இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்குப் பேரடி கொடுத்த அப்துல் எல்-சயீத்தின் வெற்றி!
19 Nov 2026, 5:42 pm

தனது முஸ்லிம் அடையாளத்தை வெளிப்படையாக முன்னிறுத்தி, காஸா விவகாரத்தையும் தேர்தல் களத்தில் எழுப்பி வெற்றி பெற்றுள்ள அப்துல்ரஹ்மான் முகமது எல்-சயீத், அமெரிக்க ஜனநாயகக் கட்சியினருக்கு புதிய அரசியல் பாதையை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினரை அவர்களின் நாடாளுமன்றப் பெரும்பான்மையிலிருந்து அகற்றி, ஜனநாயகக் கட்சியினரை மீண்டும் அரசியல் கவனத்தின் மையத்துக்குக் கொண்டுவந்த வெற்றியைப் பலரும் அரசியல் பூகம்பம் என்றும், பெரும் அலையென்றும் வர்ணிக்கின்றனர்.

அந்தத் தேர்தல் வெற்றிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது, டிரம்ப்பின் ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளர் மைக் ரோஜர்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் பெற்ற வெற்றியாகும். மைக் ரோஜர்ஸின் தேர்தல் பிரச்சாரத்துக்கு டொனால்டு டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குடன் தொடர்புடைய குடியரசுக் கட்சியின் சூப்பர் பிஏசி அமைப்புகள் உள்ளிட்ட வெளிப்புற அமைப்புகள் மூலம் சுமார் ரூ.1,579 கோடி (169 மில்லியன் டாலர்) நிதி செலவிடப்பட்டது. இத்தகைய பெரும் நிதி பலத்தையும் மீறி அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க செனட் சபையில் இடம்பெறும் முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

வெற்றியை அறிவித்தபோது அப்துல் எல்-சயீத்தின் முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. அமெரிக்க அரசியலை அமைதி மற்றும் மனிதநேயத்தின் பாதையில் மாற்றியமைப்பதற்கான புதிய பார்வையை அவரது வெற்றி உரை முன்வைத்தது.

தனது உரையில், “மிச்சிகன் மக்களே, நமது வரிப்பணம் இங்குள்ள பள்ளிகளுக்கும், சுகாதாரத்துக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் செலவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நிறவெறி ஆட்சி, இனப்படுகொலை அல்லது போர் நடத்துவதற்காக நமது பணம் அனுப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

“எனது பெயர் அப்துல் ரஹ்மான் முகமது எல்-சயீத். உங்கள் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு நிற்பதைப் பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன்” என்று அவர் கூறியபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது வலதுசாரி ஆதரவாளர்கள் அவரது முழுப் பெயரைக் குறிப்பிட்டு, அவரை ‘பயங்கரவாதி’, ‘ஜிகாதி’, ‘அமெரிக்க மக்களுக்கு ஆபத்தானவர்’ என முத்திரை குத்த முயன்றனர். டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அவரது பெயரை கேலி செய்தனர். ஆனால், தனது அரபு மொழி உச்சரிப்புடன் முழுப் பெயரையும் பெருமையுடன் உச்சரித்ததன் மூலம் அந்த இழிவுபடுத்தல்களுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “டொனால்டு, எனது பெயரைச் சரியாக உச்சரிப்பதில் உங்களுக்குச் சிரமம் இருந்தது என எனக்குத் தெரியும். எனவே, ஜனவரியில் எனக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு, என்னை ‘செனட்டர்’ என்று அழைத்தால் போதும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதற்கும் அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும், “இந்தத் தேர்தலின் முடிவு குறித்துப் பேசும்போதெல்லாம் நான் ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்று கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், இன்று இரவு அந்த ‘இன்ஷா அல்லாஹ்’ என்பதை...” என்று அவர் கூறியதும், சில விநாடிகள் கழித்து அரங்கில் இருந்த அனைவரும் ஒரே குரலில் “அல்ஹம்துலில்லாஹ்!” (இறைவனுக்கே எல்லாப் புகழும்) என்று முழக்கமிட்டனர். தொடர்ந்து, “அப்துல்! அப்துல்!” என்று அரங்கம் முழுவதும் முழக்கங்கள் எழுந்தன.

அப்போது புன்னகையுடன் பேசிய அப்துல் எல்-சயீத், “வலதுசாரி பிரச்சாரக் குழுக்களே, இதற்கு ‘இறைவனுக்கே எல்லாப் புகழும்’ என்று அர்த்தம்” எனக் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்களிடையே மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதேநேரத்தில் புனிதமானதாகவும் கருதப்படும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற சொல் அரங்கில் முழங்கியதும், முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் குறித்துப் பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு வந்த ஆழமான தவறான பிம்பம் தகர்க்கப்படுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அமெரிக்க அரசியலில் அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கும் இது பெரும் சவாலாக அமைந்தது.

