பயிர்கள் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியில் இணையதள செயலி முறையை கைவிடுக! டிச.11- விவசாயிகள் சங்கம் சாலை மறியல் அறிவிப்பு
7 Dec 2025, 3:52 pm
<p><strong>பயிர்கள் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியில் இணையதள செயலி முறையை கைவிடுக! டிச.11- விவசாயிகள் சங்கம் சாலை மறியல் அறிவிப்பு</strong></p>
<p>திருவாரூர், டிச.7- திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் சேதத்தினை கணக்கெடுக்க இணைய செயலிகள் (Web Apps) பயன்படுத்துவதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையினை ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் சாலை மறியல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் கே.முருகையன், எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி விவசாய சங்கங்களின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், கே. ஜோசப் உள்ளிட்டோர் உரையாற்றினர். டிட்வா புயல் காரணமாக பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்களை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் அரசு இணைய செயலியின் மூலமாக கணக்கெடுப்பதை உடனடியாக கைவிட்டு நேரடியாக ஆய்வு செய்யும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். டிட்வா புயல் மழையால் நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களையும், அழுகும் நிலையில் உள்ள சம்பா, தாளடி நெற்பயிர்களையும் கணக்கெடுக்கும் பணியினை வருவாய்த் துறையும் வேளாண்மை துறையும் விரைவாக நடத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கிட வேண்டும் எனக் கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களின் தலைநகரங்களிலும் மாபெரும் சாலை மறியல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கே.சுப்பிரமணியன், ஜி.பவுன்ராஜ், எஸ்.சாமிநாதன், எம்.ஜெயபிரகாஷ், பி.சௌந்தர்ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர், டி.தியாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் கே.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
