரந்த முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, பிரதமர் அலுவலகம் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, எம்.ஏ. பேபி, பிரதமர் மோடியை வலி யுறுத்தியுள்ளார். (ந.நி.)