வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி
24 May 2026, 10:54 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

அதானி ராய்கேடா அனல்மின் நிலையம் : நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி ‘டிஜிட்டல்’ வழியில் திரண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள்;

சத்தீஸ்கர் மாநிலத்தை அதிரவைத்த ‘ஜோஹார்’ முழக்கம்!

வேலைநிறுத்தம் 32

ராய்ப்பூர், மே 24- சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா தொழில் மண்டலத்தில் வெடித்த தொழிலாளர் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, ராய்ப்பூர் மாவட்டத்தின் தில்தா பகுதியில் அமைந்துள்ள அதானி குழுமத்திற்குச் சொந்த மான ‘ராய்கேடா அனல்மின் நிலைய மும்’ (Raikheda Thermal Power Station) ஒப்பந்தத் தொழிலா ளர்களின் போர்க்குணமிக்க போரா ட்டக் களமாக மாறியுள்ளது. ஆலை நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகள் மற்றும் நீதிமன்றத்தின் தடை உத்த ரவுகளையும் கடந்து, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியோடு (Digital Mobilization) தொழிலா ளர்கள் தங்களின் உரிமைகளுக்கா கத் தன்னிச்சையாகத் திரண்டு நடத்திய இப்போராட்டம், சத்தீஸ்கர் மாநிலத் தொழிலாளர் இயக்க வர லாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இத்தொடரின் 32-வது பகுதியில், இந்தத் தீரமிக்க போராட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

அதானியால் கைப்பற்றட்ட நிறுவனம்

ராய்ப்பூர் மாவட்டத்தின் ராய்கேடா கிராமத்தில் அமைந்து ள்ள இந்த நிலக்கரி அடிப்படை யிலான அனல்மின் நிலையம், தொடக்கத்தில் ‘ஜிஎம்ஆர் சத்தீஸ்கர் எனர்ஜி லிமிடெட்’ (GCEL) நிறு வனத்தால் சுமார் 12,400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட் டது. கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, கடந்த ஆகஸ்ட் 2019-ல் இது ‘அதானி பவர் லிமிடெட்’ (APL) நிறுவனத்தால் கையகப்படுத்தப் பட்டது. தற்போது 1,370 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலையில் மேலும் 2,970 மெகாவாட் விரிவாக்கப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வா லையின் விரிவாக்கக் கட்டுமானப் பணிகளில் மட்டும் சுமார் 3,000 முதல் 5,000 ஒப்பந்தத் தொழிலா ளர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

திமன்றக் கட்டுப்பாடுகளும் தொழிலாளர்களின் தன்னெழுச்சியும்

ஆலையில் நிலவும் உழைப்புச் சுரண்டல், முறையற்ற ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு இன்மைக்கு எதிராக, வலதுசாரி சார்புடைய பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) தொழிற்சங்கம் முத லில் போராட்டத்திற்குத் திட்டமிட் டது. ஆனால், ராய்ப்பூர் தொழி லாளர் நீதிமன்றம் இந்த ஆலையில் வேலைநிறுத்தம் செய்ய ஆறு மாதங்களுக்குத் தடை (Gag Order) விதித்ததால், அந்த அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் போராட்டப் பிரச்சா ரத்தில் இருந்து பின்வாங்கியது.

இருப்பினும், தொழிற்சங்கத்தின் பின்வாங்கலால் தொய்வடையாத ஒப்பந்த மற்றும் புலம்பெயர் தொழி லாளர்கள், தங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களை முதன்மைப் பிரச்சா ரக் கருவியாக மாற்றி, தன்னிச்சை யாகப் போராட்டக் களத்தில் குதித்த னர். குறிப்பாக, 2025 டிசம்பரில் சமூக ஊடகங்களில் வைரலான 74 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ பதிவு, 1,600-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை ராய்கேடா ஆலை வாயிலில் தர்ணா போராட்டத்திற்காகத் திரட்டியது. “சத்தீஸ்கர் மக்கள் மீதான சுரண்டல் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? சத்தீஸ்கரே விழித்தெழு! ஜோஹார்!” (Johar!) என்ற அதிரடி முழக்கத்துடன் வெளியான இந்த வீடியோ, தொழிலாளர்கள் மத்தியில் மாபெரும் வர்க்க எழுச்சியை உருவாக்கியது.

