கல்லுடைத்த கை கவிதையும் எழுதியது! - மதுக்கூர் இராமலிங்கம்
17 Nov 2025, 3:10 pm

கல்லுடைத்த கை கவிதையும் எழுதியது!

‘கப்பலோட்டிய தமிழர்’ , ‘செக்கிழுத்த செம்மல்’ என்றெல்லாம் புகழப்படுகிற வ.உ.சிதம்பரனார், திருக்குறளின் மீது தீராத காதல் கொண்டவர். இதன் காரணமாகவே புழக்கத்தில் இருந்த திருக்குறளுக்கான பரிமேலழகர் உரையிலிருந்த பல்வேறு பிழைகளைச் சுட்டிக்காட்டி, திருக்குறளுக்கு மிக நெருக்கமாக இருக்கும் மணக்குடவர் உரையை முதன் முறையாக பதிப்பித்தவர். 1932ஆம் ஆண்டு திருச்செந்தூரில் மணக்குடவர் உரையை தமிழறிஞர்கள் முன்னிலை யில் அரங்கேற்றியவர்.

அப்போது அங்கிருந்த தமிழ்ப்புலவர் ஒருவர், நீங்கள் கூறிய விளக்கங்களுக்கு எழுத்துப்பூர்வ ஆதாரம் உண்டா? இல்லையெனில் நாங்கள் எப்படி ஏற்க முடியும் என்று கேட்டதற்கு, வ.உ.சி., “திருவள்ளுவர் யார் என்று உமக்குத் தெரியுமா? அவர் என் பாட்டனுக்கு பாட்டனார். அதனால் அவர் உணர்வை நான் பெற்றுள்ளேன். அதற்கு ஏட்டுப்பிரதி ஆதாரம் தேவையில்லை” என்று முழங்கியுள்ளார்.

வ.உ.சி.யின் குருநாதர் என்று கருதப்படும் லோகமான்யத் திலகர் வஉசி சுதேசிக் கப்பல் வாங்க முயன்ற போது பேருதவி செய்தவர். ஆனால் பல்வேறு விசயங்களில் திலகரோடு முரண்பட்டவர் வ.உ.சி. குறிப்பாக, திலகர் பகவத் கீதைக்கு உரை எழுதினார் என்றால், வ.உ.சி.யோ திருக்குறள் உரையை பதிப்பித்ததோடு, தன் வாழ்நாள் முழுவதும் விடுதலைப் போராட்டக் கனலை ஊதி வளர்த்ததோடு திருக்குறளை பரப்பு வதையும் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இதிலிருந்தே இருவரது நோக்கையும், போக்கையும் புரிந்து கொள்ள முடியும்.

“தென் புலத்தார் தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” - என்ற 45வது குறளில் வரும் தென்புலத்தார் என்பதை பலரும் பிதுர்கள் என்று பொருள் கொண்டு, ‘அவர்களது ஆன்மா சாந்தியடைய சிரார்த்தம் செய்ய வேண்டும் என்றே கூறினர். ஆனால் வ.உ.சி. இதை மறுத்து சிரார்த்தம் செய்து பிராமணர் களுக்கு அளிக்கப்படும் அரிசி, காய்கறி முதலியன வழங்குவது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்வது கிடையாது, அப்படியே முன்னோர்கள் தங்கள் பிள்ளைகள் மூலம் வாங்கப் பிரியப்படுவார்களே அன்றி, பிறர் மூலம் வாங்கமாட்டார்கள் என்று பேசியுள்ளார். ‘தென்புலத்தார்’ என்பது ‘முன்னோர்கள் விட்டுச் சென்ற கடமையை முடிக்க வேண்டும் என்றே பொருள்படும்’ என்றார் வ.உ.சி.

சென்னையில் தங்கியிருந்த போது வாடகை கொடுக்க முடியாமல் இன்றைய பெரம்பூரில் ஊருக்கு வெளியே தங்கியிருந்தார். இந்த வீட்டிற்கு சென்ற மகாகவி பாரதியார் “வ.உ.சி. தங்கியிருந்த வீட்டிற்கு அப்பால் வீடுகளே இல்லை; மிகச்சிறிய வீடு. ஆனால் வ.உ.சி. தங்கியிருந்ததால் அது ஆசிரம மாக திகழ்ந்தது. ‘பேய் இருந்த வீடு’ என்று ஒதுக்கப் பட்ட வீட்டில்தான் வ.உ.சி. தங்கியிருந்தார்” என்று எழுதினார்.

