2024 தேர்தல்களில் முறைகேடு – அம்பலப்படுத்திய ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' ஆய்வு
49 minutes before

2024-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 530 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில், 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை விவரங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ ஆய்வறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது.

‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் மொத்தமுள்ள 530 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில், 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை விவரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது.

19 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் முறையாகப் பதிவு செய்யவில்லை. சில இடங்களில் பூஜ்ஜியம் அல்லது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

32 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் முரணாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்ற முரன்பாடுகள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் 10 தொகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 7 தொகுதிகளில் பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெற்றுள்ளன.

2024-ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் 18.11 லட்சம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ முடிவில் 10.33 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவானதாக காட்டப்பட்டுள்ளது. அதாவது, 7.78 லட்சம் வாக்குகள் (42.8%) கணக்கில் வரவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் பியூஷ் கோயல் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 மக்களவை தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் ஈவிஎம்-இல் 6,72,942 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தில் உள் ஆவணங்களில் 6,66,046 வாக்குகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. 6,896 வாக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலில், பத்கல் தொகுதியில் 3.32 லட்சம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்கள் தெரிவிக்கும் நிலையில், வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவில் 1.60 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவானதாக காட்டப்பட்டுள்ளது. 1.72 லட்சம் வாக்குகள் என்ன ஆனாது என்ற கேள்வி எழுகிறது. இந்த தொகுதியில் பாஜகவின் தனேஷ் அத்லாகா வெற்றிப்பெற்றார்.

அதேபோல், ஹரியானாவின் கைதால் சட்டமன்ற தொகுதியில் 215 பேர் மட்டுமே வாக்களித்ததாக உள் ஆவணங்கள் தெரிவிக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ முடிவில் 1,67,285 வாக்குகள் பதிவானதாக காட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்களுக்கும், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து விரிவான கேள்விகளைத் தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியுபோது, அவற்றை புகாராக கருதி பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைப்புக்கு அனுப்பியுள்ளதாக ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ தெரிவித்துள்ளது.

மேலும், தங்களது சொந்தத் தரவுகளையே தங்களிடம் வழங்குமாறும், தகவல்கள் துறைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், வேறு யாருடனும் பகிரப்படாது என்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் அமைப்பிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.