பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துக! ஜூன் 23 - சென்னை, மதுரை, திருப்பூரில் மாதர் சங்கம் மாபெரும் கண்டனப் பேரணி!
15 Jun 2026, 10:25 pm

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துக! ஜூன் 23 - சென்னை, மதுரை, திருப்பூரில் மாதர் சங்கம் மாபெரும் கண்டனப் பேரணி!

கரூர், ஜூன் 15- தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, ஜூன் 23 அன்று சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய 3 முக்கிய மையங்களில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா தலைமையில் ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் கரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் உ.வாசுகி, கே.பாலபாரதி, பி.சுகந்தி, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநிலப் பொருளாளர் ஜி.ராணி, மத்தியக் குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசிகலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அச்சமூட்டும் வன்முறைகள்

சட்டமன்றத் தேர்தலின்போது, “பெண்களுக்குப் பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்”, “போதைப்பொருள் மற்றும் போதை கலாச்சாரத்தை ஒழிப்போம்” என்ற முழக்கங்களை மையமாக வைத்தே தமிழக வெற்றிக் கழகம் மக்களிடம் வாக்கு சேகரித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் அச்சமூட்டும் அளவிற்குத் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

• அதிர்ச்சியூட்டும் குற்றங்கள்: கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம், சென்னை மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் நடந்த பாலியல் அத்துமீறல், தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் எனத் திருவண்ணாமலை, நாமக்கல் உட்படப் பல மாவட்டங்களில் பாலியல் குற்றங்களும், இணையவழி பாலியல் அத்துமீறல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

• பின்னணியில் இருக்கும் போதை அரக்கன்: இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்திற்கும் போதைப்பொருள் பயன்பாடும், போதை கலாச்சாரமுமே முதன்மைக் காரணியாக உள்ளன. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை இந்த போதைப்பொருள் வலையமைப்பிற்குள் சிக்கி அழியும் அவலம் நீடிக்கிறது. தெருவோரத் தாக்குதல்கள், குடும்ப வன்முறைகள் என அனைத்துக் குற்றங்களின் பின்னணி யிலும் போதைப்பொருள் இருப்பது மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது என, மாதர் சங்க மாநிலக் குழு நிறை வேற்றியுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரங்களால் நிலைமை மாறாது

மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பரங்களை வெளியிடுவதாலும், அறிக்கைகளை வாசிப்பதாலும் மட்டும் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று மாதர் சங்கம் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கான சமூக மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்குவதே ஓர் அரசின் உண்மையான கடமையாகும். எனவே, தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கை களை எடுத்திட வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது:

1.பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளைத் தனி நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து விரைவான நீதியை உறுதி செய்ய வேண்டும்.

2.போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் அதன் விநியோகக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும்.

3.பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் பரவலைத் தடுக்கச் சிறப்பு உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

4.பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட கண்காணிப்புக் குழுக்களை உடனடி யாக அமைத்து, மாதந்தோறும் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்யவேண்டும்.

5.பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தாமதமின்றி உரிய நஷ்டஈடு, சட்ட உதவி, உளவியல் ஆலோச னை மற்றும் முறையான மறுவாழ்வு உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

ஜூன் 23 அன்று மாபெரும் கண்டனப் பேரணி

இக்கோரிக்கைகளை முன்வைத்து, வருகிற ஜூன் 23, 2026 அன்று சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான உழைக்கும் பெண்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டனப் பேரணிகளை நடத்துவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக் கோரி நடைபெறும் இப்போராட்டத்தில் பெண்கள், மாணவிகள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்றுத் தங்களது கண்டனக் குரலை உயர்த்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.