திருச்சி விரைவு செய்திகள்
15 Dec 2025, 5:05 pm

திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த பெண் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

பாபநாசம், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தென்னஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி குணவதி(35). இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குணவதிக்கு உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற, ஜீவானந்தம் குணவதியை, காரில் பாபநாசத்திற்கு அழைத்து வந்தார். அப்போது திடீரென்று குணவதிக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, செல்லும் வழியிலேயே குணவதி உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கபிஸ்தலம் அருகே நகை திருட்டு

பாபநாசம், டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசதச்தை அடுத்த கபிஸ்தலம் அருகே, புள்ளப்பூதங்குடி, நரசிம்மபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சங்கீதா(40). பாலாஜி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சங்கீதாவின் தங்கை மகன் ஜான் பீட்டர்(21) சங்கீதாவின் வீட்டில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஜான் பீட்டர் மற்றும் அவரது நண்பர்களான தினேஷ்(19), வசந்தகுமார்(19) ஆகியோர் சங்கீதாவின் வீட்டிலிருந்து 10 சவரன் நகைகள், 2 ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, ஜான் பீட்டர், தினேஷ், வசந்தகுமாரை கைது செய்தனர்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்குவதில் முறைகேடு: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.15- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, விளக்குடி கிராமத்தில் சுமார் 4000 பேர் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு கொள்ளிட கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொள்ளிட கூட்டு குடிநீரை சட்டவிரோதமாக வீட்டிற்கு இணைத்துள்ளனர். இதனால், அப்பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சென்றடையாமல், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசுக்கு பணம் செலுத்தாமல் சட்ட விரோதமாக வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வைத்துள்ள நபர்களை தனித்தனியாக கேட்காமல், பொதுவாக விளக்குடி கிராமத்தில் விளம்பரம் செய்து, முன்னறிவிப்பு மூலம் நோட்டீஸ் கொடுத்து. காவல்துறை உதவியுடன் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி திருவாரூர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சுரேஷ்பாபுவிடம் பலமுறை புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாய்மொழியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கிறார். நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதில்லை. மக்களுடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறக்கூடிய அலுவலர்கள் கண்டும் காணாமல் இருப்பது, பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. புகார் மனு மீது, விரைவில் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப் படுத்தினால் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் வழி வகுக்கும். தொடர்ந்து, பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.