27 சீட் போதாது... எனக்கும் ஒரு சீட் வேணும்!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>27 சீட் போதாது... எனக்கும் ஒரு சீட் வேணும்!</strong></p>
<p>“ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்” என்பது பழமொழி. ஆனால், கோபிசெட்டிபாளையம் தொகுதியிலோ ஒரு ‘சீட்’டுக்குள் இரண்டு பேர் நுழையப் பார்ப்பதுதான் இப்போது ஈரோடு மாவட்டத்தின் ஹாட் டாபிக்! கூட்டணி தர்மமா? குழிதோண்டும் வேலையா? அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தப்படி, கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. “பங்கு பிரிச்சாச்சு, இனி நிம்மதியாக வேலை பார்ப்போம்” என்று அதிமுக வேட்பாளர் வேட்டியை மடித்துக் கட்டிய நேரத்தில், “இருங்க... நானும் வருவேன்!” என்று பாஜக உறுப்பினர் நாகராஜ சோழன் வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தல் களத்தை ‘கலவர’ப்படுத்தியுள்ளார். கலிங்கியம் சின்னகுளத்தைச் சேர்ந்த இவர், முன்னாள் பாஜக ஒன்றியத் தலைவர். தற்போது உறுப்பினராக இருக்கும் இவர், மனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்து கொடுத்த பேட்டி அமித் ஷாவையே அதிர வைத்திருக்கும். “வெறும் 27 சீட் மட்டும் வாங்கினா கட்சி எப்படி வளரும்? அதான் நானும் நிக்கிறேன். கட்சி நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை” என்று ‘ரிபல்’ அவதாரம் எடுத்துள்ளார். அதிமுகவின் ‘மைண்ட் வாய்ஸ்’! நாகராஜ சோழனின் இந்த அதிரடியால், கோபி தொகுதி அதிமுக வேட்பாளர் செம அப்செட். “வெளியே எதிரி இருக்காங்களோ இல்லையோ, கூடவே இருந்து குழி பறிக்கிறாங்களே” என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களின் மைண்ட் வாய்ஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இங்கு வாங்கிய 27 ஆயிரம் வாக்குகள் இப்போது யாருக்கு விழும்? தாமரைக்கா, இரட்டை இலைக்கா அல்லது நாகராஜ சோழன் பிரிப்பாரா? என்ற குழப்பத்தில் அதிமுகவினர் தலையைச் சொறிந்து வருகின்றனர்.</p>
