tamilnadu

img

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மனுத்தாக்கல்

சென்னை,ஜூன் 16- மருத்துவப் படிப்பில் அகில இந்திய  தொகுப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 16 செவ்வாயன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.   

திமுக உள்ளிட்ட கட்சிகளின் வழக்குகளு டன் சிபிஎம் மனுவையும் சேர்த்து விசாரித்த நீதிபதி, அனைத்து வழக்கு களையும் திங்கட்கிழமை விசாரிப்பதாகவும் அரசுத் தரப்பில் இதற்கான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்பில் உள்ள இடங்களில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களில் உள்ள மொத்த இடங்களில் இளங்கலை படிப்புக்கு 15 சதவீத இடங்களையும், முது கலை படிப்புக்கு 50 சதவீத இடங்களையும் மாநில அரசுகள் ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு ஒதுக்கப்படும் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பட்டியல் இனத்தவருக்கு 15 சதவீத இடங்களும், பழங்குடி மக்களுக்கு 7.5 சதவீத இடங்களும்,  சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மட்டும் அமல்படுத்தப்படுகிறது.  

கடந்த பல ஆண்டுகளாக, இந்த அகில இந்திய தொகுப்புக்கான மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட  ஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை.  இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரும் அநீதிக்கு உள்ளாக்கப் பட்டனர்.  அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மற்றவர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு  ஏற்பட்டது.  இந்த அநீதியை சுட்டிக்காட்டி,  அகில இந்திய தொகுப்புக் கான மருத்துவ இடங்களில் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  மாண வர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம்,  சிபிஐ, மதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகள் மனுதாக்கல் செய்தன.   இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள்,  இடஒதுக்கீடு என்பது அடிப் படை உரிமை இல்லை. ஆகவே, மனுக் களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்திய அடிப்படையில் மனுக்கள் திரும்பப் பெறப் பட்டு,  சென்னை உயர் நீதிமன்றத்தில் பல  கட்சிகளின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப் படும் இடங்கள், மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் உள்ள இடங்களே அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பினை மட்டுமே மத்திய சுகாதாரத் துறையும்,  இந்திய மருத்துவக் கவுன்சிலும் செய்கின்றன.  ஆனால், இந்த மாணவர்கள் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதும்,  அவர் களுடைய அனைத்து மருத்துவப்படிப்புக் கான தேவைகளையும் தமிழக அரசு நிறை வேற்றி வருகிறது. எனவே, ஒதுக்கப்படும் அகில இந்திய தொகுப்புக்கான இடங் களில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் 1994 இன்படி  இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டுமென கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை செவ்வாயன்று விசா ரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து மனுக்களையும் திங்கள்கிழமை விசாரிப்பதாகவும், அதற்கு மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து ள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி வாதாடியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவப் படிப்பு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு கோரி திமுக, சிபிஎம், அதிமுக, திக, பாமக ஆகிய கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கள் அனைத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு ஜூன் 16 செவ்வாயன்று  விசாரணைக்கு வந்தன.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், மாநில அரசுகள் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கும் இடங்களுக்கு மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற விதிகள் அனுமதித்த போதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இடங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் போது, மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் கூறுகையில், அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்பது, சமூக நீதி மறுக்கப்பட்டதாகும். மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ளதாகவும் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு சட்டப்படி, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், மருத்துவப்படிப்பிற்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வில்லை என சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள்  பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,  மருத்துவ மேற்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க மனு தாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை யை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
 

;