அந்த வீட்டில் தங்கித்தான் தினந்தோறும் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தார் வ.உ.சி. அவரிடம் திருக்குறள் கேட்க வந்தவர்களில் ராஜாஜியும், சுவாமி சகஜானந்தரும் முக்கியமானவர்கள். சகஜானந்தர் தொடர்ந்து வகுப்புக்கு வந்துள்ளார். ஒவ்வொரு அதிகாரம் முடிந்ததும் அதன் பொருளை வகுப்பு கேட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று அறிவது வ.உ.சி.யின் வழக்கம். ஆனால் ராஜாஜி அவ்வாறு உணரவில்லை என்று அறிந்த வ.உ.சி., “உங்களுக்கு சொல்லித்தரும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை” என்று இராஜாஜியிடம் கூறிவிட்டாராம்.

சிறை சென்று, வறுமைப்பட்டு தூத்துக்குடிக்குத் திரும்பிய போதும் வ.உ.சி. தொடர்ந்து திருக்குறள் வகுப்பு நடத்தி வந்துள்ளார். ‘செல்வத்தின் நிலை யாமை’ குறித்து ஒரு நாள் விளக்கிக் கொண்டி ருந்தார் வ.உ.சி., அப்போது ஒரு மாணவர் ‘செல்வத்தின் நிலையாமை குறித்து உங்கள் சொந்தக் கருத்து என்ன’ என்று கேட்டாராம்.

அதற்கு வ.உ.சி., அம்மா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டாராம். அதற்கு அந்த மாணவர் எருவரட்டியை பிய்த்து எடுத்துக் கொண்டிருப்பதை தவிர வேறொன்றும் தெரியவில்லை என்றாராம்.

“ஒரு காலத்தில் இந்த வீடு செல்வச்செழிப்பின் உச்சத்தில் இருந்தது. எந்த நேரமும் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிட்டுப் போவார்கள். ஆனால் இன்று என் மனைவி எருவரட்டியை விற்றால்தான் என் வீட்டு அடுப்பு எரியும். இதுதான் நீ கேட்ட செல்வத்தின் நிலையாமை குறித்த என் கருத்து’ என்றாராம் வ.உ.சி.

திருக்குறளில், ‘வரைவின் மகளிர்’ குறித்து எழுதிய திருவள்ளுவர் ஏன், ‘வரைவின் ஆடவர்’ குறித்து எழுதவில்லை என்று கேள்வி எழுப்பவும் தயங்கவில்லை.

‘சுதேசிக் கப்பலோடுதான் தூத்துக்குடி திரும்புவேன்; இல்லையென்றால் அந்தக் கட லிலேயே விழுந்து உயிர் துறப்பேன்’ என்று சூளுரைத்து விட்டுத்தான் வ.உ.சி. மும்பை புறப்பட்டுச் சென்றார். சொன்னபடியே சுதேசிக் கப்பல்களோடு திரும்பினார். அதுமட்டுமின்றி, கப்பல் கட்டுமானம் மற்றும் இயக்கம் பராமரிப்பு ஆகியவற்றை சொல்லித் தரும் பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்துள்ளது.

சுதேசிக் கொள்கையின் மீது அளவற்ற பற்று கொண்டிருந்த அவர் தன்னுடைய குழந்தைகளின் ஆடைகளைக் கூட தீ வைத்துக் கொளுத்தினார் என்பது மட்டுமல்ல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கைத்தொழில் வளர்க்கப்பட வேண்டும் என்பதும் அவருடைய கருத்தோட்டமாக இருந்துள் ளது. பிரிட்டிஷாருக்கு எதிராக கோரல்மில் தொழி லாளர்களை ஒன்றுதிரட்டி விடுதலைப் போராட்டத் தின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி. சுதேசி பஞ்சாலை துவங்கும் திட்டம் தமக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சுதேச பண்டகசாலை இயங்கி வந்த நிலையில் தரும நெசவு சாலை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

தொழிலாளர்களை அரசியல் படுத்துவதில் வ.உ.சி. எப்போதும் முனைப்பாக இருந்தார். “அரசாங்கம் எந்தக் காலத்திலாவது தொழி லாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளதா, இதுவரை அரசு ஆங்கிலேய முதலாளிகளுக்கு சாதக மாகவே இருந்தது. நிலைமை இதுவாகவே இருந்தால் நாடு ஒருபோதும் முன்னேற இயலாது. நாட்டின் நிலைமையை தொழிலாளர்கள் புரிந்து கொண்டால் ஒரு முறை தொடங்கப்பட்ட கிளர்ச்சி எக்காரணம் கொண்டும் தடுக்கப்பட இயலாது” என்பது தொழிலாளர் கூட்டமொன்றில் வ.உ.சி. சொன்ன வார்த்தைகள்.

வ.உ.சி. ஒரு பல்துறை அறிஞர். சேலத்தில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் ‘பெருஞ்சொல் நிகழ்வில்’ ‘சித்த வைத்தியத்தின்’ அவசியம் குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கும் உடல்நிலைக்கும் சித்தவைத்தியமே ஏற்றது என்று தரவுகளுடன் பேசியுள்ளார்.