குறிப்பிடத்தக்க கொள்கைச் சாதனைகள் எதையும் முன்வைக்க முடியாத நிலையிலும், டொனால்டு டிரம்ப் மீதான மக்கள் ஆதரவு குறைந்திருந்த சூழலிலும், குடியரசுக் கட்சியினர் அப்துல் எல்-சயீத்துக்கு எதிராகத் தீவிரமான மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

அவர் எதிர்கொண்ட தாக்குதல்கள் தனிப்பட்ட அரசியல் விமர்சனங்கள் மட்டுமல்ல. சமூக ஊடகங்கள், சட்ட முன்மொழிவுகள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் எனப் பல தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அவை அமைந்திருந்தன.

ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களை ஆய்வு செய்யும் மையத்தின் (CSOH) அறிக்கையின்படி, 13 மாத காலத்தில் 89 குடியரசுக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 46 பேர் சமூக ஊடகங்களில் 1,111 பதிவுகளை வெளியிட்டுள்ளனர். ஷரியா சட்டம் தொடர்பாக எட்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ‘ஷரியா இல்லாத அமெரிக்கா’ என்ற நாடாளுமன்றக் குழுவில் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் 62 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

முஸ்லிம் எதிர்ப்பு மனநிலை என்பது மக்களிடையே ஆழமாக வேரூன்றிய, மாற்ற முடியாத ஒன்றாக இருப்பதைப் போல அவர்கள் சித்தரித்தனர். ஆனால், உண்மையில் பெரும் பணக்கார நிதியாளர்களின் கோடிக்கணக்கான டாலர் நிதியுதவியுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வெறுப்புணர்வே இதற்குக் காரணம். அவர்களில் பெரும்பாலானோர் சியோனிச ஆதரவாளர்கள்.

“எனது பெயரையும், எனது பின்னணியையும் கொண்ட ஒருவர், அதாவது ஒரு முஸ்லிம், தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று அரசியல் ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக அப்துல் எல்-சயீத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பிறராகச் சித்தரித்து உருவாக்கப்பட்ட நச்சுத்தனமான இஸ்லாமிய வெறுப்பு அரசியலை எதிர்கொள்ளும் சவாலை அப்துல் எல்-சயீத் ஏற்றுக்கொண்டார்.

தன்னைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் முயற்சிகளுக்கு அவர் அடிபணியவில்லை. ‘நாம்’, ‘அவர்கள்’ என்று மக்களைப் பிரிக்கும் செயற்கையான பிளவுகளையும் ஏற்கவில்லை. மாறாக, தனது பேச்சாற்றலாலும், நேரடியான அணுகுமுறையாலும் அவற்றுக்குப் பதிலளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிப் பொதுக்கூட்டத்தில் அவரது மனைவி டாக்டர் சாரா ஜுகாகு அறிமுக உரையாற்றும்போது, “அப்துல் எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் அவர் வெளிப்படுவார். எந்த நிறுவனமும், எந்தப் பெரும் பணக்காரரும், எந்தச் சுயநலக் குழுவும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று யாரும் அவருக்குக் கட்டளையிட முடியாது” என்று தெரிவித்தார்.

பன்முகத்தன்மை, ஒற்றுமை, ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்தும் சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மனிதநேய அரசியலை அவர் முன்வைத்தார். அந்த அரசியல் பார்வையின் ஒரு பகுதியாக காஸா விவகாரத்தையும் தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்சினையாக மாற்றினார்.

அப்துல் எல்-சயீத் ஓர் அமெரிக்கர்; மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியைச் சேர்ந்தவர்; மருத்துவர்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர். தனது தாயாருடன் ஊஞ்சலில் அமர்ந்து பேசுவது, தாத்தா பாட்டியின் பின்னால் நின்று காணொலியில் தோன்றுவது எனத் தனது குடும்பப் பின்னணியையும் மத்திய மேற்கு அமெரிக்கப் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.

டெட்ராய்ட் மற்றும் வேய்ன் கவுண்டி பகுதிகளில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16,000 குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகள் கிடைக்க உதவும் வகையில் பொதுச் சுகாதாரத் துறையில் அவர் பணியாற்றியுள்ளார்.

அதேநேரத்தில், நீண்ட மத்திய கிழக்கு பெயரைக் கொண்ட, அரபு மொழி பேசும் ஒரு முஸ்லிம் என்பதையும் அவர் மறைக்கவில்லை. ஓர் அமெரிக்கராகவும் முஸ்லிமாகவும் தனது அடையாளத்தை வெளிப்படையாக முன்வைப்பதன் மூலம், முஸ்லிம்களை மனிதநேயமற்றவர்களாகச் சித்தரித்து வந்த பொய்ப் பிரச்சாரங்களை அவர் அம்பலப்படுத்தினார்.

