tamilnadu

img

அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவது தேசவிரோதம்.... பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு கண்டனம்....

மதுரை:
சிறப்பான சேவையாற்றி வரும் அரசுபொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பது தேசவிரோதம் என்று மதுரை மண்டல பொதுஇன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு கடும்கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரை மண்டல (மதுரை, சிவகங்கை,இராமநாதபுரம்) 33-வது மாநாடு பிப்ரவரி 13 சனிக்கிழமையன்று மதுரையில் நடைபெற்றது.மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.பாலு தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் மதுரைசிவகங்கை,இராமநாதபுரம் ஆகியபகுதிகளிலிருந்து  பங்கேற்றனர். சங்கத் தின் மாவட்ட இணைச்செயலாளர்  எம்.அண்ணாதுரை வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டைத் துவக்கி வைத்து மண்டல இணைச்செயலாளர் பி.ராஜமகேந்திரன் உரையாற்றினார். மத்தியபட்ஜெட்டில் தேசத்தின் பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் முடிவு  இந்திய நாட்டின் பொருளாதார இறையாண்மைக்கு ஆபத்தானது.  எல்ஐசி நிறுவனப் பங்கு விற்பனை முடிவு பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பது போல் உள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக இன்சூரன்ஸ் ஊழியர்கள் உறுதியுடன் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மாவட்டச் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தார்.  மாநாட்டை வாழ்த்தி மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ்.தணிகைராஜ் உரையாற்றினார். மண்டலப் பொதுச் செயலாளர்  வெ. ரமேஷ் நிறைவுரையாற்றினார். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக இன்சூரன்ஸ் ஊழியர்கள் எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட ஒற்றுமையை கட்ட வேண்டியது மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மாநாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும்,  எல்ஐசி பங்கு விற்பனை முயற்சிகளைக் கைவிட வலியுறுத்தியும், நான்கு அரசு பொதுஇன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்திடவும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன தனியார்மய முயற்சிகளைக் கைவிடக் கோரியும், அரசு வங்கிதனியார்மயத்தைக் கண்டித்தும், தொழிலாளர் நலச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும்,பொதுத்துறை தனியார்மயமாக்கலை திரும்பப் பெறக் கோரியும்,இன்சூரன்ஸ் துறையில் புதிய ஊழியர் நியமனம் கோரியும், தேசிய பென்சன்திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும்,பொது இன்சூரன்ஸ் அலுவலக மூடலைக் கண்டித்தும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட தேவையான சாலை வசதி கோரியும், எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை விரைந்து துவக்கிடக் கோரியும், மதுரை -போடி அகல ரயில் பணிகளை விரைந்து முடித்திடக் கோரியும், நகரில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடக் கோரியும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் 
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். தலைவராக எம். அண்ணாதுரை,  செயலாளராக டி.பாண்டியராஜன் , பொருளாளராக டி.தயாமணி, துணைத்தலைவர்களாக சந்திரமௌலி, கணேசன், அரங்கராஜன்,  இணைச்செயலாளர்களாக டி ராஜன், சுமதி நடேஷ், கணேசன், கமிட்டிஉறுப்பினர்களாக ஜி.சந்திரசேகரன், கீதா, சாத்தையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டின் நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் கே தர்மராஜ் நன்றி கூறினார்.

;