ஆண்டிப்பட்டி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்
27 Dec 2025, 4:49 pm
<p><strong>ஆண்டிப்பட்டி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்</strong></p>
<p>கடமலைக்குண்டு, டிச.27- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை காவல்துறை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (35) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த அஜ்மீர் அலி (39) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதே போல தேனியில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடும்பாறை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாகவும், வருசநாடு அருகே உள்ள சீலமுத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அவருடைய மனைவி சுமதி ஆகியோரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கஞ்சா கொண்டு வந்த சுதாகர் மற்றும் சுமதியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான செல்வராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