வ.உ.சி. கோவை சிறையில் அடைக்கப் பட்டிருந்த காலத்தில் ஜெயிலர் மிஞ்சேல், கண்காணிப்பாளர் காட்சன் என்ற இருவர் கைதிகளை மிக மோசமாக நடத்தினர். வ.உ.சி.யை சணல் பிரிக்கும் இயந்திரத்தை சுற்றச் செய்துள்ளனர். இதனால் அவரது கைகளில் தோல் உரிந்து ரத்தம் வழிந்துள்ளது. அதன் பிறகு மாடுகள் இழுக்கும் செக்கை அவரை இழுக்கச் செய்துள்ளனர். அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டதற்கு காரணம் கைதிகளிடையே அவர் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்பதாகும். சிறைக் கைதிகள் கிளர்ச்சி செய்து இதன் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்க வந்த அதிகாரிகளிடம் மிஞ்சேலும், காட்சனும் செய்யும் அட்டூழியத்தை எடுத்துரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வ.உ.சி.யை சிறை வளாகத்தை கூட்டிப் பெருக்கவும், மூத்திரச் சட்டியை தூக்கிச் செல்லவும் பணித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்ட வ.உ.சி.க்கு இத்தகைய கொடுந்தண்ட னைகள் கொடுக்கப்படவில்லை. அச்சுக்கோர்க்கும் பணி தரப்பட்டது. ‘மெய்யறம்,மெய்யறிவு’ என்ற நூல்களை வ.உ.சி. கண்ணூர் சிறையிலிருந்த போது எழுதியுள்ளார்.

வ.உ.சி. சிறை சென்ற போது நூற்றுக் கணக்கானவர்கள் அவரை வழியனுப்பினர். ஆனால் 24.12.1912ல் அவர் விடுதலையான போது அவரது மனைவி, சங்கரநாராயணன், கணபதி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகிய நால்வர் மட்டுமே வாசலில் நின்று வரவேற்றுள்ளனர்.

சாதிய வேறுபாடுகளை கடுமையாகச் சாடியது மட்டுமின்றி தனது வாழ்முறையையும் அவ்வாறு அமைத்துக் கொண்டவர். தன்னுடைய வீட்டில் விருதுநகர் இராமையா தேசிகன் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை தங்க வைத்திருந்தார் வ.உ.சி. அவர் தமிழறிஞர். இரு கண்களும் தெரி யாத மாற்றுத்திறனாளி. அவரை வீட்டில் தங்க வைத்ததற்காக வ.உ.சி.யை சாதி விலக்கம் செய்ய முயற்சி நடந்தது. அதையும் தாண்டி, கண்ணிழந்த இராமையா தேசிகனுக்கு தனது மனைவி வள்ளியம்மை அன்றாடம் உணவூட்டியது குறித்து உணர்வுப்பூர்வமாக வஉசி கவிதை பாடியுள்ளார்.

வ.உ.சி. குறித்து தோழர் ஜீவா கூறும் போது “இந்தியாவில் தொழிலாளர் இயக்கம் கருப்பா, சிவப்பா என்று கேட்ட காலத்திலேயே தூத்துக்குடி தொழிலாளர்களை கட்டியெழுப்பி அணிவகுத்து நிறுத்தி வேலைநிறுத்தப் போரில் கோரல் மில் வெள்ளை முதலாளிகள் மீது வெற்றிகொண்டவர். வங்கத்தின் சுதேசிக் கிளர்ச்சி மலர்ந்து கிளர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் பாட்டாளி மக்களின் படைதிரட்டினார் வ.உ.சி. தமிழகத்தை உயர்த்த தரும நெசவு சாலை, சுதேசி நாவாய்ச் சங்கம், சுதேசிய பண்டகசாலை ஆகிய ஸ்தாபகங்களை நிறுவினார். சிதம்பரனார் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்த அப்பழுக்கற்ற தேசபக்தர் மட்டு மல்ல, தொழிலாளர் சங்கங்களையும், விவசாய சங்கங்களையும் அமைத்து அவர்களது உரிமைப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய உழைக்கும் மக்களின் உறுதுணைவர் மட்டுமல்ல, அவர் தமிழுக்கு நற்பணி புரிந்தவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். உண்மை உரை காணும் உரம் பெற்றவர். அவர் கோயம்புத்தூர், கண்ணூர் சிறைகளில் இருக்கும் போது அவரது கை கல்லுடைத்ததோடு, செக்கிழுத்ததோடு நிற்க வில்லை. கவிகளும் எழுதியது - என்கிறார்.

வ.உ.சி. உயர்த்திப் பிடித்த சுதேசி தீபத்தை, பன்னாட்டு கம்பெனிகளின் படையெடுப்புக்கு எதிராக போர்ப்படை நடத்தும் பாட்டாளிகளுக்கு இன்றும் ஒளி தரும்.