பொதுப்பாதையை மீட்டுத்தர வலியுறுத்தி விதொச ஆர்ப்பாட்டம்
21 Aug 2026, 12:16 am

பொதுப்பாதையை மீட்டுத்தர வலியுறுத்தி விதொச ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.20-பொதுப்பாதையில் பட்டா வழங்கப்பட்டதை கண்டித்தும், பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம்,டி.அம்மாபேட்டை கிராமத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது. அதற்கான பொதுப்பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கிராம நத்த நிலமாக மாற்றப்பட்டபோது, பொதுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்திலேயே வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்துவதற்கும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்வதற்கு சமூக விரோதிகள் இடையூறு செய்கின்றனர்; மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே, பொதுப்பாதையை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.அம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிழக்கு ஒன்றியத் தலைவர் டி.ராமன் தலைமை வகித்தார். இதில்மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றிய நிர்வாகிகள் குமரேசன், வீரப்பன், தங்கராஜி, தேசிங்கு, வேலாயுதம், வி.ஜெயகாந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்பி.குமார் மற்றும் ஊர் தலைவர்கள் சதாசிவம், வேடியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.