world

img

இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்தி, பாலஸ்தீனைத்தை விடுதலை செய் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஜெரூசலத்தில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும் காசா நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பும் தற்செயலாக நடந்த நிகழ்வுகளோ அல்லது வேறுபட்ட நிகழ்வுகளோ அல்ல. இஸ்ரேல் அரசின், 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைப்பகுதிகளுக்குள் அராபிய பாலஸ்தீனர்கள் ஒடுக்கப்பட்டனர். காசா மற்றும் மேற்குக் கரையின் பிராந்தியங்கள்  ஆக்கிரமிக்கப்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு நீண்ட போரை தொடுத்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் இந்த சமீபத்திய தாக்குதல்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் காலங்காலமாக நிகழ்த்தப்பட்ட  குடியிருப்புக் காலனியாதிக்கம், இன அழித்தொழிப்பு, இனவெறி அரசியல் என்ற தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு வரலாற்றில் தற்போதைய மோதல் ஓர் அத்தியாயம்தான். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது பாலஸ்தீனர்களின் நிலங்களும் வீடுகளும் பறிக்கப்பட்டன. அன்றிலிருந்து அந்தப் பகுதியில் குடியிருந்த பாலஸ்தீன குடும்பங்கள் கிழக்கு ஜெரூசலத்தின் ஷேக் ஜாரா பகுதியிலிருந்து காலி செய்யப்பட்டனர்.

தீவிர வலதுசாரி யூதக்கட்சிகள் வளர்ந்து வருவதாலும், பெஞ்சமின் நேதன்யாஹுவின்  தலைமையில் வலதுசாரி அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதாலும், பாலஸ்தீனர்களை குறிவைக்கும் இனவெறிக் கொள்கைகள் தீவிரமடைந்துள்ளன. நான்காவது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது, ஆனாலும் புதிய அரசு அமையவில்லை. இத்தகைய தருணத்தில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வலதுசாரி ஆக்கிரமிப்புக் குழுக்கள் தங்களது ஆயுதந்தாங்கிய போராளிகள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் ஷேக் ஜாராவில் உள்ள பாலஸ்தீன குடும்பங்களைக் காலிசெய்ய முயன்றுவருகின்றன. இதற்குப் பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டமாஸ்கஸ் வாசலுக்கு அடுத்துள்ள ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு இடத்தில் பாலஸ்தீனர்கள் வழக்கமாக தொழுகை  செய்யக் கூடுவார்கள்.  ரமலான் மாதத்தின் துவக்கத்தில், இஸ்ரேலிய அதிகாரிகள் அந்த வழிபாட்டு பகுதிக்கான வழியை அடைத்துள்ளனர். இந்தப் பாதை மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. மலைக்கோவிலில்தான் அல் அக்சா மசூதி உள்ளது. இந்த மசூதி, உலகிலேயே  மூன்றாவது முக்கிய புனிதத்தலமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.

மே 7ஆம்தேதி இந்த மசூதியின் வளாகத்திற்குள் போராட்டம் செய்து கொண்டிருந்த மக்கள் மீது ஆயுதந்தாங்கிய காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், கையெறி குண்டுகள், ரப்பர் முலாம் பூசிய ரவைகள் ஆகியவை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களும் கொதிப்படைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர். இஸ்ரேல் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் அராபிய பாலஸ்தீனர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது வலதுசாரி யூதக் குழுக்களும் காவல்துறையினரும் விஷமத்தனமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில், காசாவில் உள்ள ஹமாஸ் நிர்வாகம், மலைக்கோவில் பகுதியிலிருந்தும் கிழக்கு ஜெரூசலத்திலிருந்தும் இஸ்ரேலிய படைகள் விலக வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தது. இந்த கோரிக்கைக்கு செவிசாய்கக்கப்படாததால், அவர்கள் காசாவிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தினார்கள்.

காசாவில் ஏறத்தாழ 19 இலட்சம் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இந்தக் குறுகிய நிலப்பகுதியிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேறியதிலிருந்து, இந்தப் பகுதியை 15 ஆண்டுகளாக எகிப்து உதவியுடன் இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. 2008 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. 2014ஆம் ஆண்டு நடந்த போரில் 2,300 பாலஸ்தீனர்கள் குறிப்பாக பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 18,000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

தற்போது காசா 9 நாட்களாக தாக்குதலுக்கு (மே மாதம் 19ஆம் தேதி வரை)  உள்ளாகியுள்ளது. இதில் 227 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 64 குழந்தைகளும் 38 பெண்களும் இவர்களில் அடங்குவர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயம். ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதையுமே விட்டுவைக்கவில்லை. சர்வதேச ஊடகத்தின் அலுவலகம் இருந்த கட்டிடம், காசாவிலிருந்த ஒரே கோவிட் சோதனை மையம், குடியிருப்பு வளாகங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் தாக்குதல்களால் இஸ்ரேலிலும் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லாவிதமான போர்நிறுத்த கோரிக்கைகளையும் இஸ்ரேல் மறுத்துவிட்டது. தனது குறிக்கோள்களை அடையும்வரை தாக்குதல்கள் தொடரும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வலுவான ஆதரவு இருப்பதால் இஸ்ரேல் இந்தக் கொடுமையான கொள்கைகளையும் ஆக்கிரமிப்புகளையும் தொடர்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அங்கீகரிப்பதாகக் கூறினார் ( ஆனால் ஐக்கிய நாடுகள் மன்றமோ அதனை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதுகிறது.)  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள யூதக் குடியிருப்புகள் எல்லாம் சட்டவிரோதமானவை அல்ல, அவை சட்டப்படி  நியாயமானவைதான் என்று கூட டிரம்ப் வெட்கம் கெட்ட முறையில் அறிவித்தார்.

