மக்களால் விலைக்குக் கொள்ளப்பட்டவர் வழக்கறிஞர் தோழர் உ.நிர்மலாராணி! - கே.சாமுவேல்ராஜ்
16 Jun 2026, 9:07 pm

மக்களால் விலைக்குக் கொள்ளப்பட்டவர் வழக்கறிஞர் தோழர் உ.நிர்மலாராணி! - கே.சாமுவேல்ராஜ்

அலைபேசி ஒலிக்கிறது. திரையில் தோழர் நிர் மலாராணியின் பெயரைப் பார்த்து “தோழர் நலமா?” என்கிறேன். அவரோ விசாரிப்பு கள் இன்றிப் படபடக்கிறார். “மணி மாலை 5 ஆகிறது; நாளை காலை 7 மணிக்குள் திலீப்குமாரை சென்னைக்கு அழைத்து வர முடியுமா? நீங்கள் தெரிவித்த விவரங்க ளோடு அவரிடமும் நேரில் விவரங்கள் கேட்டு வழக்கை எழுத வேண்டும். வக்காலத்தில் கையெழுத்து வாங்கி காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.”

வேண்டுகோள், கட்டளை, கடப்பாடு அனைத்தும் கலந்த ஒரு மொழி அது. அவரோடு இயங்கிய வழக்கு கள் யாவும் துரிதமாகச் செயல்பட வேண்டிய தருணங்க ளாகவே இருந்தன.

“இனியும் தான் உயிரோடு இருக்க வேண்டுமா?” என்று காதலுக்காகத் தன்னையும் மாய்த்துக் கொள்கிற மனநிலையில் தான் திலீப்குமார் இருந்தார். குற்றவாளி களுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற ஆவேசம் தான் அவரது உயிரைப் பிடித்து வைத்திருந்தது. ஒருபுறம் அவரது மனநிலை, மறுபுறம் எதிரிகளால் ஆபத்து நேர்வதற்கான வாய்ப்புகள். இந்நிலையிலும் உரிய நேரத்தில் திலீப்குமாரை சென்னையில் சேர்த் தோம். அந்த இக்கட்டான நேரத்தில் திலீப்குமாரைப் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்துச் செல்லும் பணியை ஒரு தோழர் திறம்படச் செய்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும் சாதிமறுப்புக் காதலர்களின் புகலிடமும்

அவ்வாறு துரிதமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக் கில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை தோழர் உ.நிர் மலாராணி பெற்றுத் தந்தார். சாதியின் பெயரால் அச்சத்தில் தள்ளப்படுகிற காதல் இணையர்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ள அரசுத்துறைகளை நாடும் போது, காவல்துறையும் வருவாய்த்துறையும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற துல்லியமான வழிகாட்டல்கள் அத்தீர்ப்பில் இடம் பெற்றிருந்தன.

13.04.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி யரசர் வி.இராமசுப்பிரமணியம் வழங்கிய இந்தத் தீர்ப்பு உண்மையில் சிறப்பானது. அதனை உறுதியுடன் நிறை வேற்றாமல் இருப்பது அரசின் குறைபாடு. சமூகஅழுத் தம், சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் இத்தீர்ப்பைப் புது வேகத்துடன் செயல்பாட்டிற்குக்கொண்டு வரவேண்டும்.

அருப்புக்கோட்டை பொது விசாரணையும் விளிம்புநிலை மக்கள் உரிமையும்

விருதுநகர் மாவட்டத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். சாதியப் பாகுபாடுகளும் அரசுத் துறைகளில் ஊடுருவி இருந்த பாரபட்சங்களும் தலித் மக்களின் உரிமைகளை மறுத்தே வந்தன. 2009ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பில் தலித் மக்க ளின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக ஒரு பொது விசாரணையை நடத்தினோம். பொதுவிசாரணையின் வரம்புகளை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பு நல்கியதோடு, நீதிபதிகளில் ஒருவராகவும் தோழர் உ.நிர்மலாராணி பங்கேற்றார். அன்றைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.முத்துராஜ், ‘எவிடன்ஸ்’ கதிர் ஆகியோர்க ளும் நீதிபதிகளாகச் செயல்பட்டுப் பொது விசாரணை யை வழி நடத்தினார்கள்.

