பிலிப்பைன்ஸில் 49ஆவது ஆசியான் உச்சி மாநாடு நிறைவு! : 2027ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை சிங்கப்பூரிடம் ஒப்படைத்தது பிலிப்பைன்ஸ்
17 Nov 2026, 8:45 pm

மணிலா:

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் (ASEAN) 49ஆவது உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநாடுகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தன.

நிறைவு விழாவில் பேசிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும், நடப்பு ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தலைவருமான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது, உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்களை நெருக்கமாக இணைப்பது, மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் ஆசியான் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இதையடுத்து, 2027ஆம் ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் ஒப்படைத்தார்.

புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட லாரன்ஸ் வோங் பேசுகையில், “ஆழமான ஒருங்கிணைப்பு, விரிவான கூட்டாண்மை என்பதே சிங்கப்பூரின் தலைமைக்கான கருப்பொருளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “உறுப்பு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிறுவனங்கள் தடையின்றி தொழில் தொடங்கவும், செயல்படவும் வழிவகுக்கும் ஒற்றை ஆசியான் சந்தையை உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். விரிவான கூட்டாண்மைகள் மூலம் அனைத்து நாடுகளும் ஒத்துழைக்கக்கூடிய பிராந்தியமாக தென்கிழக்கு ஆசியா தொடர்ந்து திகழ வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசியான் அமைப்பில் புருணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

2027ஆம் ஆண்டு ஆசியான் அமைப்பு தொடங்கப்பட்டதன் 60ஆவது ஆண்டைக் குறிக்கிறது.