2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும்
11 Apr 2026, 5:30 am

2029 பொதுத் தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடங்களை வழங்க முடியும்! புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

ஒன்றிய பாஜக அரசுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம். புதுதில்லி, ஏப். 10 - மகளிர்க்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாகவும் விரிவான அளவில் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. 2023-இல், மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு முன்மொழியப்பட்ட போது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதை சிபிஎம் எதிர்த்தது.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு இணைப்பது பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவாக 2029 தேர்தல்களிலும் கூட பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும் என்றும் சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது. 2029 நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.