மனைப்பட்டா வழங்காமல் அலைக்கழித்து வரும் நிர்வாகம் அரூரில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>மனைப்பட்டா வழங்காமல் அலைக்கழித்து வரும் நிர்வாகம் அரூரில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>தருமபுரி, நவ.14- பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலமுறை மனு அளித்தும், மனைப்பட்டா வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து, விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் 2023ஆம் ஆண்டு அக்.3 முதல் இந்தாண்டின் நவ.10 ஆம் தேதி வரை மனைப்பட்டா கேட்டு பட்டியல், பழங்குடியினர், போயர் இன மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று, கீழானூர் கிராமத்திலுள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து பட்டியல், பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். மாம்பட்டி ஊராட்சி, கைலாயபுரம் கிராமத்தில் 127, சட்டையம்பட்டி கிராமத்தில் 140 பட்டியலின குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். மத்தியம்பட்டி, கைலாயபுரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் 60 குடும்பங்களுக்கு 1998 இல் கொடுத்த பட்டாவினை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து சிட்டா வழங்க வேண்டும். சந்திராபுரம் கிராமத்தில் வீடு கட்டி வாழ்ந்து வரும் 30 இருளர் இன குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், இட்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை அளந்து அத்து காட்டி, மீதமுள்ள மனு கொடுத்த 12 குடும்பங்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். எச்.ஈச்சம்பாடியில் 40 ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் தொம்பர் இன மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். மேல்செங்கப்பாடி பட்டியலினத்தைச் சேர்ந்த 64 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும். சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட கத்திரிப்பட்டி, நாட்டான் வளவு, கம்மாளை ஆகிய கிராமங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மலைவாழ் மக்களுக்கு மனைப்பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும். கெளபாறை கிராமத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் 80 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். அரூர் வட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏழை மக்களுக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று காத்திருப்புப் போராட்டத்தை துவங்கினர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் துவக்கி வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் கே.குமரேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் எம்.முத்து, மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் இ.கே.முருகன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இரா.லெனின், நிர்வாகிகள் பி.சொக்கலிங்கம், பி.வீரப்பன், ஜடையாண்டி, சி.வேலாயுதம், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பிரவீன்குமார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