மிச்சிகனின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்தித்தார். அப்பர் பெனின்சுலா பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பழமைவாதிகளிடமும் ஆதரவு திரட்டினார். அவரது மத அடையாளத்தை அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக ஊடகங்கள் சித்தரித்தபோதும் அவர் பின்வாங்கவில்லை.

இஸ்லாம் குறித்தும் தனது மத அடையாளம் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார். தன்னை ‘வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்தும் குறுகிய மனப்பான்மையை நிராகரித்தார். யூத மதம், கிறிஸ்தவம் ஆகியவற்றுடன் இஸ்லாத்துக்கு உள்ள தொடர்புகளையும் எடுத்துரைத்தார்.

யூதர்களின் புத்தாண்டான ரோஷ் ஹஷானா விருந்தில் பங்கேற்றபோது பதிவு செய்யப்பட்ட காணொலியில், யூதப் பெண்களுடன் அவர் உரையாடுகிறார். அவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட குகெல் உணவைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்பாகப் பிரார்த்தனை செய்வதையும் காணொலி காட்டுகிறது.

மதம் குறித்துப் பேசுவதற்குப் புதிய அணுகுமுறைகளையும் அவர் உருவாக்கினார். தனது தேர்தல் விளம்பரக் காணொலி ஒன்றில், தான் பிரார்த்தனை செய்வதாகவும், நம்முடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் அனைவருக்கும் தேவை என்றும் அவர் கூறுகிறார்.

அந்த விளம்பரத்தின் இறுதியில், “நான் அப்துல் எல்-சயீத். நம்பிக்கையுள்ள ஒரு மனிதன். அது ஒரு நல்ல விஷயம்தான்” என்று குறிப்பிடுகிறார்.

போர் – பொருளாதாரம்: இரண்டையும் இணைத்த அரசியல்

தேர்தல் வெற்றி உரையில், போர் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை மீண்டும் அவர் சுட்டிக்காட்டினார். குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்பதை அவரது பேச்சு விளக்குகிறது.

“இரண்டாவது பை நிறைய மளிகைப் பொருட்களை வாங்குவதற்கோ, வாகனத்தில் எரிபொருள் நிரப்புவதற்கோ இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கக் கூடாது. உலகின் மிகப்பெரிய பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாட்டில் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்குக்கூட இவ்வளவு சிரமம் இருக்கக் கூடாது. நாம் செலுத்தும் வரிப்பணம் நமக்கும் நமது குழந்தைகளுக்கும் பயன்படாமல், வேறொரு நாட்டின் மக்கள் மீதும் அவர்களின் குழந்தைகள் மீதும் குண்டுகளை வீசுவதற்குச் செலவிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் போர்களால் பாதிக்கப்படும் மக்களின் துயரத்தையும், அதேநேரத்தில் சொந்த நாட்டிலேயே அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் தவிக்கும் மக்களின் துயரத்தையும் அவரது வார்த்தைகள் ஒன்றிணைத்தன.

அமெரிக்க அரசியலின் எல்லைகளை விரிவுபடுத்தும் வகையில் தனது குரலை அவர் பயன்படுத்தினார். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் இடமளிக்கும் பரந்த மனப்பான்மை கொண்ட அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்ற புதிய பார்வையை முன்வைத்தார்.

வன்முறை, வெறுப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட டிரம்ப்பின் குறுகிய அரசியல் அணுகுமுறைக்கு மாறாக, அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை அவர் வலியுறுத்தினார்.

தனது உரையின் இறுதியில், “அமெரிக்காவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் சொந்தமான நாடு நமக்குத் தேவை. எனவே, மிச்சிகன் மக்களே, அத்தகைய அமெரிக்காவை நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்” என்று அறைகூவல் விடுத்தார்.

அப்துல் எல்-சயீத்தின் வெற்றி, அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அடியாகும்.

மாறாக, மகிழ்ச்சி, அக்கறை, கவலை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலின் அடையாளமாக அவர் திகழ்கிறார். போர்கள் நிறைந்த இன்றைய உலகில், நமது கற்பனையிலிருந்தே மறைந்து கொண்டிருக்கும் மனிதநேயமிக்க அமெரிக்காவை உருவாக்குவதற்கான சாத்தியத்தையும் அவரது வெற்றி வெளிப்படுத்துகிறது.

ஆதாரம்: அல்-ஜசீரா