எந்த முன்னறிவிப்பும் இன்றி 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் தகவல்
30 Jan 2026, 5:26 pm
<p><strong>எந்த முன்னறிவிப்பும் இன்றி 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் தகவல்</strong></p>
<p>சென்னை, ஜன. 30 - தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்குப் பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள தாகவும், அவர்களில் 85 லட்சம் பேருக்கு எந்த முன்னறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவசர கதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு, வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 88 சதவிகிதம் பேருக்கு முன்னறிவிப்பைக் கூட தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வாதத்தை, உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. “ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் இருப்பது போன்ற தர்க்க ரீதியான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. ஜனவரி 30 உடன் பெயர் நீக்கம் தொடர்பான ஆட்சேபணைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. இந்நிலையில் பல லட்சம் வாக்காளர்களுக்கு தங்கள் பெயர் நீக்கப்பட்டதே தெரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கு வங்க எஸ்ஐஆர் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கும் ஏன் நீட்டிக்கப்படக்கூடாது?” என தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனவரி 19 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், தர்க்கரீதியான முரண்பாடுகள் அடிப்படையில் நீக்கப்பட்ட சுமார் 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றவும், அவற்றை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் ஒட்டிவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையே தற்போது தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் வியாழன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை அளிப்பதற்கான அவகாசத்தையும் பிப்ரவரி 10 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.</p>