புறக்கணிப்புகள், அவமானங்கள், அநீதிகளின் வலிக ளோடு 15க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டோம். பொது விசாரணைகள், தனி யார் தீர்ப்பாயங்கள் என்பவை சமூகத்தின் தேவையிலி ருந்து பிறந்த ஒரு போராட்ட வடிவமே. அரசு தனது கடமைகளில் இருந்து தவறுகிற போது, இப்படிப்பட்ட தனி யார் தீர்ப்பாயங்கள் நடத்தப்படுகின்றன. இதன் பரிந்துரை கள் வழியாக அரசு மற்றும் சமூகத்தின் மீது அழுத்தம் செலுத்த இவ்வடிவம் பயன்படுத்தப்படுகிறது.

‘பட்டா இங்கே... நிலம் எங்கே?’ - விசித்திரப் போராட்டங்களும் தீர்வுகளும்

குறிப்பிட்ட நாளில் காலையில் துவங்கிய வழக்கு விசா ரணைகள் மாலை வரை நீடித்தன. மாவட்ட நிர்வாகத் தால் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் மீது தனியாகப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. உடனடி யாக அதற்குத் தீர்வு காண அன்றைய தினமே இரவு 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உதவியு டன் சந்தித்தோம்.

பொது விசாரணையில் வந்த குறிப்பிடத்தக்க பிரச்ச னைகளில் ஒன்று “பட்டா இங்கே, நிலம் எங்கே?” என்பது. அருப்புக்கோட்டை நகர் காளியம்மன் கோவில் தெரு வைச் சார்ந்த பட்டியலின மக்களின் கைகளில் பல ஆண்டு களாகப் பட்டா ஆவணம் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டாவிற்கான நிலம் எங்கே என்று அடையாளம் காட்டப் படவோ, அளந்து கொடுக்கப்படவோ இல்லை. இதனை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அடுத்த நாளே இடம் அடையாளம் காணப்பட்டு, இரண் டொரு நாட்களில் முட்புதர்கள் அகற்றப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்ட நிலம் பயனாளிகளுக்கு அளந்து அத்துக்கட்டி தரப்பட்டது.

காணாமல் போகவிருந்த குடியிருப்புக்கு முகவரி தந்த மாண்பு

மற்றொரு விசித்திரமான பிரச்சனையும் விசாரணை க்கு வந்தது. அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் இருக்கும் சுக்கிலநத்தம் கிராம ஊராட்சி. அந்த ஊராட்சியின் ஒரு பகுதியாக இருக்கிற ‘அம்பேத்கர் குடியிருப்பு’ என்கிற தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கிற பகுதியை, ஊராட்சியிலிருந்து பிரித்து அருப்புக்கோட்டை நகராட்சி யோடு இணைப்பது என்று ஒரு தீர்மானத்தை ஊராட்சி மன்றம் அம்மக்களுக்கே தெரியாமல் இயற்றிவிட்டது. அப்பகுதி மக்கள் ஊராட்சியை தொடர்பு கொண்டால் “நகராட்சியோடு இணைக்கப்பட்டு விட்டது” என்றும், நக ராட்சியில் கேட்டால் “அது எங்களுடைய பகுதி இல்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது.

“அம்பேத்கர் குடியிருப்பு எங்கே இருக்கிறது?” என்கிற கேள்வியை முன்வைத்து நீதிமன்றத்தை நாடுவோம் என்று பொதுவிசாரணையில் தெரிவித்து, உடனடியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்ய விரைவான நடவடிக்கைகள் மேற் கொண்டார் தோழர் உ.நிர்மலாராணி. மக்களின் ஒப்புத லின்றி ஊராட்சியிலிருந்து பிரிக்கப்படுவது ஏற்புடைய தல்ல; அவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் கிரா மத்தைச் சார்ந்தே இருக்கிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்புச் சட்டம் போன்ற ஊரகத் திட்டங்க ளின் பயன்களைப் பெறுவது உள்ளிட்ட பிரச்சனைகள் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டன.

மேற்கண்ட வழக்கில் சுக்கிலநத்தம் ஊராட்சியின் ஒரு பகுதியாகவே அம்பேத்கர் குடியிருப்பு நீடிக்கிறது என்று உத்தரவிடப்பட்டது. தனக்கு மட்டுமல்ல, தன் குடியிருப்பு க்கும் முகவரியைப் பெற்றுக் கொடுத்த மகிழ்ச்சியோடு மக்கள் அம்பேத்கர் குடியிருப்பில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். தோழர் நிர்மலாராணி இந்த விழாவில் பங்கேற்று மக்களோடு ஒன்றியிருந்தார். “எவ்வ ளவு பணம் கிடைத்தாலும், எத்தனை பெரிய விருதே கிடைத்தாலும் இந்த மகிழ்ச்சிக்கு இணையில்லை தோழர்” என்று கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி கூறினார். “உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் தோழர்” என்று விடை கொடுத்தோம்.

ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரலாய் ஒலித்த சட்டப் போராளி

அவரது பங்களிப்புகளை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தலித் அருந்ததியர் சமூக மக்களின் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், அதை எதிர் த்துத் துரிதமாகச் செயல்பட்டது; உத்தப்புரத்தில் 2008 அக்டோபர் 1, 2 தேதிகளில் பட்டியலின மக்கள் மீது காவல் துறை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக நீதிமன் றத்தில் மனுத்தாக்கல் செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிவாரணமாகப் பெற்றுக் கொ டுத்தது எனப் பலவற்றைச் சொல்லலாம்.

எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்டங்களை நடைமுறைப் படுத்திட 2023இல் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முன்வந்த போது, அதற்கான தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வரைவுச் சட்டத்தை வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட வரைவுக் குழுவுடன் இணைந்து உருவாக்கியது என நிறைய சந்தர்ப்பங்களில் எங்களோடு இயங்கினார். சில நேரங்களில் இயக்கினார் என்று கூடக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு மிகச்சிறந்த ஈடுபாட்டைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடும் மக்கள் இயக்கங்களின் மீதும் அவர் வைத்திருந்தார்.

அரசமைப்புச் சட்டத்தின் அறமாக வாழ்ந்த வழக்கறிஞர்

வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் அறத்தின் அடிப்படை யில் உயர்ந்த தரநிலைகளுடன் செயல்பட வேண்டியது சமூகத்தின் இன்றையத் தேவையாக இருக்கிறது. இந்திய அரசமைப்பில் “வழக்கறிஞர்களின் அறநெறி” பற்றி நேரடியாக ஒரு தனிப் பிரிவு இல்லை. ஆனால், அரசமைப்பின் அடிப்படை மதிப்புகள் வழக்கறிஞர்க ளின் கடமைகளை நிர்ணயிக்கின்றன. அதன்படி அரச மைப்பின் முகப்புரை, நீதி, சுதந்திர, சமத்துவ, சகோத ரத்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்த வழக்கறி ஞர்கள் நேரடியாகக் கடமையாற்ற முடியும்.

இந்திய அரசமைப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. பிரிவு 21 உயிர் மற்றும் தனிநபர் சுதந்திர உரிமை பற்றிப் பேசுகிறது. பிரிவு 39A ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்கிறது. இந்திய அரசமைப்பில் வடிக்கப்பட்ட மேற்கண்ட நோக்கங்களை ஒரு வழக்க றிஞர் என்ற முறையில் தன் இலக்காக வைத்து இயங்கி யவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி.

மக்கள் இயக்கங்களில் என்றும் நிலைத்திருப்பார்!

“நீங்கள் தேவனால் விலைக்குக் கொள்ளப்பட்ட வர்கள் ஆகையால் தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்று விவிலியத்தில் ஒரு வாக்கியம் இருக்கிறது. தோழர் உ.நிர்மலாராணி அவர்களோ மக்களால் விலைக்குக் கொள்ளப்பட்டவர். எனவே, என்றும் அவர் மக்களை மகி மைப்படுத்துகிறவராக, மக்களின் மதிப்பை மேம் படுத்துகிறவராகவே வாழ்ந்தார்.

அறநெறிகளுடன் கூடிய ஒரு வழக்கறிஞர் என்பதால் மட்டுமல்ல, குழந்தையாக இருந்தது முதல் அவருக்கு வாய்த்த பொதுநலனையே முதன்மையாகக் கொண்ட குடும்பச் சூழல் கண்ணியமும், அறச்சீற்றமும் கொண்ட நிர்மலாராணியைச் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறது. வழக்கறிஞர் தோழர் உ.நிர்மலாராணி தனது பங்களிப்பு களின் வழியே மக்கள் இயக்கங்களில் என்றும் நிலைத்திருப்பார்!

ஜூன் 16- திருச்சியில் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி படத்திறப்பு நிகழ்வையொட்டி எழுதப்பட்ட கட்டுரை)