சீத்தாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் முன்மொழிந்த திட்டம்! சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பேச்சு
23 Jan 2026, 2:42 pm
<p><strong>சீத்தாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் முன்மொழிந்த திட்டம்! சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பேச்சு</strong></p>
<p>சென்னை, ஜன. 23 - ஊரக வேலையுறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் விதமான விபி-ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து, தமிழக முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் சீத்தாராம் யெச்சூரி போன்ற மிக முக்கிய தலைவர் ளால் முன்மொழியப்பட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது என்றும், இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வந்தனர் என்றும் கூறினார். தமிழ்நாட்டு மக்கள் தன்மானம் மிக்கவர்கள், நிச்சயம் மோடி அரசின் மோசமான திட்டத்தை பின்வாங்க வைப்பார்கள் என்றும் கூறினார். சிபிஐ உறுப்பினர் மாரிமுத்து, கிராமப்புறங்களில் பொருளாதார வாழ்வாதாரத்தை உருவாக்கும் திட்டத்தை பாஜக அரசு அடித்து நொறுக்கியுள்ளது என்றும், இதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் கூறினார். இடதுசாரிகளால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தை முழுக்க முழுக்க சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும், இது வெறும் நிர்வாக ரீதியான மாற்றமோ சீர்திருத்தமோ அல்ல, மகாத்மா காந்தியின் பெயரையே அழிக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். விசிக உறுப்பினர் பனையூர் பாபு, இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, இது இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம் என்றும், மாநிலத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைக்கும் சதி என்றும் கூறினார். ஜி.கே. மணி, காந்தி அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ள திட்டத்தை மாற்றி அமைப்பது, அனைவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் என்று குறிப்பிட்டார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விபி-ஜி ராம் ஜி திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராக உள்ளது என்றும், இந்த திட்டம் ஒழிக்கப்பட வேண்டும், திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கொமதேக தலைவர் ஈஸ்வரன், மகாத்மா காந்தியின் பெயரை ஊரக வேலை திட்டத்தில் நீக்குவது கண்டிக்கத் தக்கது என்றும், மாநில அரசின் பங்கு 40 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று கூறுவது, திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயல் என்றும் தெரிவித்தார். அதிமுக சார்பில் உதயகுமார், மதிமுக சார்பில் சின்னப்பா ஆகியோர் பேசினர். பாஜக சார்பில் யாரும் பேசவில்லை.</p>