பிப்ரவரி 12 தேசிய வேலைநிறுத்தமும் வாட்ஸ்அப் கமிட்டிகளும்

கடந்த பிப்ரவரி 12, 2026 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு விடுத்த தேசிய பொது வேலை நிறுத்த அழைப்பு, இந்த ஆலையில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிஎம்எஸ் (BMS) தலைவர்கள் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் “நன்மை கள்” குறித்துப் பேசிக் கொண்டி ருந்த வேளையில், ஒப்பந்தத் தொழி லாளர்கள் தங்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பானிபட் மற்றும் சிங்க்ரோலி போராட்ட வீடியோக் களைப் பகிர்ந்து கொண்டு வேலை நிறுத்தத்திற்குத் தயாராகினர்.

ராய்கேடா மற்றும் கைதாரா ஆகிய தொழிலாளர் குடியிருப்பு களில் அமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் கமிட்டிகள்’ (Digital Committees) மூலமாக வேலைநிறுத்த நேரமும், கூடும் இடங்களும் இரகசியமாகப் பகிரப்பட்டன. இதன் விளைவாக, தேசிய வேலைநிறுத்தத்தன்று ஆலையின் அத்தியாவசியமற்ற சேவைகள் அனைத்தும் முழுமை யாக முடங்கின. ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ போன்ற விவசாய அமைப்புகளும் இப்போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்ததால், உள்ளூர் கிராம மக்களும் தொழி லாளர்களோடு கரம் கோர்த்தனர்.

மார்ச் - ஏப்ரல் மாதம் போராட்டங்கள்

மார்ச் மாத மத்தியில், மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ரோலி அதானி ஆலையில் ஒரு தொழிலாளி மரண மடைந்ததைத் தொடர்ந்து வெடித்த வன்முறைக் கிளர்ச்சியின் வீடி யோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ராய்கேடா ஆலைக்கும் பரவின. இதனால் ஆத்திரமடைந்த பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 6,000-க்கும் மேற்பட்ட அதானி நிறுவன ஒப்பந்த உழைப்பாளர்கள் தங்க ளின் பணிகளைப் புறக்கணித்து வெளியேறினர். அவர்கள் வெறும் ஊதிய உயர்வை மட்டும் கோராமல், பணியிடங்களில் நிழற்குடைகள், தூய்மையான குடிநீர் மற்றும் வெப்பம் மிகுந்த பகுதிகளில் பணி யாற்றுபவர்களுக்கான முறையான பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அடிப்படை மனித வசதிகளைக் கோரிப் போராடினர்.

ஏப்ரல் 1 அன்று புதிய தொழி லாளர் சட்ட விதிகளுக்கு எதிராக ‘கருப்பு தினம்’ அனுசரிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 14 அன்று பக்கத்து மாவட்டமான சக்தியில் (Sakti) நடந்த ஒரு கொதிகலன் வெடிப்பு விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூரம், ராய்கேடா தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதி கரித்தது. ஆலை விரிவாக்கப் பணி கள் அவசர அவசரமாக நடப்பதால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி தொழிலாளர் கள் மீண்டும் ஆலை வாயில்களில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தற்போதைய நிலவரம்

மின் விநியோகக் கட்டமைப்பு முழுமையாக முடங்குவதைத் தடுக்க, மாநில அரசும் நீதிமன்றமும் மீண்டும் தலையிட்டு, 60 நாட்கள் முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட இப்போராட்டத்தை ‘சட்டவிரோத வேலைநிறுத்தம்’ எனப் பிரகடனப் படுத்தி, கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை எச்சரி க்கைகளுடன் கூடிய புதிய தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

நீதிமன்ற உத்தரவுகளால் தற்போது ஆலையில் ஒரு தற்காலிக அமைதி நிலவினாலும், நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்காமல் ‘ரித்தி கார்ப்ப ரேட் சர்வீசஸ்’ (Riddhi Corporate Services) போன்ற இடைத்தரகு நிறுவனங்கள் மூலம் தங்களைச் சுரண்டுவதற்கு எதிராகத் தொழி லாளர்களின் எழுச்சி நீடிக்கிறது. தற்போது மே மாத மத்தியில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் பெயர்கள், பணி ஆண்டுகள் மற்றும் தங்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்கக் கோரும் “வீடியோ மனுக்களை” சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றி, தங்களின் போராட்ட வடிவத்தை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். தி லெப்ட் வியூஸ்