tamilnadu

img

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.... விருதுநகர்  ஆட்சியரிடம் சிபிஎம், சிஐடியு புகார்

விருதுநகர்:
மத்திய அரசு அறிவித்த ஜன்தன் வங்கி கணக்கில் பணம் இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. இதேபோல், மாநில அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவித்த தொகை நான்கில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே வந்துள்ளது. எனவே, அனைவருக்கும் அறிவித்தபடி விரைவில் நிவராணத் தொகை மற்றும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .  

அதில் கூறியதாவது : நாடு முழுவதும் கொரோனோ பாதிப்பையொட்டி முதலில் அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு முடிவுற்ற நிலையில், மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது.  விருதுநகர்  மாவட்டத்தில்   11 பேருக்கு மட்டும் கொரோனோ பாதிப்பு இருந்த நிலையில்  மேலும் 6 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இராஜபாளையம் நகரத்திலும், அருப்புக்கோட்டை நகரத்திலும் தடுப்பு ஏற்படுத்தியது வரவேற்கதக்கது. அதேவேளையில் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு . வார்டு அல்லது தெரு அளவில் நகராட்சி அலுவலர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சமூக பாதுகாப்பு குழுக்களை அமைத்து இவர்கள் மூலம் உணவு பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.   மேலும் ஊரடங்கு நீட்டித்திருக்கிற நிலையில் ஊரக மற்றும் நகர் பகுதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சம்மந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உணவு வழங்கிட உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு குறைந்த அளவே நிவாரண தொகை அறிவித்துள்ளன. எனவே ரேசன் கடைகள் மூலம் மீண்டும் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். முதல் கட்டமாக அறிவித்த ரேசன் பொருட்கள் பெரும்பாலும் வழங்கபட்ட போதிலும் பல கடைகளில் அரிசி, பருப்பு ஆகிய பொருட்கள் தரமற்றதாக விநியோகிக்கபட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

கட்டுமானம் மற்றும் முறைசாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்களில் 8800 பேருக்கு மட்டுமே முதல்கட்டமாக  ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வங்கி கணக்குகளில் அனுப்ப பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்களுக்கு நிதி ஏதும் இதுவரை அனுப்பவில்லை. மேலும் இரண்டாவது முறையாக கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து வகையான  அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் ரூ.1000 மற்றும் ரேசன் பொருட்கள் அறிவித்துள்ளது.

எனவே, ஒரிரு தினங்களில் அறிவிக்கபட்டுள்ள மேற்கண்ட தொகைகளை அனைவருக்கும் கிடைத்திட துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். கட்டுமானம், முறைசாரா ஓட்டுனர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு முதலில் அறிவித்த ரேசன் பொருட்கள் விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  பி.எப் பிடித்தம் செய்துள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பி.எப். பிடித்தம் இல்லாத தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவி தொகை கிடைக்கவும், உதவி தொகையினை ரூ.5000/- மாக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  மத்திய அரசு அறிவித்துள்ள ஜன்தன் வங்கிகணக்குகளில் 3 மாதங்களுக்கு ரூ.500/- வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் இன்னும் முதல் மாதத்திற்கான தொகை கூட பல வங்கி கணக்குகளில் வரவாகவில்லை. இதிலும் தாங்கள் தலையீடு செய்து கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் ஆகியோர் நேரில் வழங்கினார்.

சிஐடியு  மனு
மாநிலஅரசு அறிவித்தபடி கட்டுமானம் உள்ளிட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்களை காலதாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்திய தொழிற் சங்க மையம் ( சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு வின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பி.என்.தேவா மனுவில் கூறியதாவது :   கொரோனா நோய்தொற்றால்   தமிழகத்தில் இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,  நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஊரடங்கினால் பல லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டாசு - தீப்பெட்டி, அச்சு, பஞ்சாலை, விசைத்தறி, கைத்தறி, தையல், சாலையோர வியாபாரம் ஓட்டுனர்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. எனவே இந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம்  வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஊரடங்கு காலம் முடியும்வரை ரேசன் மூலம் இலவச உணவுப்பொருள்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் எங்கள் சங்கம் உள்பட பல தரப்பும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரச ஒவ்வொரு தொழிலாளிக்கும் நலவாரியம் மூலம் முதல் கட்டமாக ரூ 1,000 ம் தற்போது  இரண்டாம் கட்டமாக ஆயிரம் ரூபாயும்,  அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால், முதல்கட்டமாக அறிவித்த பணமே  இன்னும் முழுமையாக போய்ச் சேரவில்லை.   உணவு பொருள்கள் தற்போது வரை வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரித்ததில் நலவாரிய அலுவலத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை எனவும்,  வங்கிகளுக்கு உடனே பணம் அனுப்புவதற்கான வசதியும் இல்லை என  கூறப்படுகிறது.      எனவே, காலதாமதமின்றி உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு - தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால்,  இதுவரை எந்த தொழிலாளர்களுக்கும் பணம் அனுப்பப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் மேற்கண்ட தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசு அறிவித்த நிவாரணம் உடனே கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புகார் மனுவை சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) அளித்தனர்.

;