விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
24 Jan 2026, 3:38 pm
<p><strong>விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்</strong></p>
<p>அறந்தாங்கி, ஜன.24- மறமடக்கி பொழிஞ்சி அம்மன் கோவிலில், வேளாண் கல்லூரி மாணவர்கள் ஏற்பாட்டில் விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செல்வம், பேராசிரியர் மகேந்திரகுமார், முன்னோடி விவசாயிகள் முருகானந்தம், சுப்பையா, ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் 35-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துரையாடினர். முதல்வர் செல்வம் வாழை, கடலை மற்றும் பலா மதிப்புக்கூட்டிய தயாரிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர் மகேந்திரகுமார் கிருஷி விக்யான் கேந்ரா நடத்தும் பயிற்சி கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயி முருகானந்தம், தமது பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணை முறை அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு அலகுகள் குறித்து விளக்கி உரையாற்றினார். வேளாண் கல்லூரி மாணவர்கள் கடலை சாகுபடிக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் தென்னை ஊக்க மருந்து பற்றியும் விவரித்தனர். கலந்துரையாடல் அமர்வில், விவசாயிகள் வாழை மற்றும் தென்னை சாகுபடி தொடர்பான சந்தேகங்களை, விருந்தினர்கள் மற்றும் மாணவர்களிடம் முன்வைத்தனர். வாழையில் திசு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் செல்வம் விளக்கங்களை வழங்கினார்.</p>
