அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் உருவகமா? ஆ.ராசாவுக்கு மாதர் சங்கம் கேள்வி
22 May 2026, 5:05 pm

விமர்சனத்திற்காக பெண்களை இழிவுபடுத்தும், பாலியல் உருவகங்களை உள்ளடக்கிய ஆணாதிக்க மொழியைக் கையாள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் உருவகமா? என ஆ.ராசாவுக்கு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் சமீபத்திய முகநூல் பதிவு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிப்பது ஜனநாயகத்தில் இயல்பான ஒன்று. ஆனால் அந்த விமர்சனத்திற்காக பெண்களை இழிவுபடுத்தும், பாலியல் உருவகங்களை உள்ளடக்கிய ஆணாதிக்க மொழியைக் கையாள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

குறிப்பாக, “பூ முடித்தவனை புறந்தள்ளி..." என்ற அவரது கருத்து, பெண்களை மனிதர்களாக அல்லாமல் ஆணின் பாலியல் தேவைக்கான பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும். ஒரு அரசியல் கூட்டணியை விமர்சிப்பதற்காக கூட பெண்ணின் உடல், பெண்ணின் உறவு, பெண்ணின் மரியாதை ஆகியவற்றை இழிவான உவமைகளாக பயன்படுத்துவது பெண் விரோத பண்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

மேற் சொன்ன வாக்கியங்கள் பெண்களை ஆணின் சொத்தாகவும், ஆணின் ஆசை மற்றும் தேவைக்கான கருவியாகவும் பார்க்கும் பிற்போக்குச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

இன்றும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும், பணியிடங்களிலும் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பாலியல் வன்முறைகளையும் எதிர்கொண்டு வரும் சூழலில், பொது வாழ்க்கையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இத்தகைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவது  மிகவும் பொறுப்பற்ற செயலாகும்.

ஆ.ராசா பதிவை நீக்கியது நல்லது. அதே சமயம் இக்கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அரசியல் தளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பாலியல் உருவக மொழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.