தியாகத்திற்கும் ஒப்பந்தமா?
6 Nov 2026, 8:03 pm

தியாகத்திற்கும் ஒப்பந்தமா?

இந்திய தேசத்தின் எல்லையைக் காக்கும் ராணுவப் பணியை, ஒரு தற்காலிக ஒப்பந்த வேலை நிலைக்குத் தரமிறக்கிய ‘அக்னிபாத்’ திட்டம் தொடங்கப்பட்டநாளில் இருந்தே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது4 ஆண்டு பணிக்காலத்தை 6 ஆண்டாக உயர்த்துவது, திருமணத்திற்கு அனுமதிப்பது என ஒன்றியஅரசு வழங்கி வரும் சலுகைகளும் தளர்வுகளும், அக்னிவீரர்களின் அடிப்படை உரிமைகளை மறைப்பதற்கான ஒரு திசைதிருப்பல் நாடகமே தவிர வேறில்லை.

நாட்டிற்காக எல்லையில் உயிரைக் கொடுக்கும் ஒரு வீரரின் தியாகத்தில் எந்தப் பாகுபாடும் இருக்க முடியாது. ஆனால், வழக்கமான வீரர் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு வாழ்நாள் ஓய்வூதியம், அக்னிவீரர் உயிரிழந்தால் வெறும் ஒருமுறை இழப்பீடு மட்டும் என்ற பாகுபாடு நாட்டின் பாதுகாப்புப் படைக்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானம். நாட்டின் பாதுகாப்பில் தன் உயிரையே ஈந்த ஒரு வீரரின் குடும்பத்தை,“தற்காலிக ஊழியர்” என்று கூறி ஓய்வூதியம் மறுப்பது மோடி அரசின் கொடூரமான முகத்தையே காட்டுகிறது.

போர்க்களத்திலோ அல்லது கடுமையான சூழலிலோ தங்களது உடல் உறுப்புகளைஇழந்து மாற்றுத்திறனாளியாகும் அக்னிவீரர்களுக்கு வாழ்நாள் மருத்துவச் சிகிச்சையும், குறைபாட்டிற்கான ஓய்வூதியமும் மறுக்கப்படுகிறது. “பயன்படுத்திவிட்டு எறிந்துவிடு” என்ற கார்ப்பரேட் கலாச்சாரத்தை இந்திய ராணுவத்திற்குள் புகுத்த அரசு துடிப்பது எந்த விதத்தில்நியாயம்? தங்களது இளமைக் காலத்தை நாட்டின்பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கும் இளைஞர்களுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டால் அரசாங்கம் கைவிரிக்கும் என்பது எத்தகைய நயவஞ்சகம்!

கிராமப்புற பின்னணியைக் கொண்ட இளைஞர்களின் சமூக நிலையை உணர்ந்து, பணிக்காலத்தில் திருமணம் செய்ய அனுமதிக்கப் பரிசீலிப்பதாக அரசு கூறுவது ஒரு போலி இரக்கமே.அக்னிவீரர்களின் உண்மையான கோரிக்கை திருமணத்திற்கான அனுமதி அல்ல; தங்களது எதிர்காலத்திற்கானநிரந்தரப் பணிப் பாதுகாப்பும், உயிரிழந்தால் குடும்பத்திற்கான ஓய்வூதியமுமே ஆகும். அடிப்படை வாழ்வாதார உரிமைகளை மறுத்துவிட்டு, திருமணத்திற்கு அனுமதிதருகிறோம் என்பது ‘கண்ணைக் குத்திவிட்டுக் கண்ணாடி தருவதற்கு’ச் சமம்.

தேசப்பற்று என்பது வெறும் முழக்கங்களில் இல்லை; தேசத்தைக் காக்கும் வீரர்களின் நலனைப் பேணுவதில்தான் இருக்கிறது. ராணுவத்தை செலவுக் கணக்குப் பார்க்கும் ஒரு வியாபாரநிறுவனமாகப் பார்க்காமல், அக்னிவீரர்களையும் நாட்டின் முழுநேர வீரர்களாகக் கருதி, அவர்களுக்குரிய ஓய்வூதியம், மருத்துவ உதவிமற்றும் பணிகாலப் பாதுகாப்பை முழுமையாகவழங்க வேண்டும். அரைவேக்காட்டுத் திருத்தங்களை நிறுத்திவிட்டு, அக்னிவீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மோடி அரசு செவிசாய்க்காவிட்டால், அது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பையும் இளைஞர்களின் உணர்வுகளையும் கடுமையாகப்பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.