அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் உருவகமா?
22 May 2026, 9:36 pm

அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் உருவகமா?

சென்னை, மே 22 - அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட திமுக எம்.பி., ஆ.ராசா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திமுக எம்.பி. ஆ.ராசாவின் சமீபத்திய முகநூல் பதிவு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிப்பது ஜனநாயகத்தில் இயல்பான ஒன்று. ஆனால் அந்த விமர்சனத்திற்காக பெண்களை இழிவுபடுத்தும், பாலியல் உருவகங்களை உள்ளடக்கிய ஆணாதிக்க மொழியைக் கையாள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, “பூ முடித்தவனை புறந்தள்ளி...” என்ற அவரது கருத்து, பெண்களை மனிதர்களாக அல்லாமல் ஆணின் பாலியல் தேவைக்கான பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும். ஒரு அரசியல் கூட்டணியை விமர்சிப்பதற்காக கூட பெண்ணின் உடல், பெண்ணின் உறவு, பெண்ணின் மரியாதை ஆகியவற்றை இழிவான உவமைகளாக பயன்படுத்துவது பெண் விரோத பண்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. மேல் சொன்ன வாக்கியங்கள் பெண்களை ஆணின் சொத்தாகவும், ஆணின் ஆசை மற்றும் தேவைக்கான கருவியாகவும் பார்க்கும் பிற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. இன்றும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும், பணியிடங்களிலும் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொண்டு வரும் சூழலில், பொது வாழ்க்கையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இத்தகைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். ஆ.ராசா அவர்கள் அந்தப் பதிவை நீக்கியது நல்லது. அதே சமயம் இக்கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் அரசியல் தளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பாலியல் உருவக மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உ. வாசுகி விமர்சனம்

திமுக எம்.பி. ஆ. ராசா-வின் கூற்றை, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் உ. வாசுகி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதளப் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார். “தேர்தல் கூட்டணி, பிரச்சனைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? திருமணத்திலும் கூட விவாகரத்து உண்டு... ‘பூ முடித்தவரை புறம் தள்ளி’ என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட் டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?” இவ்வாறு உ. வாசுகி கூறியுள்ளார். மற்றொரு பதிவில், “எங்கள் அணியின் கட்சி களைக் கடன் வாங்கி... நாங்கள் அனுமதித்து?” என்ற சொல்லாடல்கள் குறித்தும் உ. வாசுகி விமர் சனங்களை வைத்துள்ளார். “ஏற்புடைய பிரச்ச னைகளில் ஒத்துழைப்பது, ஏற்காதவற்றில் வேறு படுவது என்பதே திமுகவுடனான சிபிஐ(எம்) அணுகு முறை. உடமைக்கும் உடமையாளருக்குமானது அல்ல. முடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது சிபிஐ(எம்) மாநிலக்குழுவும், அரசியல் தலைமை குழுவுமே!” என்று குறிப்பிட்டுள்ளார்.