தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

60 நாட்களில் 9 சாதி ஆணவப் படுகொலைகள்; எங்கே செல்கிறது தமிழகம்? - பி.சுகந்தி

16 Jul 2026, 9:29 pm
60 நாட்களில் 9 சாதி ஆணவப் படுகொலைகள்; எங்கே செல்கிறது தமிழகம்? - பி.சுகந்தி

60 நாட்களில் 9 சாதி ஆணவப் படுகொலைகள்; எங்கே செல்கிறது தமிழகம்? - பி.சுகந்தி

மயிலாடுதுறை இரட்டைப் படுகொலை எழுப்பும் கேள்விகள்

தமிழகம் சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கங்களின் மண் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ள சம்பவங்கள் அந்தப் பெரு மிதத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. வெறும் 60 நாட்களில் ஒன்பது சாதி ஆணவப் படுகொலைகள் நடை பெற்றிருப்பது தமிழ்ச் சமூகத்தின் முன் மிகப் பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அந்த வரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் சாத்தன்குடியில் நிகழ்ந்த பார்த்திபன்–திவ்யதர்ஷினி இரட்டைப் படுகொலை, தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது.

சாதியின் கொடூர முகம்

சாத்தன்குடியைச் சேர்ந்த பட்டியல் சமூக இளை ஞரான பார்த்திபனும், அதே பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி யும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தனர். திவ்ய தர்ஷினி பட்டியல் சமூக இளைஞரைக் காதலிக்கிறார் என்பதை அவரது குடும்பம் ஏற்க மறுத்தது. குறிப்பாக, அவரது தந்தை கடந்த ஆறு மாதங்களில் பலமுறை பார்த்திபனின் வீட்டிற்குச் சென்று, “நீங்கள் எங்கள் சாதியைவிடத் தாழ்ந்தவர்கள்; உன் மகனை அடக்கி வை” என்று மிரட்டியதோடு, சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளார். இவை வெறும் மிரட்டல்கள் அல்ல, பின்னர் நிகழ்ந்த படுகொலைக்கு முன் கூட்டியே அமைக்கப்பட்ட பின்னணியாகும்.

காவல்துறையின் அலட்சியம்

ஜூன் 29 அன்று திவ்யதர்ஷினியின் குடும்பத்தினர் பார்த்திபனைத் தாக்க முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த பார்த்திபன் உடனடி யாக காவல் நிலையத்திற்குச் சென்று, வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தயங்கியது. பின்னர் நள்ளி ரவு 1 மணிக்கு பார்த்திபனின் தந்தையை அழைத்து, “வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டுங்கள்” என்று கூறியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பு கிறது. பகலில் அளிக்கப்பட்ட புகாருக்கே காத்திருக்கச் சொல்லும் காவல்துறை, நள்ளிரவில் புகார்தாரரின் குடும்பத்தை அழைத்தது ஏன்? அதற்குப் பிறகு அதி காலையிலேயே பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். எனவே, இந்த வழக்கை வெறும் தற்கொலையாகக் கருதாமல், திட்டமிட்ட சாதி ஆணவக் கொலையா கவே விசாரிக்க வேண்டும்.

இந்த வன்கொடுமை நடைபெற்ற உடனேயே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களமிறங்கி யது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சக்திகளும் இணைந்து, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட இரட்டைப் படுகொலை என்று வலியுறுத்தின. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சுமார் 12 மணி நேரம் தொடர்ச்சியான போ ராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் விளை வாகவே காவல்துறை மீது அழுத்தம் உருவாகி, வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. மக்கள் போ ராட்டம்தான் நீதிக்கான கதவுகளைத் திறக்கிறது என்ப தற்கு இந்தச் சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு.

விஷம் கக்கும் சாதியப் பிரச்சாரம்

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் வேதனை யை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்க ளில் “நம் சமூகப் பெண்களைக் குறிவைத்து காத லிக்கிறார்கள்” போன்ற ஆபத்தான சாதியப் பிரச்சா ரங்கள் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டன. பெண்களின் பாதுகாப்பு குறித்து உண்மையான அக்கறை இருந்தி ருந்தால், பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணைக் கொலைகளின் போது இவர்கள் ஏன் மௌனம் காத்தனர்? இவர்களின் கவலை பெண்களின் பாது காப்பு அல்ல, பெண்கள் தங்களின் வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேர்வு செய்யக்கூடாது என்பதுதான். சாதியின் எல்லைகளை பெண் மீறக் கூடாது என்ற ஆணாதிக்கமும் சனாதனச் சிந்தனையும்தான் இதன் அடிப்படை. காதலுக்கு எதிரான இந்த விஷப் பிரச்சாரம் நாளைய தலைமுறையின் ஜனநாயகச் சிந்த னையையே தாக்குகிறது.

ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட் டங்களால் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டதாலேயே இந்தச் சம்பவம் முடிந்துவிடவில்லை. குற்றவாளி களுக்கு விரைவான தண்டனை கிடைக்க வேண்டும்; வழக்கின் பின்னணியில் உள்ள சதியும், அதற்குத் துணைநின்ற சக்திகளும் முழுமையாக அம்பலப் படுத்தப்பட வேண்டும்.

60 நாட்களில் ஒன்பது சாதி ஆணவப் படுகொலைகள்

2026 மே மாதம் தொடங்கி ஜூலை தொடக்கம் வரை வெறும் அறுபது நாட்களுக்குள் தமிழ்நாட்டில் ஒன்பது சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஒரு காலத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் வடஇந்திய மாநிலங்களின் பிரச்சனையாகவே கருதப்பட்டன. ஆனால் இன்று சமூகநீதி வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டிலேயே இத்தகைய கொலைகள் தொ டர்ச்சியாக நடைபெறுகின்றன. சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்கள் மூலம் வெறுப்பும் பிரிவினையும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. இவை இந்திய அரசி யலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலாகும்.

உடைபடும் சாதி - முன் எழும் மனித நேயம்

மயிலாடுதுறை கொடூரச் சம்பவத்தின் மத்தியில், பார்த்திபனின் தாயார், “என் மகன் இறந்ததற்காக மட்டும் நான் அழவில்லை. திவ்யதர்சினியும் என் மகளைப் போன்றவள்தான். அவளுடைய மரணமும் என்னை அதே அளவுக்கு வேதனைப்படுத்துகிறது” என்று கூறியபோது அங்கே மனிதநேயம் மட்டுமே பேசியது. ஒரு தாய் தனது மகனைக் கொன்றவர்க ளின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் மரணத்திற்கா கவும் கண்ணீர் சிந்துகிறார். ஆனால் மற்றொரு பக்கம், பெற்ற மகளின் உயிரைவிடச் சாதியின் “கௌரவம்” பெரிது என்று கருதும் ஆதிக்க மனநிலையும் இந்தச் சமூகத்தில் இருக்கிறது.

சிறப்புச் சட்டம் – காலத்தின் கட்டாயம்

சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான விரிவான தனிச்சட்டம் தேவை என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. ஜனநாயக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலை மையில் அமைக்கப்பட்ட ஆணையம் தமிழகம் முழு வதும் கருத்துக்களைக் கேட்டது. புதிய அரசு அவற்றை உடனடியாகப் பரிசீலித்து, தாமதமின்றி தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாதிரிச் சட்டம்

இதற்கான மாதிரிச் சட்ட வரைவை உருவாக்கித் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்கெனவே வழங்கி யுள்ளது. சாதி ஆணவப் படுகொலை என்பது ஒரு குடும்பத்தின் முடிவு மட்டுமல்ல; சாதிச் சங்கங்கள், சாதிப் பஞ்சாயத்துகள், சமூக அழுத்தங்கள் இணைந்து செயல்படுகின்றன. எனவே, இத்தகைய குற்றங்க ளைத் தூண்டுபவர்கள், திட்டமிடுபவர்கள், நிதியுதவி அளிப்பவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு

திருமண வயது வந்த இரு நபர்கள் தங்களது விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது அரசிய லமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. “அகமண முறைதான் சாதியைப் பாதுகாக்கிறது” என்ற அம்பேத்கரின் ஆய்வு இன்றும் முழுமையான பொ ருத்தத்தைக் கொண்டுள்ளது. சாதி மறுப்புத் திரு மணங்கள் நடைபெறும்போது சாதி ஆதிக்கம் சிதைந்து விடும் என்ற அச்சமே ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புக்குக் காரணம். எனவே, சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதும், அவற்றிற்கு அரசுப் பாதுகாப்பு வழங்குவதும் சாதி ஒழிப்புக்கான முக்கியமான ஜனநாயக நடவடிக்கையாகும்.

சட்டம் மட்டும் போதாது; சமூகமும் மாற வேண்டும்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேரூன்றியுள்ள சாதிய மனப்போக்கை ஒரே சட்டம் முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால், சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சத்தை உருவாக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும். அதே நேரத்தில் கல்வி நிறு வனங்கள், ஊடகங்கள், மக்கள் இயக்கங்கள் இணைந்து சாதி வெறுப்புக்கு எதிரான சமூகச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களின் சுயநிர்ணய உரி மையையும், இளைஞர்களின் வாழ்க்கைத் துணை யைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மதிக்கும் ஜனநாயகப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.