திருச்சி விரைவு செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

அடகுக் கடையில் போலி நகைகளை வைத்து ரூ.3.34 லட்சம் மோசடி: 2 பேர் கைது

தஞ்சாவூர், டிச.21- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே, அடகுக் கடையில் போலி நகைகளை வைத்து ரூ.3.34 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவையாறு ராகவேந்திர காலனியை சேர்ந்தவர் வினோத் சோப்ரா(48). இவர் திருவையாறு தெற்கு வீதியில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டிச.9 ஆம் தேதி இருவர் 3 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.1.84 லட்சம் பெற்றுச் சென்றனர். இதேபோல், திருவையாறு அருகே கண்டியூர் கடைத் தெருவில் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கனகபத்பார்த்தி(28) நடத்தி வரும் அடகுக் கடையிலும் இருவர் 3 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ. 1.50 லட்சம் பெற்றுத் தலைமறைவாகினர். இதையடுத்து, இந்த நகைகளை அடகுக் கடை உரிமையாளர்கள் வினோத்குமார் சோப்ரா, கனகபத்பார்த்தி சோதனையிட்டபோது, அவை போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து இருவரும் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், காரைக்கால் விழுதியூரைச் சேர்ந்த சிவா(26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம்(21) ஆகியோர், போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

நெகிழி பையை பயன்படுத்துவதில்லை ஹோட்டல்கள் சங்கம் தீர்மானம்

பெரம்பலூர், டிச.21- பெரம்பலூர் மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், அடுமனை, தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பையை பயன்படுத்துவதில்லை என்றும், அரசு சார்ந்த உரிமங்கள் மற்றும் அனுமதிகள் முறையாகப் பெற்று அவற்றை பின்பற்றுவது, ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள் மற்றும் கமிஷன் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து செயல்பாடுகளும் நடத்துவது, தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் காவல்துறை, அரசுத்துறை அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.