tamilnadu

img

“ரேசன் அரிசி” ரகத்தை எங்கே கண்டுபிடித்தது தமிழக அரசு? துர்நாற்றம் தாங்கமுடியாமல் மக்கள் ஓட்டம்

மதுரை, ஏப்.12- பொதுவாக தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லையென்பது உணவுத்துறை அமைச்சருக்கும் தெரியும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக ரேஷன் அரிசி என்றொரு ரகம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. எவ்வளவு நாட்களில் விளையும். எவ்வளவு மெட்ரிக்டன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை இரு அமைச்சர்களும் தெளிவுபடுத்த வேண்டும்.

கொரோனா தாக்கத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக உள்ளதாக கடும் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியுள்ளன. ரேஷன் அரிசி மோசமாக உள்ளதை மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் கவனத்திற்கும் மக்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் நடவடிக்கை தான் இல்லை. அரிசி என்றால் “கமகமவென” மணக்கும். ஆனால், ரேஷன் அரிசி மூட்டை இருக்கும் பக்கமே மக்கள் செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. ரேஷனில் அரிசி விநியோகிக்கும் நாளன்று மட்டும் விநியோகிப்பாளரும், அளவையரும் “முகக்கவசம்” அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் வழங்கப்படும் அரிசி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு  உள்ளது. ஒரு மூட்டைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கற்களை சேர்ப்பது தான் ரேஷன் அரிசிக்கு பெருமை சேர்க்கும் போலும். கற்களுக்கும் பஞ்சமில்லை. துர்நாற்றத்திற்கும் எல்லையில்லை. மக்கள் அரிசி வேண்டாமென தலைதெறிக்க ஓடுகின்றனர். கொரோனா தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் அவர்களை “பழி” வாங்குவது நியாயமல்ல. மதுரை மாவட்டத்தில் தான் கூட்டுறவுத்துறை அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சரும் உள்ளனர். தங்களது மாவட்டத்தில் இப்படியொரு சூழல் நிலவலமா என்பதை யோசித்து அனைத்து கடைகளுக்கும் சப்ளை செய்யப்பட்டுள்ள “புதிய ரக ரேஷன் அரிசி”யை திரும்பப்பெற்று தரமான அரிசி வழங்கவேண்டும். கொரோனா ஓய்ந்தாலும் ரேஷன் அரிசியால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகிவிடக்கூடாது.

;