world

img

வாட்டிகன் புனிதர் பட்ட விழாவில் ஒழித்த தமிழ்த்தாய் வாழ்த்து!    

இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் உள்ள  கத்தோலிக்க திருச்சபையில்  தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது . இந்த  நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.    

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் கிராமத்தில் 1712 ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தவர் மறைசாட்சி தேவசகாயம்.  நாயர் பிரிவில் பிறந்த இவர், கிறிஸ்துவ மதம் மாறினார்.  கடவுள் முன்னிலையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை நிலைநாட்ட பெரிதும் விரும்பினார். அப்போது திருவாங்கூர் அரசரின் கட்டளை படி உயர் வகுப்பினர் மதம் மாற கூடாது. ஆனால் இவர் மீறி மதம் மாறியதால் அரசின் தண்டனைக்கு உள்ளானார் . அப்போது ஏற்பட்ட சமய வேறுபாடுகள் காரணமாக மன்னராட்சியில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1752 ஜனவரி 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

அதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதன்படி 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வாட்டிகனில் நடைபெற்ற நிகழ்வில் அருட்சகோதரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழை பெருமைப்படுத்தினர். கத்தோலிக்க திருச்சபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இதுவே முதல்முறை.  அங்கு இருந்த திருச்சபை பாதிரியார்கள் எல்லோரும். இந்த பாடலுக்கு எழுந்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  புனிதர் பட்டம் பெறுகின்ற மறைசாட்சி தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். மேலும் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது உலக அளவில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

;