ஆசிரியர் பற்றாக்குறை, பணிச்சுமை, அடிப்படை வசதியின்மையால் கேள்விக்குறியாகும் மாவட்ட அரசுப் பள்ளிகளின் எதிர்காலம்!
yesterday

ஆசிரியர் பற்றாக்குறை, பணிச்சுமை, அடிப்படை வசதியின்மையால் கேள்விக்குறியாகும் மாவட்ட அரசுப் பள்ளிகளின் எதிர்காலம்!

கல்வி என்பது வணிகமல்ல; அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகள், இன்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற மக்களும் விவசாயத் தொழிலாளர்களும் அதிகம் வாழும் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆசிரியர் பற்றாக்குறை, நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படாமை, ஆசிரியர்களின் அதிகரிக்கும் பணிச்சுமை மற்றும் அடிப்படை வசதிகளின் குறைபாடு ஆகியவை அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வாரியாக மொத்த ஆசிரியர் பணியிடங்கள், பணியில் உள்ளவர்கள், காலியிடங்கள் மற்றும் பாடவாரியான பற்றாக்குறை குறித்த முழுமையான விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட வேண்டும். மாவட்டத்தின் பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பல வகுப்புகளைக் கவனிக்க வேண்டிய அவல நிலையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் சூழலும் நிலவுகின்றன. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமமான கல்வி வாய்ப்பில் பெரும் ஏற்றத்தாழ்வு உருவாகிறது.

ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த ஏற்பாடு தற்காலிகமாக உதவினாலும், ஒருபோதும் நிரந்தர ஆசிரியர் நியமனத்திற்கு மாற்றாக இருக்க முடியாது. பணிப் பாதுகாப்பு, உரிய அங்கீகாரம் மற்றும் தெளிவான பொறுப்புகள் இல்லாமல் தற்காலிக ஏற்பாடுகளை மட்டுமே தொடர்வது, கல்வியின் தொடர்ச்சிக்கும் தரத்திற்கும் நிலையான தீர்வாகாது. மறுபுறம், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணியுடன் சேர்த்து டிஎன்செட், இஎம்ஐஎஸ் மாணவர் வருகைப்பதிவு, உடல்நலம் மற்றும் அரசு நலத்திட்டப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு இணையவழி நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறையால் கூடுதல் வகுப்புகளைக் கவனிக்கும் ஆசிரியர்களுக்கு, இத்தகைய நிர்வாகப் பணிகள் மேலும் சுமையை ஏற்படுத்துகின்றன. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்கான நேரம் குறைவதுடன், ஆசிரியர்கள் மத்தியிலும் கடுமையான பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரிக்கின்றன. எனவே, கணினிப் பதிவுகள் மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள உரிய தனிப் பணியாளர்களை நியமித்து, ஆசிரியர்களின் முதன்மைப் பணியான கற்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல், கிராமப்புறங்களில் பெற்றோர் வாழ்வாதாரத்திற்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் வெளியூர்களுக்குச் செல்வதால், குடும்பப் பராமரிப்பு குறைவாக உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் இடைநிற்றலையும் கண்காணிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 17 அன்று திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது ஆசிரியர்களின் கோரிக்கையை மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி உரிமையை முன்வைக்கும் முக்கிய நிகழ்வாகும். எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்று, அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.