இஸ்ரேல் அதிகாரத்திற்கு அளித்து வரும் அடிப்படை ஆதரவிலிருந்து அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பைடனும் விலகவில்லை. இந்தத் தாக்குதல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு நன்கு நுண்ணியமாக வழிகாட்டும் வகை ஆயுதங்களை 735 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு அளவிற்கு விற்பதற்கு ஒப்புதல் கொடுத்தது. தற்போது காசாவில் அந்த வகை ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நான்கு முறை கூடியுள்ளபோதும் இந்த நெருக்கடி குறித்து அந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. மே 17 அன்றுதான் போர்நிறுத்தம் குறித்து பைடன் அழைப்பு விடுத்தார். இந்தப் பகைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்னர், காசாவில் தங்கள் அழிவுத் திட்டங்களை இஸ்ரேல் நடத்துவதற்கு போதிய அவகாசத்தை இஸ்ரேலுக்கு அளிப்பதே அமெரிக்காவின் செயல்தந்திரமாகும்.

அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான அராபிய நாடுகள், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பாலஸ்தீனர்களின் கோரிக்கையை வெகு காலமாக நிராகரித்தே வந்துள்ளன. எப்போதாவது வாயளவில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு சரி. இத்தகைய கடுமையான சூழலில்தான் பாலஸ்தீன மக்கள் எழுச்சி பெற்று போராடியுள்ளனர்.

இந்த முறை நிகழ்ந்தவற்றில் புதிய அம்சம் என்னவென்றால், காசாவில் மீது முன்பு தாக்குதல் நடைபெற்றசமயங்களில் எவ்விதமான போராட்டத்திலும்  ஈடுபடாத இருந்துவந்த, இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களும், அல் அக்சா மசூதி தாக்குதலுக்குப் பின்,  ஷேக் ஜாரா மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேற்கு கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்கா(Akka), லிட்டா(Lydda), ராம்லே(Ramle), ஹைஃபா(Haifa) ஆகிய நகரங்களிலும் பிற பகுதிகளிலும் பாலஸ்தீன இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடியுள்ளனர். இவர்கள் மீது யூதக்கும்பல்களும் காவல்துறையினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மதக்கலவரங்கள் வெடித்தன. சில நகரங்களில் இஸ்ரேலிய இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டது. இரண்டாம்தர அராபிய குடிமக்கள் மீது இனவாத யூத அரசு தொடுத்த உள்ளார்ந்த முரண்பாடுகள் வெடித்துள்ளன.

தற்போதைய மோதலில், வலதுசாரி நேதன்யாஹூவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள மோடி அரசாங்கம், அமெரிக்காவின் நிலைப்பாட்டையே தானும் எடுத்துள்ளது. இஸ்ரேலுடன் நரேந்திர மோடி அரசு விரிவான பாதுகாப்பு மற்றும் இராணுவத் தொடர்புகளை வைத்துள்ளது. இதனால் காலங்காலமாக பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வந்த ஆதரவு நிலைபாட்டிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவந்துள்ளார். மே 16 அன்று நடந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், இந்தியா இந்த நிலைமையின் வீரியம் குறைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதே தவிர போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரவில்லை. இஸ்ரேல் மீது காசா தொடுத்த ராக்கெட் தாக்குதல்களைக் கண்டித்த அதே வேளையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் பதில் நடவடிக்கைகள்தான் என்று இந்தியா கூறியுள்ளது. பாலஸ்தீன நோக்கத்தையும் இருநாட்டு கொள்கையே தீர்வு என்பதையும் ஒரு வகையாக இந்தியா ஆதரித்தாலும், பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெரூசலத்தை இந்தியா கோரவில்லை. 2017ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் இந்தக் கோரிக்கையை கைவிட்டது.

ஆர்எஸ்எஸ்/பாஜக-வைப் போல் அல்லாமல், இந்தியாவில் உள்ள ஜனநாயக அரசியல் சக்திகள், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை எப்போதுமே ஆதரித்துள்ளன. இது நம்முடைய விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியம். பாலஸ்தீன மக்களுக்கு இந்திய மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் நேரம் இது. பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக, நமது ஆதரவை வீதிகளில் போராடி தெரிவிப்பது (உலகில் மற்ற நாடுகள் தெரிவிப்பது போல்) தற்போதைய சூழலில்  இந்தியாவில் சாத்தியமில்லை. ஆனால் மற்ற சாத்தியமான முறைகள் மூலம் அம்மக்களுக்கு நம்முடைய ஆதரவை நாம் தெரிவிக்க முடியும். 

உலகில் மிகவும் நீண்ட காலமாக நடைபெற்றுவரும் சுதந்திரப் போராட்டம் சுய நிர்ணயத்திற்கான பாலஸ்தீனப் போராட்டம். எழுபது ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள பிராந்தியத்தில், சுதந்திர பாலஸ்தீனம் அமையும் வரை இந்தப் போராட்டம் ஓயாது.

(மே 19, 2021)

தமிழில்: ச.வீரமணி

;