tamilnadu

img

சென்னை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு: சர்ச்சைக்குரிய பாஜக ஆதரவாளர் ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 6- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கு சர்ச்சைக்குரிய ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது காலியாக உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனம் சம்பந்தமான தேடுதல் குழுத் தலைவராக புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நியமனம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, சர்ச்சைக்குரியது. எனவே அது திருத்தி அமைக்கப்பட வேண்டும்.  இதுகாறும் உள்ள அரசியலமைப்பு சட்ட நடைமுறைப்படி, ஆளுநர் மாநில அரசாங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையில் மாநில அமைச்சரவை பரிந்துரைக்கிற நபர்களைக் கொண்டு தேடுதல் கமிட்டி அமைப்பார். ஆளுநர் என்பவர் மத்திய அரசினால் நியமனம் செய்யப்படுபவர். தமிழக அரசின் பரிந்துரையோ, ஒப்புதலோ இன்றி பல்கலைக்கழக வேந்தராகிய ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட சட்டம் இடம் கொடுக்கவில்லை. பாஜக மிரட்டுதலுக்கு அடங்கிப் போகிற அரசாக செயலபடும் அஇஅதிமுக அரசு அனுமதித்துத்தான் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற விளக்கம் தேவைப்படுகிறது.

இரண்டாவதாக, தேடுதல் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் குமார் சர்ச்சைக்குரியவர். 2020  ஜனவரி 5 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், போலீஸ், ரவுடிகள், போராடுகிற மாணவர் தலைவர்கள் மீது தொடுத்த தாக்குதலுக்கு பின்புலமாக நின்றவர் ஜெகதீஷ் குமார் ஆவர். பாஜகவின் கையாளாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மாண வர்கள் மத்தியிலிருந்தும், அரசியல் கட்சிகளிடமிருந்தும் எழுந்துள்ளது. அப்பேற்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக ஆதரவாளர் ஒருவரை தேடுதல் கமிட்டியின் தலைவராக நியமிப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு, மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அரசின் ஆட்சி அதிகாரம், கல்விக் கூடம், நீதி பரிபாலனம் உட்பட அனைத்து அமைப்புகளிலும் பாஜக ஆதரவாளர்களை நியமித்துக்  கொள்ள அஇஅதிமுக அரசு துணை போவது ஏன் என்ற சந்தேகம் வலு வாக எழுந்துள்ளது. ஏற்கனவே தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்த ரின் நியமனத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நூற்றாண்டு கால வரலாறும் சிறப்பும்மிக்க சென்னை பல்கலைக் கழகத்துக்கு மிகச்சிறந்த அர்ப்பணிப்பு  மனப்பான்மை கொண்ட கல்வி யாளர் துணைவேந்தராக நியமிக்கப் பட வேண்டும். அத்தகைய கல்வி யாளர்கள் பலரும் தமிழகத்தில் உண்டு. அதுபோன்ற ஒருவரை தேர்ந்தெடுக்கும் பணிக்கு சர்ச்சைக்குரிய பாஜக ஆதரவாளரை பொறுப்பாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே, கல்வி அமைப்பின் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, அனைத்தும் காவிமயமாகும் போக்கினை தடுத்து நிறுத்துவதன் ஒரு பகுதியாக பேராசிரியர் ஜெகதீஷ் குமார் நியமனத்தை ரத்து செய்து, புதிய தேடுதல் குழுவை நியமிக்க முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

;