tamilnadu

img

மதுரை... தே.கல்லுப்பட்டி, சேடபட்டி பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் பாதிப்பு....

மதுரை:
மதுரை மாவட்டத்திலுள்ள தே.கல்லுப் பட்டி, சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளில் 30ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. தொடர் மழை, சாரல் மழையால் மக்காச்சோளம் முளைத்து வீணாகிவிட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர். வன்னிவேலம்பட்டி விவசாயி முருகன்கூறுகையில், “ஆறு ஏக்கரில் மக்கச்சோளம்பயிரிட்டிருந்தேன். மொத்தம் உழவுக்கு ரூ.15,000, விதை ரூ.13,200, உரம் ரூ.6,600, களையெடுக்க ரூ.7,200, படைப்புழு தாக்குதலுக்கு மட்டும் மருந்து தெளிக்கக் கூலி உட்பட ரூ.1000 என மொத்தம் ரூ.48 ஆயிரம்வரை செலவழித்துள்ளேன்.

படைப்புழு தாக்குதல் 
இந்த நிலையில் மக்காச்சோளத்தை படைப்புழு தாக்கியுள்ளது. வேளாண் துறை அதிகாரிகளோ, “ஐந்தாண்டுகளுக்கு இந்தத் தாக்குதல் இருக்கத்தான் செய்யும்” என்கிறார்கள். படைப்புழு தாக்குதலில் இருந்து பயிரை காப்பாற்ற முயற்சித்தேன். பருவமழை பருவம் தப்பி பெய்ததால் மொத்தப் பயிரும் நாசமாகிவிட்டது. ஏக்கருக்கு 20 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். இந்தாண்டு இரண்டு குவிண்டால் கூட கிடைக்கவில்லை.

விலையும் இல்லை 
கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.1,800 முதல் ரூ.2,050 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே நஷ்டம் தான். கடந்தாண் டோடு இந்த ஆண்டை ஒப்பிட்டால் குவிண்டால் ரூ.1,300- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இது பெருத்த நஷ்டமாகும்.கூட்டுறவு சங்கம், தனியாரிடம் கடன் வாங்கி செலவழித்துள்ளேன். வாங்கியகடனை திருப்பி செலுத்தமுடியாத நிலையில்அடுத்த கட்ட விவசாயத்திற்கு என்ன செய்வதென தெரியாமல் என்னைப் போல் ஏராளமான விவசாயிகள் கண்ணீர்வடித்து வருகின்றனர் என்றார். இதே கருத்தை வாசுமலை, முருகன், வேலு உள்ளிட்ட பல்வேறுவிவசாயிகள் தெரிவித்தனர். ஒரு சில விவசாயிகள் மூன்று ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் வரை செலவழித்துள்ளனர்.மக்காச்சோள பாதிப்பு குறித்து தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் கூறுகையில், மக்காச் சோளத்திற்கு 2018-2019 ஆம் ஆண்டிற்கான இன்சூரன்ஸ் தொகையே சேடபட்டி ஒன்றியம் விட்டல்பட்டி பிர்கா பகுதிகளுக்கு பாக்கி உள்ளது. இந்த ஆண்டு பருவ
மழை காலத்தில் பெய்யாததால் விளைச்சல் குறைந்துவிட்டது. கட்டுப்பாடியான விலையும் கிடைக்கவில்லை என்றார். 

இழப்பீடு மத்திய அரசு கூறுவதென்ன?
மகசூல் விவரம் பெறப்பட்ட 21 நாட்களுக்குள் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டுமென மத்திய அரசு விதிமுறைகளை வகுத்துள் ளது.காப்பீடு நிறுவனங்களால் பயிர் காப்பீடுஇழப்பீட்டுத் தொகையை வழங்க காலதாமதம் செய்தால் சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.விரைவாக பயிர் இழப்பீட்டுத் தொகைவிவசாயிகளுக்கு சென்றடைய வாரந்தோறும் சம்பந்தப்பட்ட பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள், புள்ளியியல்துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாநில அளவிலான வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இதெல்லாம் முறையாக நடைபெறுகிறதா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 21 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறதா? என்ற விவசாயிகளின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது மதுரை மாவட்ட நிர்வாகம்.

மதுரை மாவட்டத்தில் 46,305 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மக்காச் சோளம், ஆண்டு தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தேனிமாவட்டங்களில் அதிக அளவில் மக்காச் சோளம் பயிரிடப்படுகிறது.

பெ.சண்முகம் வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மக்காச்சோள பாதிப்புகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். நஞ்சையில் மக்காச்சோளம் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், புஞ்சையில் சோளம் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தவிர காப்பீட்டு நிறுவனங்கள் நூறு சதவீத பாதிப்பிற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென்றார்.

பா.ரணதிவே

;