திருச்சி விரைவு செய்திகள்
20 Feb 2026, 2:39 pm

லாட்டரி விற்ற 6 பேர் கைது

நாகர்கோவில், பிப்.20- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியில் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன், ஒரு லட்சத்து 68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்த தினேஷ்பாபு (39),நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த வீரமணிகண்டன்( 27),கோவைகுளம் பகுதியை சேர்ந்த துரை(18), தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி (30), நாங்குநேரி திருக்குறுங்குடி சேர்ந்த அரவிந்த் 29,),மற்றும் பொன்னாக்குடியை சேர்ந்த இசக்கி தவசி 18 ஆகிய ஆறு பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

நாகர்கோவில், பிப்.20 நாகர்கோவில் பீச் ரோட்டில் கழிவுநீர் வெளியேறி அங்கேயே தேங்கிக்கிடப்பதால் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்றி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவு நீர் நிரம்பி சாலை வழியாக செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்றி,தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறை கருத்தரங்கம்

தஞ்சாவூர், பிப்.20- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், புதனன்று நாட்டுப்புறவியல் துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முது முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீமான் இளையராஜா அனைவரையும் வரவேற்றார். நாட்டுப்புறவியல் துறையின் தலைவர் பேராசிரியர் இரா.காமராசு கருத்தரங்கின் நோக்கம் குறித்து நோக்கவுரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்ல.பாலு, “பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள்’’ எனும் தலைப்பிலும், முனைவர் மு. ஏழுமலை, “தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும்’’ எனும் தலைப்பிலும், முனைவர் பே. சக்திவேல், “கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும்’’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் மாலதி நன்றி கூறினார்.