tamilnadu

img

கொரேனா தாக்கத்திலும் பாதுகாப்பான நாடுகள் எவை.... இந்தியாவிற்கு இடமில்லை

லண்டன்: 
கொரோனா பாதிப்புக்கு உலகமெங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,47,337-ஐ தாண்டிவிட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் இருந்தாலும் உலகில் பாதுகாப்பான நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிற்கு இடமில்லாமல் போய்விட்டது.

கொரோனா தாக்கத்தை மிகவும் சிறப்பாக கையாண்டு மக்களை பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான நாடுகளாகக் கருதப்படுகிறது. ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது டீப் நாலெட்ஜ் குரூப் (Deep Knowledge Group) கூட்டு மூலதனக் குழுமான இந் நிறுவனம் மருந்துகளை பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்நிறுவனம் தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன், கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், அவசர சிகிச்சை தயார்நிலை ஆகியவற்றை அடிப்படைக் காரணிகளாக் கொண்டு எது பாதுகாப்பான நாடு என்பதை ஆய்வு செய்துள்ளது. ஆய்வு முடிவை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடத்தை இஸ்ரேல் பிடித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 12,855. ஆனால் பாதிப்பை  மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக டிகேஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல், இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்க நிர்வாக செயல்திறனுக்காக அதிக மதிப்பெண்கள் பெற்றது மட்டுமின்றி மொத்த மதிப்பெண்களாக 632.32 ஐப் பெற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது. அவசர சிகிச்சை தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் கண்டறிதலுக்காக ஜெர்மனி இஸ்ரேலை விட அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தற்போது  ஜெர்மனி ஐரோப்பாவில் சிறந்த பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  நெருக்கடி நிர்வாகத்தைப் பொறுத்தவரை உலகளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாகும் என்று டி.கே.ஜியின் நிறுவனரும் தரவு நிபுணருமான டிமிட்ரி காமின்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:- ஆரம்பத்தில் ஜெர்மனியில் அதிகளவில் நோய்த்தொற்று பரவியது.  அதை திறமையாக சமாளித்ததோடு பிற நாடுகளின் நிலையை எட்டாமல் நோய் மேலும் பரவாமல் வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

மற்றொரு தரவு நிபுணர்குழு உறுப்பினரான அனஸ்டாசியா லாட்டர்பாக், "அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜெர்மனி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ள அவர்,  தரவுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார் மூன்றாவது இடத்தை தென் கொரியாவும், நான்காவது இடத்தை ஆஸ்திரேலியாவும் ஐந்தாவது இடத்தை சீனாவும் பெற்றுள்ளன.

பாதுகாப்பான பத்து நாடுகள் பட்டியல்
1. இஸ்ரேல்
2. ஜெர்மனி
3. தென் கொரியா
4. ஆஸ்திரேலியா
5. சீனா
6.நியூசிலாந்து
7. தைவான்
8. சிங்கப்பூர்
9. ஜப்பான்
10. ஹாங்காங்

நன்றி: டெய்லி எக்ஸ்பிரஸ், லண்டன்

;