world

img

கடன்களுக்கு விரைவில் முடிவு அர்ஜெண்டினா உறுதி

சர்வதேச நிதியத்திடமிருந்து(ஐ.எம்.எப்) வாங்கிய கடனைத் திரும்பவும் செலுத்துவது குறித்த புதிய உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அர்ஜெண்டினா தெரிவித்துள்ளது.

முந்தைய வலதுசாரி அரசு தேவையற்ற கடனைப் பெற்றுக் கொண்டதோடு, கடன் வாங்கும்போது விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டது. இதனால் அர்ஜெண்டினா மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டது. எந்தவொரு நாடுடனும் உடன்பாடு போட்டாலும், அந்நாட்டில் சமூக நல நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு ஐ.எம்.எப். வலியுறுத்துவது வழக்கமாகும். அர்ஜெண்டினாவின் வலதுசாரி ஆட்சியாளர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

அக்கொள்கைகள் மீதான மக்களின் அதிருப்தி, மீண்டும் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தியவர்களை ஆட்சியில் அமர்த்தியது. கடந்த ஓராண்டாகவே பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் அரசுத்தரப்பும், ஐ.எம்.எப். அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர். மீண்டும் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பது, அதற்காக சமூக நலத்திட்டங்களை நிறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் போன்றவற்றை ஐ.எம்.எப். முன்வைத்தது. கடன்கள் திருப்பிச் செலுத்தப்படும், ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அர்ஜெண்டினா கூறிவிட்டது.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்து வலதுசாரி ஆட்சியாளர்கள் 4 ஆயிரத்து 500 கோடி டாலர் கடனை வாங்கியிருந்தனர். இதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பதில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு விட்டதாகவும், கடன் காலத்தை மாற்றி அமைக்க ஐ.எம்.எப் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அர்ஜெண்டினாவின் செய்தித் தொடர்பாளர் காப்ரியலா செருட்டி தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப். அமைப்புடன் போடவிருக்கும் உடன்பாடு அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படும். எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் இது நடைமுறைக்கு வரும். உடன்பாட்டில் உள்ள அடிப்படையான அம்சங்களை நாடாளுமன்றத்தில் விளக்கி ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் உரையாற்றுவார். எந்தவித ரகசியமான அம்சங்களும் உடன்பாட்டில் இடம் பெறாது என்கிறார் காப்ரியலா. 

;