tamilnadu

img

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
 ஸ்டெர்லைட்  துப்பாக்கிச் சூடு  வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு  சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென தூத்துக்குடி மக்கள் பேரணி நடத்தினர். பேரணியாகச் சென்றவர்கள் மீது முன்னறிவிப்பின்றி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்தது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக 222 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்,சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 160 தொழில்நுட்பம்தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டதில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைத்துள்ளது. 300 பேரிடம்விசாரணை நடத்தப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப் பட்டுள்ளது.  துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள்,அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே இந்த 
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென சிபிஐ தரப்பில்” என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் திங்களன்று வழக்கு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ண ராமசாமிஅமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவையென்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள்,  வழக்கின் விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

;